கர்மமும், லோகமும்
கர்மமும், லோகமும் இரண்யகர்ப்பன் உலகில் தோன்றிய இருக்கக்கூடிய மனிதர்களின் அதாவது அவரவர்களின் குணத்திற்கு தகுந்த விதத்தில் அதாவது வேதம் பயின்றவர்கள், போர்க்களத்தில் நின்று போர் புரியக்கூடியவர்கள் மற்றும் மக்களை வழிநடத்தி செல்லக்கூடியவர்கள், வியாபார பணிகளை மேற்கொள்ளக்கூடியவர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யக்கூடியவர்கள் என நான்கு விதமான ஆசிரமங்களை உருவாக்கி அவர்களுக்கு உரிய மரியாதைகளையும் ஏற்படுத்தினார். அவரவர்களின் குணங்களுக்கு தகுந்த மாதிரி புண்ணிய லோகங்களையும் உருவாக்கினார்.பூமியில் வாழும் பொழுது நன்முறையில் வேதம் பயின்று பிரம்மம் உணர்ந்தவர்களுக்கு பிரஜாபத்திய லோகத்தையும்..போர்க்களத்தில் எதிரிகளிடத்தில் புறமுதுகு காட்டாத வீரமான வீரர்களுக்கு இந்திரலோகத்தையும்.. பல்வேறு விதமான கண்டங்களுக்கு சென்று வியாபாரம் செய்து எந்தவிதமான பாதிப்புகளையும், உயிரிகளையும் பாதிக்காத விதத்தில் பிழைக்கக்கூடிய வியாபாரிகளுக்கு மருந்துகளின் லோகத்தையும்.. போர்க்களத்தில் தலைவருக்கும், சேனாதிபதிக்கு உதவியாக இருக்கக்கூடிய படைவீரர்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் தேவையான பணிவிடைகளை செய்து அதன்மூலம் ஆதாயம் அடையக்கூடிய மக்களுக்கு கந்தர்வ லோகத்தையும்.. குரு இடத்தில் மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டு அவர்களுக்கு தேவையான பணிவிடைகளை செய்வதில் ஊக்கம் நிறைந்து இருக்கக்கூடிய பிரம்மச்சாரிகளுக்கு திவ்ய லோகத்தையும்.. வானப்பிரஸ்தருக்கு அதாவது திருமணம் நடைபெற்று குழந்தை பிறந்த பின்பு இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாமல் சன்னியாச வாழ்க்கையின்மீது ஈடுபாடு கொண்டு குழந்தைகளை தன் மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு ஆன்மிக வழிகளில் செல்லக்கூடியவர்களுக்கு (வானப்பிரஸ்தம் என்றால் வனம் புகுதல் என்று பொருள்) சப்தரிஷி லோகத்தையும்.. திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு இல்லற இன்பத்துடன் வாழக்கூடிய கிரகஸ்தருக்கு பிரஜாபத்திய லோகத்தையும்.. சந்நியாச வாழ்க்கை வாழ்ந்து மடிகின்ற சந்நியாசிகளுக்கு பிரம்மலோகத்தையும் தோற்றுவிக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து நிறைவேற்றினார்.இந்த லோகங்கள் யாவும் அவரவர்கள் செய்கின்ற கர்மவினைகளினால் ஏற்படக்கூடிய புண்ணிய லோகங்கள் ஆகும். அவரவர்கள் செய்கின்ற கர்மங்கள் மட்டுமே அவர்கள் மரணம் அடைந்த பின்பு வாழக்கூடிய லோகத்தையும் நிர்ணயம் செய்யக்கூடிய வகையில் படைத்திருந்தார். பூமியில் வாழும் பொழுது மனிதர்கள் நிறைவேற்றுகின்ற கர்மவினைகளின் பயன்களால் மட்டுமே அடுத்தடுத்த பிறவிகளில் பிறப்பு எடுக்கக்கூடிய குலங்களும், குணங்களின் தன்மைகளும் அமைகின்றன. அதன் அடிப்படையிலேயே அவர்களுக்கு உண்டான லோகமும் உருவாகின்றது. இனி ஞானிகளுக்கு கிடைக்கக்கூடிய லோகங்களை பற்றி உமக்கு எடுத்துரைக்கின்றேன் நிதானமாக கேட்பாயாக. தியானங்கள் மேற்கொள்ளக்கூடியவர்களுக்கு லோகங்கள் : ஆத்ம தியானங்களை மேற்கொள்ளக்கூடிய யோகீஸ்வரர்களுக்கு அமிர்த ஸ்தானம் உண்டாகும். அமிர்த ஸ்தானம் என்பது துருவலோகத்திற்கு மேலே கங்கை உருவாகக்கூடிய இடமாகும்.