மிதிலைக் காட்சிப் படலம் - 708

bookmark

708.

‘கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன்.
பொன்னை முன்னிய பூங் கணை மாரியால்.
என்னை எய்து தொலைக்கும் என்றால். இனி.
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே?
 
கன்னல்   வார்சிலை  -  கரும்பாகிய  நீண்ட  வில்லை;   கால்
வளைத்தே - வளைத்து; மதன் - மன்மதன்; பொன்னை  முன்னிய -
திருமகள்  போன்ற  சீதையை  நினைக்கும்  பொருட்டு;   பூங் கணை
மாரியால் எய்து - (என்மேல்) தொடுக்கும் மலரம்பு மழையால்  எய்து;
என்னை -  (யார்க்கும்  வலி  தொலையாத) என்னை;  தொலைக்கும்
என்றால் -  வலியழிப்பான்  என்றால்;  இனி  - இனிமேல்;  வன்மை
என்னும்  இது  - வலிமை என்று சொல்லப்படுகின்ற குணம்; யாரிடை
வைகும் - யாரிடத்திலே தங்கியிருக்கும்.    

முன்னிய     - செய்யிய என்னும் வினையெச்சம். இதுவரை  வலிய
வில்லம்புகளோடு  கட்டமைந்த  உடம்புமுடைய  வீரர் யார்க்கும்  வலி
தொலையாத  நான்  இப்பொழுது மெல்லிய கரும்பு வில்லையும்   மலர்
அம்புகளையும்   உடைய    மன்மதனிடம்   வலிமை     இழக்கும்படி
ஆயிற்றே என்று இராமன் வருந்தினான்.                       145