வணிகனை மிரட்டிய கொலைகார பூதம்
ஒரு ஊரில் மிகப் பெரிய வணிகன் இருந்தான். அவனிடம் எப்போதுமே செல்வம் கரை புரண்டு ஓடியது. அப்படிப் பட்ட பணக்காரன்.
ஒரு முறை தனது வியாபாரத்தை பல ஊர்களுக்குப் பரப்ப வெளிநாடுகளுக்குப் பயணத்தை மேற்கொண்டான். அந்தப் பயணம் ஒவ்வொரு ஊரிலும் மகத்தான வெற்றியை அடைந்தது. இறுதியாக அஜ்மன் என்னும் இடத்தை அடைந்தான். அது ஒரு கோடை காலமாக இருந்ததாலும், அப்பிரதேசம் ஒரு பாலை வனமாக இருந்ததாலும் வெயில் அவ்விடத்தில் சற்று அதிகமாகவே சுட்டெரித்தது. அங்கு நீண்ட நடை பயணத்துக்குப் பிறகு ஒரு சின்னஞ் சிறிய பாலைவனச் சோலையை அடைந்தான். அங்கே ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தான். அப்படிப் பட்ட பாலைவனத்தில் அந்த சோலைவனம் அவனுக்கு வரப் பிரசாதமாக அதிலும் இறைவனின் கருணையாகவே தெரிந்தது. நிம்மதியாக அங்கு இளைப்பாறினான்.
அத்துடன் தனது பயணத்தின் களைப்பை போக்கிக் கொள்ள தன்னுடைய தோற்பையில் இருந்து ஒரு சில ரொட்டித் துண்டுகளையும் சில பேரிச்சம் பழங்களையும் எடுத்து உட்கொண்டான். பிறகு தாகம் தீர தனது தோல் பையில் இருந்து தண்ணீர் பையையை எடுத்துத் தண்ணீரை குடித்து முடித்தான். பின்னர் மீண்டும் பேரிச்சம் பழங்களை உண்ணத் தொடங்கினான். அதன் கொட்டைகளை சற்று வேகமாகவே விட்டெறிந்தான். அது எங்கெங்கோ போய் விழுந்தது. அப்போது திடீர் என எங்கிருந்தோ ஒரு பெரிய ஒலி கேட்டது. அத்துடன் பயங்கரமான பேரொளி ஒன்று வானத்தில் தோன்றியது. அடுத்த சில நிமிடங்களில் ஒரு கருமை நிறம் கொண்ட பூதம் அந்த வணிகனின் முன்னாள் தோன்றியது. அதைக் கண்ட அந்த வணிகன் உண்மையில் பயந்து தான் போனான்.
அந்த பூதத்திற்கு எப்படியாவது ஏதேனும் காரணம் சொல்லி அந்த வணிகனை தின்று விட வேண்டும் என்ற ஆசை வந்தது.
அதனால் அந்த பூதம் அந்த வணிகனிடம் மிகவும் கோபமாகப் பேசத் தொடங்கியது, "அடே மரியாதையாக எழுந்திரு. நீ எனது மகனைக் கொன்று விட்டாய். அதனால் இப்போது நான் உன்னைக் கொல்லப் போகிறேன். மேலும் நான் இப்போது அதற்காகத் தான் வந்துள்ளேன்" என்று கர்ஜித்தது.
பூதத்தின் இந்தப் பேச்சு அந்த வணிகனுக்கு மிகப் பெரும் ஆச்சர்யத்தைத் தந்தது. காரணம் அந்த பூதத்தை வணிகம் அப்போது தான் முதல் முறையாக சந்திக்கிறான். அப்படி இருக்கும் சமயத்தில் அவன் எவ்வாறு அந்த பூதத்தின் மகனைப் பார்த்து இருக்க முடியும்? பிறகு கொன்று இருக்க முடியும்?. இந்தக் கேள்வியை அந்த பூதத்திடமே இவ்வாறு கேட்டான் அந்த வணிகன்.
"நான் உனது மகனைப் பார்த்ததே இல்லை. அப்படி இருக்க எப்படி அவனைக் கொன்று இருக்க முடியும்? நீ சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விளக்கிச் சொல்" என்றான்.
"நீ பேரீச்சம் பழங்களைத் தின்று விட்டு வீசி எறிந்த கொட்டைகள் அப்போது நடந்து விளையாடிக் கொண்டு இருந்த எனது மகனுடைய மார்பில் பட்டு அவனைச் சாகடித்து விட்டன" என்றது பூதம்.
"நீயோ ஒரு பூதம் நான் எறிந்த பேரீச்சம் கொட்டைகளால் உனது மகன் இறந்து விட்டான் என்று கூறுவது என்னைப் பொருத்தவரையில் நம்ப முடியாமல் இருக்கிறது. எனினும் நீ கூரியபடித் தான் நடந்தது என்றால் அது தெரியாமல் நடந்த விஷயம் அதற்காக நான் மன்னிப்பு வேண்டுகிறேன். தயை கூர்ந்து என்னை மன்னித்து விடு" என்றான்.
எனினும் அந்த வணிகன் மேற்கண்ட படி வேண்டியும் கூட அந்தப் பூதம் அவனை மன்னிக்கத் தயாராக இல்லை.
"நான் உன்னைக் கொல்வதில் தீர்மானமாக இருக்கிறேன். அது தான் நான் உனக்கு அளிக்கும் தண்டனை" என்றே கூறி தனது கைகளில் வாளை வர வழைத்து அந்த வணிகனின் தலையை வெட்டச் சென்றது.
அப்போது மீண்டும் அந்த வணிகன் அந்த பூதத்திடம், "எனது கடைசி ஆசையைக் கூட நீ கேட்காமல் இப்படி என்னைக் கொல்லத் துடிப்பது அந்த இறைவனுக்கே அடுக்காது. குறைந்த பட்சம் எனது கடைசி ஆசையையாவது நிறைவேற்ற வாய்ப்பு கொடு" என்று மன்றாடிக் கேட்டான்.
உடனே அந்த பூதம், "நீ கடைசி ஆசை என்று சொல்லி விட்டாய்! தவிர இறைவனின் பெயரையும் கூறி என்னிடத்தில் மன்றாடிகிறாய். அதனால் உனக்கு ஒரு கடைசி வாய்ப்பை அளிக்கிறேன். நீ உனது கடைசி ஆசையை சொல். அது நிறைவேறிய பிறகு நான் உன்னைக் கொல்கிறேன்" என்றது.
உடனே அந்த வணிகன் தனது கடைசி ஆசையை அந்த பூதத்திடம் கூறத் தொடங்கினான்.
"பூதமே! நான் ஒரு வணிகன். எனக்கென்று ஏராளமான கடமைகள் காத்துக் கொண்டு இருக்கிறது. அவைகளை நான் முடிக்காமல் இறந்தால் எனது ஆத்மா சாந்தி அடையாது. மேலும் நான் பல பேருக்குப் பணம் கொடுக்க வேண்டி உள்ளது. அவற்றைக் கொடுக்காமல் இறந்தால் கடன்காரன் என்ற பழிச் சொல் எனக்கு வந்து சேரும். மேலும் நான் அந்தக் கடன்களை தீர்க்க வேண்டும் என்றால், பலரிடம் இருந்து எனக்கு வர வேண்டிய பணத்தைக் கொண்டே நான் அதனை தீர்க்க முடியும். இவை எல்லாவற்றையும் செய்து முடிக்க எனக்கு ஒரு வருட கால அவகாசம் கண்டிப்பாகத் தேவை. தயவு செய்து எனக்கு அந்த ஒரு வருட கால அவகாசத்தைக் கொடு. அடுத்த வருடம் இதே நாள், இதே வேளை, இல்லை... இல்லை ... முடிந்தால் கொஞ்சம் சீக்கிரமாகவே கூட வந்து விடுகிறேன். என் மீது கொஞ்சம் கருணைக்காட்டு என்றான்".