தினந்தோறும் யோகப் பயிற்சிகளை மேற்கொண்டு பிரம்ம தியானத்தை செய்து கொண்டிருக்கக்கூடிய மகாத்மாகளுக்கெல்லாம் நித்திய சூரிகளாலே (சூரி - வீரம் நிறைந்தவர்கள், புலவர்கள்) உருவாக்கப்பட்ட எப்பொழுதும் மாற்றமடையாமல் நிலையாக இருக்கக்கூடிய பரமபதம் உண்டாகும்.துவாதசாக்ஷர மந்திரத்தை (துவாதசாக்ஷர மந்திரம் என்பது எப்பொழுதும், என்றைக்கும் நீங்காத செல்வத்தை அளிக்கக்கூடிய லட்சுமியின் மந்திரமாகும்) வாழ்நாளில் ஜெபிக்கின்ற மகான்களுக்கு என்றைக்கும், எப்பொழுதும் திரும்பி வராமல் இருக்கக்கூடிய பரமானந்தத்தை அனுபவிக்கின்றார்கள்.இவ்விதமாக உயிரினங்கள் தோன்றிய அந்த உயிரினங்கள் செய்த கர்மவினைகளுக்கு உண்டான லோகங்களையும் எடுத்து கூறி கொண்டே இருக்க மைத்ரேய முனிவருக்கு அவருடைய மனதில் மேலும் சந்தேகங்கள் உருவாக தொடங்கின.அதாவது உலகில் வாழ்கின்ற பொழுது மக்கள் செய்த நல்வினைகளுக்கு ஏற்ப மட்டுமே லோகங்கள் யாவும் படைக்கப்பட்டு இருக்கின்றனவா? என்பது அவரது மனதில் தோன்றிய ஐயம் ஆகும்.தன்னுடைய மனதில் தோன்றிய ஐயத்தை தன்னுடைய குருவான பராசர முனிவரிடம் வினாவ துவங்கினார். குருவே! உலகில் தோன்றி இருக்கக்கூடிய மனிதர்கள் செய்கின்ற நல்வினைகளுக்கு மட்டும்தான் லோகங்கள் யாவும் படைக்கப்பட்டு இருக்கின்றனவா? ஒருவேளை தோன்றியிருக்கக்கூடிய உயிரினங்கள் ஏதாவது தீவினைகள் செய்தால் அதற்கு எந்தவிதமான லோகங்களும், தண்டனைகளும் இல்லையா? என்று வினாவினார்.பராசர முனிவரும் தனது மாணவன் எழுப்பிய வினாவினை கேட்டதும் புன்னகை பூத்த வண்ணமாக பொறுமையுடன் எதையும் செய்தால் அதற்குண்டான பலன்கள் எவ்விதம் கிடைக்குமோ, அதற்கு தகுந்தாற்போல் அதே கோபத்துடன் எந்தவொரு பணியை செய்தால் அதற்குண்டான விளைவுகளும் கிடைக்கும். ஆகவே, இறைவன் எப்பொழுதும், சமநிலையுடன் செயல்படக்கூடியவர். நல்வினைகள் இயற்றியவர்களுக்கு ஏற்ப லோகங்களை உருவாக்கியவர், தீவினைகளை இயற்றியவர்களுக்கும் தண்டனையுடன் நிறைந்து இருக்கக்கூடிய லோகங்களையும் உருவாக்கி இருக்கின்றார்.துர்ஆத்மாக்கள் சென்றடையும் லோகம் உலகில் தோன்றியிருக்கக்கூடிய உயிரினங்கள், மற்ற உயிரினங்களை பாதிக்கும் வகையில் ஏதாவது விளைவுகளையோ, வினைகளையோ இயற்றினால் இயற்கை சக்கரம் பாதிக்கப்படுவதுடன் அந்த உயிரினத்திற்கும் செய்த வினைக்குமான தொடர்பும் அதிகரிக்கின்றது. அதன் விளைவாக அவர்களின் வாழ்க்கையில் செய்த புண்ணிய பலனாது குறைய துவங்கும். புண்ணிய பலன்கள் இல்லாத தீய செயல்களை செய்யக்கூடிய கயவர்கள் சென்றடையக்கூடிய லோகங்களை பற்றியும் எடுத்துரைக்கின்றேன் கேட்பாயாக!!தாமிஸ்ரம்அந்ததாமிஸ்ரம்ரௌரவம்மகா ரௌரவம்அசிபத்திரம்கால சூத்திரம் அவீசி மத்து என்ற பலவிதமான தண்டனைகள் நிறைந்த கொடூரமான கொடிய நரகங்கள் படைக்கப்பட்ட இருக்கின்றன. எவரெல்லாம் இறைவன் படைத்த உலகில் நற்காரியங்களை செய்வதை விடுத்து மற்றவர்களுக்கு கெடுதலையும், துன்பங்களையும் இழைத்தல் மற்றும் வேதங்களையும், யாகங்களையும் நிந்தனை செய்தல் போன்ற மகாபாவங்கள் செய்கின்ற ஆத்மாக்கள் சென்றடையக்கூடிய லோகம் என்பது நரகலோகம் ஆகும்.
