உயிரினங்களின் படைப்புகள்

bookmark

உயிரினங்களின் படைப்புகள் குருநாதர் எடுத்து உரைத்துக் கொண்டிருந்த பொழுது மைத்ரேயரின் மனதில் மென்மேலும் சந்தேகங்கள் ஏற்பட தொடங்கின. உலகம் இவ்விதம் தோன்றியது என்று அறிந்துகொண்ட மைத்ரேயர், உலகில் எவ்விதம் உயிரினங்கள் தோன்றின? என்பதையும், அதில் ரிஷிகள், முனிவர்கள் எவ்விதம் தோன்றினார்கள்? என்பதையும் அறிந்து கொள்ள அவருடைய மனமானது ஆவலுடன் காத்து கொண்டிருந்தது. தன் மனதின் ஆவலை புரிந்து கொண்ட மைத்ரேயர், தனது குருநாதரிடம் வினாவ துவங்கினார்.குருநாதரே! ஆதிகாலத்தில் தேவதைகள், ரிஷிகள், முன்னோர்கள், அசுரர்கள், மனிதர்கள் மட்டுமின்றி மிருகங்கள், பறவைகள் அவைகளுக்கு சார்புடைய தாவரங்கள், இறைவனுக்கு அர்ப்பணிப்பு கொடுக்கக்கூடிய பூக்கள், நீர்வாழ் உயிரினங்கள் முதலியவற்றை படைப்பு கடவுளான பிரம்மதேவர் எவ்விதத்தில் படைத்தார்? பிரம்மதேவர் படைத்த உயிரினங்களுக்கு எதன் அடிப்படையில் அவைகள் சார்ந்த குணங்களையும், பாவங்களையும் அதற்கான ரூபங்களையும் நிலை நிறுத்தினார் என்பதை பற்றி விபரமாக அடியேனுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று மைத்ரேயர் வேண்டினார். மைத்ரேயரின் எண்ணங்களை அறிந்து கொண்ட பராசரர், அவரின் விருப்பத்திற்கிணங்க இந்த பிரபஞ்சத்தில் உயிரினங்களின் தோற்றங்கள் எவ்விதம் உண்டானது? என்பதையும், அதற்கான குணநலன்கள் எவ்விதம் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன? என்பதற்கான ரகசியத்தையும் எடுத்துரைக்க தொடங்குகின்றார்.ஐந்து வகையான படைப்புகள் : மைத்ரேயரே! படைப்பு கடவுளான பிரம்மதேவன் இந்த பிரபஞ்சத்தை உருவாக்க வேண்டும் என்று எண்ணி கொண்டிருக்கும் பொழுது நாராயணனால் ஏவப்பட்ட நினையாத நினைவுகளால் உற்பத்தி ஒன்று உண்டாயிற்று. அதாவது தமஸ், மோகம், மகாமோகம், தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம் என்று ஐந்து விதமான விருட்சங்களும், புதர்களும், கொடிகளும், பூண்டுகளும், புல்களும் என ஐந்து வகையான தாவர படைப்புகள் தோன்றின. தமஸ் - உடலையே ஆன்மாவாக எண்ணுதல் மோகம் - உடல் கொண்டிருக்கக்கூடிய மக்கள் முதலானவர்களுக்கு தன்னையே தலைவனாக நினைத்துக் கொள்ளுதல் மகாமோகம் - பலவிதமான சுகபோகங்களை அனுபவிக்கும் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் தாமிஸ்ரம் - தான் செய்யவேண்டிய செயலுக்கு இடையூறு நேரிடும்போது அதனால் உருவாகக்கூடிய கோபம் அந்ததாமிஸ்ரம் - தான் நினைத்ததை அறியவிடாமல் காக்க வேண்டும் என்ற கருத்தும், மன உணர்வும் இவ்விதமாக தோன்றிய இந்த தாமச படைப்பானது நில உலகில் இருந்துவந்த தண்ணீர் முதலானவற்றை கிரகித்துக் கொண்டு முளைப்பது, வளர்வது, செழிப்பது முதலிய காரியங்களுக்கு ஏற்ப குறைவான அறிவு உள்ளவர்களாகவும், தன்னை இப்படிப்பட்டதென்றும் சுகபோகங்களை அனுபவிப்பதில் தொடர்பான எந்தவிதமான அறிவும் இல்லாததாகவும் இருந்தது.இவற்றின் குணநலன்களை அறிந்து கொண்ட அதாவது இதனுடைய தாமச குணங்களின் விளைவாக பிரம்மதேவனும் இந்த தாவரங்கள் முன்னே பிறந்தன என்றார். ஆகையால், தாவரங்களை உயிரினத்தின் படைப்புகளில் முக்கிய படைப்பாக இருந்தது.