மிதிலைக் காட்சிப் படலம் - 718
இராமன்முதலியோர் சனகனது வேள்விச்சாலை சார்தல்
718.
ஊழி பெயர்ந்தெனக் கங்குல் ஒருவண்ணம்
புடை பெயர. உறக்கம் நீத்த
சூழி யானையின் எழுந்து. தொல் நியமத்
துறை முடித்து. சுருதி அன்ன
வாழி மாதவற் பணிந்து. மனக்கு இனிய
தம்பியொடும். வம்பின் மாலை
தாழும் மா மணி மௌலித் தார்ச் சனகன்
பெரு வேள்விச் சாலை சார்ந்தான்.
ஊழி பெயர்ந்தென- யுகமே கழிந்தாற் போல; கங்குல் - இரவுக்
காலமானது; ஒரு வண்ணம் - ஒருவாறு; புடை பெயர - (தன்)
நிலையிலிருந்து நீங்க; உறக்கம் நீத்த - (இராமன்) தூக்கத்தை விட்டு
எழுந்த; சூழி யானையின் - முகபடாமுள்ள யானை போல; எழுந்து-
துயில் நீங்கி எழுந்து; தொல் நியமத் துறை - பழமையான நித்தியக்
கடன்களை; முடித்து - நிறைவேற்றி; சுருதி அன்ன மாதவன் -
வேதத்தின் உருவம் போன்ற கோசிக முனிவனை; பணிந்து - வணங்கி
(அவனொடும்); மனக்கு இனிய - (தன்) மனத்திற்கு இனிய;
தம்பியொடும் -தம்பியான இலக்குவனுடனும்; வம்பின் மாலை தாழும்
- மணங் கமழும் மாலை தாழ்ந்த; மா மணி மௌலி - சிறந்த மணி
மகுடத்தையும்; தார் - குலத்திற்குரிய மாலையையும் அணிந்த; சனகன்
- சனக மன்னனது; பெரு வேள்விச் சாலை - பெரிய யாக சாலையை
அடைந்தான்.
‘ஊழி பெயர்ந்தெனக் கங்குல் ஒரு வண்ணம் புடைபெயர’
என்றதனால் காதல் வயப்பட்டவர்க்கு இரவு நீட்டித்து நிற்றல்
விளக்கப்படுகிறது. 155
