மூன்றுகாதல்

மூன்றுகாதல்

bookmark


முதலாவது சரஸ்வதி காதல் 

ராகம் - ஸரஸ்வதி மனோஹரி தாளம் - திஸ்ர ஏகம் 

பிள்ளைப் பிராயத்திலே - அவள் 
  பெண்மையைக் கண்டு மயங்கிவிட் டேனங்கு 
பள்ளிப் படிப்பினிலே - மதி 
  பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட 
வெள்ளை மலரணைமேல் - அவள் 
  வீணையுங் கையும் விரிந்த முகமலர் 
விள்ளும் பொருளமுதம் - கண்டேன் 
  வெள்ளை மனது பறிகொடுத் தேன் - அம்மா! 

ஆடிவரு கையிலே - அவள் 
  அங்கொரு வீதி முனையில் நிற்பாள், கையில் 
ஏடு தரித்திருப்பாள் - அதில் 
  இங்கித மாகப் பதம்படிப் பாள், அதை 
நாடி யருகணைந்தால் - பல 
  ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள், "இன்று 
கூடிமகிழ்வ" மென்றால் - விழிக் 
  கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள், அம்மா! 

ஆற்றங் கரைதனிலே - தனி 
  யானதோர் மண்டப மீதினிலே, தென்றற் 
காற்றை நுகர்ந்திருந்தேன் - அங்கு 
  கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள், அதை 
ஏற்று மனமகிழ்ந்தே - "அடி 
  என்னோ டிணங்கி மணம்புரி வாய்" என்று 
போற்றிய போதினிலே - இளம் 
  புன்னகை பூத்து மறைந்துவிட்டாள், அம்மா! 

சித்தந் தளர்ந்ததுண்டோ? - கலைத் 
  தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு 
பித்துப் பிடித்ததுபோல் - பகற் 
  பேச்சும் இரவிற் கனவும் அவளிடை 
வைத்த நினைவை யல்லால் - பிற 
  வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு 
பத்திரண் டாமளவும் - வெள்ளைப் 
  பண்மகள் காதலைப் பற்றிநின் றேன், அம்மா! 

இரண்டாவது - லக்ஷ்மி காதல் 

ராகம் - ஸ்ரீராகம் தாளம் - திஸ்ர ஏகம் 

இந்த நிலையினிலே - அங்கொர் 
  இன்பப் பொழிலி னிடையினில் வேறொரு 
சுந்தரி வந்துநின்றாள் - அவள் 
  சோதி முகத்தின் அழகினைக் கண்டென்றன் 
சிந்தை திறைகொடுத்தேன் - அவள் 
  செந்திரு வென்று பெயர்சொல்லி னாள், மற்றும் 
அந்தத் தின முதலா - நெஞ்சம் 
  ஆரத் தழுவிட வேண்டுகின் றேன், அம்மா! 

புன்னகை செய்திடுவாள் - அற்றைப் 
  போது முழுதும் மகிழ்ந்திருப்பேன், சற்றென் 
முன்னின்று பார்த்திடுவாள் - அந்த 
  மோகத்தி லேதலை சுற்றிடுங் காண், பின்னர் 
என்ன பிழைகள் கண்டோ - அவள் 
  என்னைப் புறக்கணித் தேகிடுவாள், அங்கு 
சின்னமும் பின்னமுமா - மனஞ் 
  சிந்தியுளமிக நொந்திடுவேன், அம்மா! 

காட்டு வழிகளிலே - மலைக் 
  காட்சியிலே புனல் வீழ்ச்சி யிலே, பல 
நாட்டுப் புறங்களிலே நகர் 
  நண்ணு சிலசுடர் மாடத்தி லே சில 
வேட்டுவர் சார்பினிலே - சில 
  வீர ரிடத்திலும், வேந்த ரிடத்திலும், 
மீட்டு மவள் வருவாள் - கண்ட 
  விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போம் அம்மா! 

மூன்றாவது - காளி காதல் 

ராகம் - புன்னாகவராளி தாளம் - திஸ்ர ஏகம் 

பின்னொர் இராவினிலே - கரும் 
  பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு, 
கன்னி வடிவமென்றே - களி 
  கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில் 
அன்னை வடிவமடா! - இவள் 
  ஆதிபராசக்தி தேவி யடா ! - இவள் 
இன்னருள் வேண்டுமடா! - பின்னர் 
  யாவு முலகில் வசப்பட்டுப் போமடா! 

செல்வங்கள் பொங்கிவரும்! - நல்ல 
  தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்; 
அல்லும் பகலுமிங்கே - இவை 
  அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று 
வில்லை யசைப்பவளை - இந்த 
  வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத் 
தொல்லை தவிர்ப்பவளை - நித்தம் 
  தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா!