வனம் புகு படலம் - 2120
பரத்துவாச முனிவன் மீட்டும் பகர்தல்
முனிவன் கூறிய அறிவுரை
2120.
‘ஆவது உள்ளதே; ஐய! கேள்;
ஐ - இரண்டு அமைந்த
காவதப் பொழிற்கு அப் புறம்
கழிந்தபின், காண்டி;
மேவு காதலின் வைகுதிர் -
விண்ணினும் இனிதால்;
தேவர் கைதொழும் சித்திர
கூடம் என்று உளதே.’
‘ஐய! - இராமனே!; கேள் - கேட்பாயாக; ஆவது உள்ளதே - நீ
சொல்லியது உண்மையே ஆகும்; ஐ இரண்டு அமைந்த காவதப்
பொழிற்கு? - பத்துக் காததூரம் உள்ள இச் சோலைக்கு; அப்புறம்
கழிந்தபின் - அப்பால் சென்ற பிறகு; தேவர் கைதொழும் சித்திர
கூடம் என்று உளது - தேவர்களும் வணங்கக்கூடிய சித்திர கூடம்என்று
பெயர் பெற்ற மலை உள்ளது; விண்ணினும் இனிது - தேவர் உலகத்தினும்
இனிமையானது; மேவு காதலின் வைகுதிர் - பொருந்திய அன்போடு
அவ்விடத்தில் தங்கியிருப்பீர்.’
இராமன் கூறியது உண்மையே என்பதை ‘ஆவது உள்ளதே’ என்று
கூறி முனிவன் ஏற்றுக் கொண்டான்.அதனால், மேலும் வற்புறுத்தவில்லை.
‘ஏ’ இரண்டும் தேற்றம். 33
