மூவேந்தர்களில் ஒருவரான பாண்டியர்கள்
பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, இராமநாதபுரம்,திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத நெடிய வரலாறு பாண்டியர்களுக்கு உண்டு. இதுவே இவர்களைப் பற்றிய வரலாறு புராணங்களாகவும், இலக்கியங்களாகவும், காப்பியங்களாகவும், இதிகாசங்களாகவும், நாட்டுப்புறக் கதைகளாகவும் வளர வழிவகுத்து இவர்கள் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் இல்லாமல் செய்கின்றன.
பண்டு = பண்டைய = பாண்டிய = பாண்டியர் என்று திரிந்திருக்கலாம் என்பது பாவாணர் கூற்று. அத்துடன் பாண்டியர் தங்கள் பெயரில் மாறன், வழுதி, சடையவர்மன், மாறவர்மன், செழியன் என்ற ஒட்டுக்களைக் சேர்த்துக் கொண்டனர். இவர்களின் குலப்பெயர் பரவலாகப் பாண்டியர் என அறியப்படினும் இவர்கள் சந்திர குலம், தென்னர் குலம், கவுரியர் குலம், பஞ்சவர் குலம் என்றும் பாடல்களில் போற்றப்படுகின்றனர்.
