வேள்விப் படலம் - 426
குசநாபற்கு நூறு பெண்கள் பிறந்தமை
426.
‘அவர்களின் குசநா பற்கே
ஐ-இருபதின்மர் அம் சொல்
துவர் இதழ்த் தெரிவை நல்லார்
தோன்றினர் வளரும் நாளில்
இவர் பொழில் - தலைக்கண் ஆயத்து
எய்துழி. வாயு எய்தி.
கவர் மனத்தினனாய். அந்தக்
கன்னியர் தம்மை நோக்கி.*
அவர்களின் குசநாபற்கே - அந்த நால்வருள் ஒருவனான
குசநாபன் என்பனுக்கு; ஐ இரு பதின்மர் அம்சொல் துவர் இதழ்
தெரிவை நல்லார் தோன்றினர் - அழகிய சொற்களும். பவளம்
போன்ற உதடும் கொண்ட பெண்கள் நூறு பேர் பிறந்தனராகி; வளரும்
நாளில் இவர் பொழில் தலைக்கண் ஆயத்து எய்துழி - வளர்ந்து
வரும் காலத்திலே இப்பெண்கள் சோலையிலே தோழியர்
கூட்டத்துடன் சென்றபோது; வாயு எய்தி - காற்றுக் கடவுளான வாயு
தேவன் அங்கே வந்து; கவர்மனத்தினனாய் அந்தக் கன்னியர்தம்மை
நோக்கி - கவரப் பெற்ற மனத்தை உடையவனாகி அந்தப்
பெண்களைப் பார்த்து.
நல்லார்: பெண்கள். ஆயம்: தோழியர் கூட்டம். ‘தலைக்கண்’
உருபின் மேல் உருபு புணர்ந்து. கவர்மனம்: வினைத் தொகை.
கன்னியர்: கன்னித்தன்மை. நீங்காத பருவத்தினர். ‘அம்சொல்’ நாணம்
தோன்றாமையும். ‘துவர் இதழ்’ செம்மை குறையாமையும் கன்னியர்
என்பதை உணர்த்தும். குசன் மக்கள் நால்வரில் ஒருவனான குசநாபன்
என்பவனுக்கு நூறு பெண்கள்; ஒரு நாள் தோழிகளுடன் சோலைக்கு
அவர்கள் செல்ல வாயுதேவன் அவர்களை நோக்கி என்பது பொருள்
இது குளகப்பாட்டு. 7
