விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு

bookmark


சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda, சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலை சிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்ததாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

விவேகானந்தரின் பிறப்பும் இளமையும்

விவேகானந்தர் 1863 ஜனவரி 12 ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.

பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்கால கட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.

சுவாமி விவேகானந்தரின் சகோதர சகோதரிகள்

சுவாமி விவேகானந்தருக்கு மகேந்திரநாத் தத்தர் மற்றும் பூபேந்திரநாத் தத்தர் எனும் இரு இளைய சகோதரர்களும், மூத்த, இளைய சகோதரிகளும் இருந்தனர். பூபேந்திரநாத் தத்தர் இந்திய சுதந்திரத்திற்குப் போராடியவர். சகோதரிகளில் ஒருவர் சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு புகுந்த வீட்டினரின் கொடுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தான் விவேகானந்தர் ஞானத்தை தேடிய ஒரு பயணத்தை மேற்கொண்டார். அதில் வெற்றியும் கண்டார். அதன் முதல் படியாக ஸ்ரீ இராமகிருஷ்ண பரம ஹம்சரை சந்தித்தார்.

இராமகிருஷ்ணருடன் விவேகானந்தரின் சந்திப்பு :-

இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். இராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.

விவேகானந்தரின் துறவறம்

1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.

விவேகானந்தரின் குரல் வளம்

தங்கக் குடத்தில் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்ற இனிமையான குரல் என்று சட்டம்பி சுவாமிகள், சுவாமி விவேகானந்தரது குரல் வளம் குறித்துக் கூறுகின்றார்.

கன்னியாகுமரியில் இருந்து விவேகானந்தர் ராமநாதபுரம் சென்றார். அப்போது ராமநாதபுரத்தின் மன்னரான பாஸ்கர சேதுபதி விவேகானந்தரை அன்புடன் வரவேற்றார். அவரை உபசரித்து பணிவிடைகள் பல செய்தார். அப்போது பாஸ்கர சேதுபதிக்கு 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சிகாகோ நகரில் உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டு இந்து மதம் பற்றி ஒரு சொற் பொழிவு ஆற்றும் படி அழைப்பு வந்தது. ஆனால், ராமநாதபுர மன்னர் பாஸ்கர சேதுபதி அதற்கு தனக்கு தகுதி இல்லை என்றும் அவ்வாறு ஒரு சொற்பொழிவை அமெரிக்காவில் நிகழ்த்த விவேகானந்தர் தான் தகுதியானவர் என்றும் கருதினார். தனது வேண்டுகோளை விவேகானந்தரிடம் அன்புடன் வேண்டினார். இராமநாதபுர மன்னர், பாஸ்கர சேதுபதியின் வேண்டுதலை ஏற்ற விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரம் சென்றார். அதற்கான அனைத்து செலவையும் மன்னர் பாஸ்கர சேதுபதியே பார்த்துக் கொண்டார். அத்துடன் அவர் விவேகானந்தரை மகிழ்ச்சியுடன் வழி அனுப்பியும் வைத்தார். விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார்.

அமெரிக்காவில் நடந்த உலகசமய மாநாடு:-

அமெரிக்காவில் சிகாகோ நகரில் செப்டம்பர் 11, 1893 ஆம் ஆண்டு உலக சமய மாநாடு நடந்தது. அதில் உலக சமயத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டார்கள். அனைவரும் மிடுக்கான கோட் சூட் உடைகளை அணிந்து மேடை ஏறினார்கள். சிலர் பல நிமிடம் பேசினார்கள். இப்போது விவேகானந்தர் பேச வேண்டிய சந்தர்ப்பம் அவருக்கு வாய்த்தது. சக மனிதர்களை கோட் சூட் உடனே பார்த்துப் பழகிய அமெரிக்க மக்களுக்கு காவி உடை அணிந்து (காவி) தலைப்பாகையுடன் காட்சி அளித்த விவேகானந்தர் ஒரு புதிராக தென்பட்டார்.

