மிதிலைக் காட்சிப் படலம் - 705

bookmark

705.

‘அருள் இலாள் எனினும். மனத்து ஆசையால்.
வெருளும் நோய் விடக் கண்ணின் விழுங்காலால்.
தெருள் இலா உலகில். சென்று. நின்று. வாழ்
பொருள் எலாம். அவள் பொன் உரு ஆயவே!
 
அருள்    இலாள்  எனினும்  -  (அவள்  என்னிடம்)  கருணை
இல்லாதவள்   ஆயினும்;  மனத்து  ஆசையால்  -  என்  மனத்தின்
(அவளிடம் உண்டான) காதலால்; வெருளும் நோய்விட - கலக்கத்தை
உண்டாக்கும்  காம  நோய்  நீங்குமாறு; கண்ணின் - தன் கண்களால்;
விழுங்கலால் -  (அவள்  என்னை)  உட்கொண்டதால்; தெருள் இலா
உலகில் -தெளிவில்லாத இவ்வுலகிலே; சென்று நின்று - அசைவனவும்
இயங்கா  தனவுமாகியும;  வாழ்  பொருள் எலாம் -வாழ்கிற எல்லாப்
பொருள்களும்; அவள் பொன் உரு ஆய-(எனக்கு) அந்த நங்கையின்
பொன்மயமான வடிவமாகிவிட்டன.   

அருளிலாள்:  இராமன் உற்ற நோயினை அவனை உடனே  தழுவித்
தணித்து   அருளாதவள்.   சென்று   நின்று   வாழ்பொருள்  -   சர
அசரங்களாகிய  பொருள்கள். இதனால் ‘நோக்குவ எல்லாம்  அவையே
போறல்’   என்ற   அவத்தை  கூறப்பெற்றது.  சீதையின்   திருமேனி
உருக்கிய   பொன்னின்   நிறத்தை   உடையதாதலால்    ‘பொன்னுரு’
எனப்பட்டது.                                             142