வேள்விப் படலம் - 428

bookmark

குசநாபன் மகளிரைப் பிரமதத்தனுக்கு மணஞ்செய்வித்தல்

428.

‘சமிரணன் அகன்றதன்பின்.
   தையலார். தவழ்ந்து சென்றே
அமிர்து உகு குதலை மாழ்கி.
   அரசன் மாட்டு உரைப்ப. அன்னான்.
நிமிர்குழல் மடவார்த் தேற்றி.
   நிறை தவன் சூளி நல்கும்
திமிர் அறு பிரமதத்தற்கு
   அளித்தனன். திரு அனாரை.*
 
சமிரணன்  அகன்றதன் பின்-  வாயுதேவன் அங்கிருந்து  சென்று
பின்பு; தையலார்  தவழ்ந்து  சென்றே  -  அப்பெண்கள்  நிலத்தில்
தவழ்ந்தே சென்று; அரசன்  மாட்டு  மாழ்கி  அமிர்து உகு குதலை
உரைப்ப -  தமது தந்தையான மன்னனிடம். அமுதம் போன்ற மழலை
மொழிகளால்   நிகழ்ந்த   செய்தியைக்   கூறி   மயங்க;  அன்னான்
நிமிர்குழல் மடவார்த்  தேற்றி  - அரசன் வளர்ந்த கூந்தலையுடைய
அவ்விளம் பெண்களைத்  தேறுதல் செய்து; நிறைதவன் சூளி நல்கும்
திமிர்  அறு  பிரமதத்தற்கு  -  நிறைந்த  தவத்தை  உடைய  சூளி
என்பவனது   மகனாகிய   மயக்கமற்ற பிரமதத்தன் என்பவனுக்கு; திரு
அனாரை  அளித்தனன்  -  திருமகளுக்கு  ஒப்பான அப்பெண்களை
மணம் செய்து கொடுத்தான்.

சமிரணன்:  காற்றுத்தேவன். தையலார்: அழகுடைய பெண்கள். உகு
குதலை:   வினைத்தொகை.  குதலை: உருத்தெரியாச் சொற்கள். மாழ்கி:
மயங்கி.  ‘அரசன்மாட்டு’ இதில் மாட்டு என்பது ?ஏழனுருபாம். மடவார்:
இளம்   பெண்கள் தேற்றி: தேறுதல் செய்து (தேறு: பகுதி). நிறைதவன்:
வினைத்தொகை.  திமிர்: அகங்காரம் (மயக்கம்) இருள். திமிரம் என்பது
கடை   குறைந்தது.    பிரமதத்தன்:   பிரமனால்  கொடுக்கப்பட்டவன்
என்பது  பொருள்.  ‘’காற்றுக் கடவுளால் இடுப்பொடிக்கப்பட்ட அந்தப்
பெண்கள்   நூற்றுவரும்   தந்தையிடம்  சென்று முறையிட - ஆறுதல்
கூறித்தேற்றிப்பின்   அவர்களைப்   பிரமதத்தன்  என்பனுக்கு  மணம்
செய்து தந்தான்’ என்பது பொருள்.                            9