"இது என்ன தோற்றம்?" என்றபடி அந்த அவையே சல சலத்தது. "இந்த இளம் இந்தியத் துறவி அப்படி என்ன தான் பேசி விடப் போகிறார்?" என்ற அலட்சியத்தில் சிலர் ஒருவருடன் ஒருவர் பேசத் தொடங்கிவிட்டனர். சிலர் கேலிப் பேச்சும் பேசினர். அப்போது சுவாமி விவேகானந்தரும் தனது பேச்சை தொடங்கினார். பேச்சை ஆரம்பிக்கும் போதே " எனது அருமை சகோதர, சகோதரிகளே " என்று விவேகானந்தர் ஆரம்பித்தவுடன் அந்த அவையில் அதுவரையில் இருந்த சலசலப்பு அடங்கியது. மக்கள் கரகோஷத்தை எழுப்பினார்கள். காரணம் அது வரையில் அந்நாட்டில் மேடையில் பேசுபவர்கள் "ஹலோ ஜென்டில்மேன் அண்ட் லேடீஸ்" என்று தான் பேச்சை ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் சுவாமி விவேகானந்தரோ அப்படி சொல்ல வில்லை "எனது அன்பு சகோதர, சகோதரிகளே!" என்றார். இதனை ஒரு அன்பின் வார்த்தையாக உணர்ந்தனர் அமெரிக்க மக்கள். சில கணங்களுக்கு விவேகானந்தரின் அந்த வார்த்தையால் மகுடிக்கு அடங்கிய பாம்பைப் போல ஆனார்கள் அமெரிக்க மக்கள்.

அவர் சொன்ன அடுத்தடுத்த வார்த்தைகளால் அமெரிக்க மக்கள் சொக்கிப் போனார்கள். இவ்வாறாக சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற் பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலை நாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். அத்துடன் நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.

சுவாமி விவேகானந்தரின் பேச்சாற்றலால் ஈர்க்கப் பட்ட ஒரு பெண்மணியின் கதை :-

சுவாமி விவேகானந்தர் பேசிய பேச்சுக்களால் ஒரு மேலை நாட்டு சகோதரி பெரிதும் ஈர்க்கப்பட்டாள். அதன் தாக்கத்தால் விவேகானந்தர் செல்லும் இடமெல்லாம் அந்தப் பெண்மணி சென்றாள். எப்படியாவது விவேகானந்தரை தனிமையில் சந்தித்துப் பேச வேண்டும் என்று விருப்பம் கொண்டாள். ஒரு கட்டத்தில் அவளுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.

அந்த அழகிய இளம் பெண்மணி சுவாமி விவேகானந்தரை நெருங்கிக் கேட்டாள்," வாலிபரே! அமெரிக்காவில் இருக்கும் ஆண்கள் எல்லோரும் எனது அழகால் மயங்கி என்னை சுற்றி, சுற்றி வருகின்றனர். ஆனால் நானோ உங்கள் மீது எனது காதலை வைத்து விட்டேன். நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால், உங்களது அறிவையும், எனது அழகையும் கொண்டு ஒரு மகன் பிறப்பான் அல்லவா?" என்றாள்.

அதற்கு விவேகானந்தர் சொன்னார்," தாயே! அப்படி தாங்கள் நினைக்க வேண்டாம். இயற்கை மனிதனின் அறிவுத் திறனை விட மேலானது. ஒரு வேளை, நீங்கள் சொல்வது போல உங்கள் அழகும், எனது அறிவும் கூடிய மகன் பிறக்காமல் போய்விட்டால்! அதற்கு நான் உங்களுக்கு ஒரு உபாயத்தை கூறுகிறேன், நீங்கள் என்னை திருமணம் செய்து கொண்டு ஒரு அறிவுள்ள மகனை பெறுவதைக் காட்டிலும் ஏன் என்னையே உங்கள் மகன் போல பாவிக்கக் கூடாது?" என்று கேட்டார். சுவாமி விவேகானந்தரின் அந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த மேலை நாட்டுப் பெண்மணி பேச்சற்று திகைத்து நின்றாள், அவள் எண்ணம் இது தான்," இவ்வளவு சிறு வயதில் இப்படி ஒரு பிரம்மச்சர்யமா?" என்று.

சுவாமி விவேகானந்தர் மேலை நாட்டில் இருந்து இந்தியா திரும்புதல் :-

1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலை நிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்து கால் பகுதியில் வந்திறங்கினார். பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி.

கல்கத்தாவில் இராமகிருஷ்ண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். 1899 ஜனவரி முதல் 1900 டிசம்பர் வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார்.

விவேகானந்தரின் மறைவு :-

1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39 ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்திற்கு இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி இன்றளவும் அது செயல்பட்டு வருகிறது.

விவேகானந்தரின் கருத்துக்கள் :-

மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்துவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துக்களை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்ய முடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.

தமிழர் பற்றி விவேகானந்தர் :-

சென்னை மாகாணத்தில் இருந்த தமிழர் இனத்தவர் இயூபிரட்டீசு நதி சென்று சுமேரியா நாகரிகத்தை உருவாக்கி, அதன் பிறகு அசிரியா, பாபிலோனியா போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல் போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே பைபிள் உருவாக மூலமானது. அத்துடன் மலபார் பகுதியில் இருந்த ஒரு தமிழ்ப் பிரிவினர் எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்பதை விவேகானந்தர் நம்பினார்.