தொன்மங்களில் பாண்டியர்கள்
பாண்டியர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் சரி வரக் காணக்கிடைக்க வில்லை. ஆனால், பழைய புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் பாண்டியர் பற்றியத் தகவல்கள் உள்ளது. எனினும், பாண்டியார் யாராக இருக்கக் கூடும் என்பதில் வரலாற்று ஆசிரியர்களிடம் பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகிறது.
குமரிக் கண்டத்தில் தோன்றிய மனித சந்ததியினரே பாண்டியராக உருப்பெற்றிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்து. இந்து சமுத்திரத்தில் மூழ்கிவிட்டதெனக் கருதப்படும் குமரிக்கண்டத்தில் 72 நாடுகளும் தலைநகராக தென்மதுரையும் விளங்கியது. பாண்டிய மன்னர்களின் தலைநகராக விளங்கிய இத்தென்மதுரை கடற்கோளினால் அழிவுற்றது. இக்கடற்கோளில் அழியாது இருந்து எஞ்சிய நாடுகளின் தலைநகராக கபாடபுரம் விளங்கியது. இரண்டாம் கடற்கோளால் அந்நாடும் அழிவுற்றது. இவ்வழிவின் பின்னர் தற்போதுள்ள மதுரை பாண்டியர்களின் தலைநகராயிற்று. பாண்டிய மன்னர்களால் தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்டது.
இராமாயணத்தில்:
பாண்டிய மன்னர்களின் இடைச்சங்க தலைநகரான கபாடபுரம் பொன்முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்றும் முத்து, பொன் அலங்கரித்த கோட்டை வாயில் இருந்தது என்றும் இராமாயணத்தில் உள்ளது.
மகாபாரதத்தில்:
திருச்செங்குன்றில் பாண்டவர் படுக்கை உண்டு. திருப்பாண்டி கொடுமுடிதான் விராடநாடு.பாண்டவர் கொடுமுடியின் புறநகரில் வன்னி மரத்தில்தான் ஆடைகளையும் ஆயுதங்களையும் மறைத்து வைத்தனர். மேலும் அருச்சுனன் பாண்டிய மன்னன் ஒருவன் மகளை மணந்தான் எனவும் உள்ளது.
புராணங்களில்:
பல இந்து மதப் புராணங்களும், தமிழ் இலக்கியம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் பல பாண்டிய மன்னர்கள் இருந்ததாகவும் அவர்கள் வரிசையாகப் பதவியேற்றதாகவும் குறிப்பிடுகின்றன. இது தவிர்த்து திருவிளையாடல் புராணங்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாண்டிய மன்னர்களும், நற்குடி வேளாளர் வரலாற்றில் 201 பாண்டிய மன்னர்களும், இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரையில் 197 பாண்டியர்களும் குறிப்பிடப்படுகின்றனர்.
இப்புராணங்கள் படி மலையத்துவசப் பாண்டியன் மகள் மீனாட்சி, இவளது திருமணம் மதுரையில் சிவனுடன் நடந்தது. சோமசுந்தரப் பெருமானாக மதுரை தமிழ்ச் சங்கத்தில் இருந்து தமிழ் வளர்த்தார் இவர்.மதுரை மீனாட்சி பெரும்படையோடு இமயம்வரை படையெடுத்து சென்றாள். அதன் வழிவந்த வழிமுறையினரே மௌரியர்கள் என்று கருதப்படுகிறது.