உடனே வணிகனின் பேச்சைக் கேட்ட அந்த பூதம், "ஒழிந்து போ. உன்னைப் பார்த்தாலும் பாவமாகத் தான் இருக்கிறது. உனக்கு ஒரு வருடம் மட்டுமே கால அவகாசத்தை தருகிறேன். அதற்குள் நீ மேற்கூறிய கடமைகளை எல்லாம் முடித்து விட வேண்டும். இல்லையேல் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. ஆனால், என்னை ஏமாற்றலாம் என்று மட்டும் நினைக்காதே. அது உனக்கு நல்லதல்ல. அப்படி நீ என்னை ஒரு வருடம் கழித்து ஏமாற்ற நினைத்தால் உனது குடும்பத்தையே தேடிக் கண்டு பிடித்துக் கொன்று தின்று விடுவன். சரி தானே!" என்றது.
"நான் கண்டிப்பாக ஒரு வருடம் கழித்து இங்கு வருவேன். நீ இதே நாள், இதே நேரத்தில் என்னை அடுத்த வருடத்தில் தாரளமாக எதிர்பார்க்கலாம். மேலும், உன்னை ஏமாற்றும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. தயவு கூர்ந்து என் மீது கருணையைக் காட்டு" என்றான்.
இறுதியில் பூதமும் அந்த வணிகனின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவனை அனுப்பி வைத்தது. அதன்படியே அந்த வணிகனும் ஓராண்டு காலத்தில் அந்த இடத்திற்குச் சரியாக வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தனது பணிகள் அனைத்தையும் வேக வேகமாக முடித்தான். எனினும், இன்னும் ஒரு வருடம் தான் தனது உயிர் இருக்கப் போகிறது என்பதை நினைத்து, நினைத்து வருந்தினான். தனது கடன்களை எல்லாம் வேக, வேகமாக அடைத்தான். பிள்ளைகளுக்கு சொத்துக்களை சரிபாதியாக பிரித்துக் கொடுத்தான். மனைவிக்கு ஆறுதல் கூறி, தான் இல்லாமல் எப்படி வாழ்வது என்பதைக் கற்றுக் கொடுத்தான். அவனுக்கு வர வேண்டிய பணத்தை எல்லாம் வசூல் செய்து வியாபரத்தை விரிவு படுத்தினான். இப்போது எல்லாமே அவனுக்கு திருப்தியாக இருந்தது. எல்லா வேலைகளையும் நல்ல படியாக முடித்து விட்டோம் என்ற எண்ணம் வரவே, ஒரு நாள் தனது பிள்ளைகளை அழைத்து அவர்களிடம் தான் யாத்திரைக்கு செல்வதாகக் கூறி முன்பு தான் சந்தித்த அந்த பூதத்தின் இருப்பிடம் நோக்கிப் புறப்பட்டான். அவன் பூதத்திடம் கேட்டு இருந்த அந்த ஓராண்டு கால தவணை கூடிய சீக்கிரத்தில் முடியப் போகும் நிலையும் வந்தது. குறிப்பிட்ட அதே நாளுக்கு சற்று முன்னதாகவே பூதத்தின் இருப்பிடத்தை அடைந்த வணிகன். அந்த பூதத்திடம் தனது உயிரை ஒப்படைக்கக் காத்துக் கொண்டு இருந்தான். வெகு நேரம் கழிந்து கொண்டு இருந்தது. வணிகனுக்கோ, மனதில் வருத்தம் 'அதற்குள் சாகப் போகிறோமா?' என்ற வருத்தம் தான். வேறு ஏதும் இல்லை.
இவ்விதம் அந்த வணிகன் சிந்தித்தபடி காத்துக் கொண்டு இருந்த சமயம் அந்தக் குறிப்பிட்ட இடத்துக்கு, சங்கிலியால் பிணைக்கப்பட்ட அரபிய மான் ஒன்றைக் கையில் பிடித்த வண்ணம் ஒரு கனவான் அங்கு வந்து சேர்ந்தார். அவருக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும். அவர் அவ்விடத்தில் அமர்ந்து இருந்த அந்த வணிகனிடம் பேசிப் பார்த்தார். அப்போது அந்த வணிகன் சோகத்துடன் தனது கதையை முழுவதுமாக அந்த மானுடன் வந்த முதல் கனவானிடம் கூறி முடித்தான்.
வணிகனின் கதையை முழுவதுமாகக் கேட்டு முடித்த கனவான் அவனுக்கு நபிக்கை ஊட்டும் படியாகப் பேசினார். அப்போது அதே தருணத்தில், கருப்பு நிற வேட்டை நாய்கள் இரண்டைக் கையில் பிடித்தவராக இன்னொரு கனவான் அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தார். அவர் அந்த வணிகனையும், உடன் மானுடன் நின்று இருந்த அந்த முதல் கனவானிடத்திலும் பேச்சுக் கொடுத்து அவர்கள் இருவரைப் பற்றியும் அறிந்து கொண்டார். அப்போது இரு வேட்டை நாய்களுடன் வந்த அந்த கனவானுக்கு அந்த வணிகனின் கதை தான் மிகுந்த பரிதாபத்தை அளித்தது. இப்படியாக வணிகன், முதல் கனவான், இரண்டாவது கனவான் ஆகிய இம்மூவரும் பேசிக் கொண்டு இருந்த சமயத்தில் கையில் ஒரு கோவேறு கழுதையைப் பிடித்தவாறு மூன்றாவது கனவான் ஒருவர் அவ்விடத்துக்கு வந்து சேர்ந்தார். அவரும் வணிகனின் கதையைக் கேட்டு மிகுந்த துயரத்தை அடைந்தார். இப்படியாக இந்த நால்வரும் பூதம் வரும் நேரத்தை நோக்கிக் காத்துக் கொண்டு இருந்தனர்.
பூதம் வரும் சரியான நேரமும் வந்தது. அதனை அறிவிப்பதற்காக திடீர் என்று ஒரு புகை மண்டலம் வானத்தில் எழுந்தது. அங்கிருந்து ஒரு பூதம் தோன்றியது அது வணிகனைப் பார்த்து, "உன்னைக் கொல்லத் தான் வந்துள்ளேன்; உன்னை நான் தான் கொல்லப் போகிறேன். எனது அன்பு மகனை நீதானே சாகடித்தாய், ஆகவே நான் உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்" என்றது.
மறுபுறம் வணிகனோ எதையும் கூற முடியாமல் கண்ணீருடன் காணப்பட்டான். வணிகனின் நிலையைக் கண்ட அந்த கனவான்களும் அவன் மீது பரிதாபம் கொண்டனர்.
அப்போது முதலில் அவ்விடத்துக்கு மானுடன் வந்த முதல் கனவான். பூதத்திடம் மிகவும் கருணை கொண்ட பார்வையுடன்," ஏ பூதமே! ஒரு நிமிடம் நான் சொல்வதைக் கேள். இதோ இந்த மானையும் என்னையும் பற்றிய ஆச்சர்யமான கதை ஒன்றை உனக்குச் சொல்கிறேன். ஒருவேளை நான் சொல்லப்போகும் கதை உண்மையில் உனக்கு அற்புதமாகப் பட்டால், நீ இந்த வணிகனுக்கு அளிக்கப்போகும் தண்டனையில் மூன்றில் ஒரு பங்கை குறைத்துக் கொள்கிறாயா? உனக்கு அதற்கு சம்மதமா?" என்றார்.
உடனே அந்த பூதத்திற்கும் அந்த கனவான் கூறவிருக்கும் கதையைக் கேட்க வேண்டும் என்ற ஆசை ஏனோ வந்தது. அத்துடன் அந்த கனவான் உறுதியாக சொல்லும் போது, நிச்சயம் அவர் சொல்ல இருக்கும் அந்தக் கதை சுவாரஸ்யம் நிறைந்ததாகத் தான் இருக்கும் என்று நம்பியது அந்தப் பூதம். அதனால் அந்த முதல் கனவானிடம், "சரி, நீ முதலில் கதையைச் சொல், அந்தக் கதை உண்மையிலேயே ஆச்சர்யம் நிறைந்ததாக இருந்தால். நானும் இந்த வணிகனுக்கு அளிக்கவிருக்கும் தண்டனையை குறைத்துக் கொள்ளச் சம்மதம் தெரிவிக்கிறேன்" என்றது பூதம்.
உடனே அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த அந்த முதல் கனவான் தனது கதையை அந்தப் பூதத்திடம் கூறத் தொடங்கினார்.
