மிதிலைக் காட்சிப் படலம் - 706
706.
‘பூண் உலாவிய பொற் கலசங்கள் என்
ஏண் இல் ஆகத்து எழுதலஎன்னினும்;
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி
காணல் ஆவதுஓர் காலம் உண்டாம் கொலோ?
பூண் உலாவிய - அணிகலன்கள் அசையப் பெற்ற;
பொன்கலசங்கள் - பொன் கலசங்களைப் போன்ற (அப் பெண்ணின்
கொங்கைகள்; என் ஏண் இல் - பெருமையற்ற எனது; ஆகத்து -
மார்பிலே; எழுதல என்னினும் - அழுந்திப் பதியாமல் போயினும்;
வாள் நிலா முறுவல் - ஒளியுடைய சந்திரகாந்தி போன்ற
புன்சிரிப்பையும்; கனிவாய் - கொவ்வைப் பழம் போன்ற
அதரத்தையும் உடைய; மதி - (அவளது முகமாகிய) சந்திரனை;
காணல் ஆவது - (மீண்டும்) பார்ப்பதற்கு; ஓர்காலம் - ஒரு
காலமேனும்; உண்டாம் கொலோ - உண்டாகுமோ?
சீதையைத் தழுவும் கைகூடாவிட்டாலும் அவளது முகதரிசனமானது
இன்னொருமுறை கூடினால் போதுமென இராமன் தன் காதல்
மிகுதியை வெளியிடுகிறான். முறுவலைக் கண்ட இராமன் அதன்
அருகிலுள்ள அதரத்தையும் கண்டு ‘முறுவல் கனிவாய்மதி’ எனக்
கூறினான். கலசம். மதி - உவமையாகு பெயர்கள். 143
