மிதிலைக் காட்சிப் படலம் - 710
710.
ஆகும் நல்வழி; அல்வழி என் மனம்
ஆகுமோ? இதற்கு ஆகிய காரணம்.
பாகுபோல் மொழிப் பைந்தொடி. கன்னியே
ஆகும்; வேறு இதற்கு ஐயுறவு இல்லையே!
ஆகும் - ஆக்கத்திற்குரிய; நல்வழி அல்வழி - நல்வழி அல்லாத
தீய நெறி; என்மனம் ஆகுமோ - எனது நேர்மையான மனம்
செல்லுமோ?; அதற்கு ஆகிய காரணம் - (அப்படியிருக்க என் மனம்
இம் மங்கையிடம் காதல் கொண்டு சென்றதற்குப்) பொருந்திய
காரணம்; பாகுபோல் மொழி - பாகுபோன்ற இனிய சொற்களையும்;
பைந்தொடி - பசும்பொன் தொடியையும் உடைய இந்நங்கை;
கன்னியே கும் - (திருமணமாகாத) கன்னிகையே ஆவாள்; இதற்கு
வேறு ஐயுறவு இல்லை - (இந்த முடிவுக்கு மாறாக) ஐயப்பட
வேண்டியது ஒன்றுமில்லை.
தனது மனம் அம் மங்கையிடம் சென்றதால் அவள்
திருமணமாகாத கன்னிப் பெண்ணாக இருக்கவேண்டுமென்று இராமன்
கருதுகின்றான். சான்றோர்க்குத் தூய மனச்சான்றே அளவுகோல்.
நல்வழியல்லாத அல்வழி: பிறன் மனைவியை விழைதல். 147
