மிதிலைக் காட்சிப் படலம் - 702
இராமன் சீதையை எண்ணியவண்ணமாயிருத்தல்
இராமன் சீதையை நினைத்தல்
702.
முனியும் தம்பியும் போய். முறையால் தமக்கு
இனிய பள்ளிகள் எய்தியபின். இருட்
கனியும். போல்பவன். கங்குலும். திங்களும்.
தனியும். தானும். அத் தையலும். ஆயினான்.
முனியும் - கோசிக முனிவனும்; தம்பியும் - இலக்குமணனும்;
போய் - சென்று; முறையால் - வழக்கப்படியே; தமக்கு இனிய -
தத்தமக்கு இனிமையான; பள்ளிகள் - படுக்கையிடங்களை; எய்திய -
அடைந்த; பின் - பின்பு; இருள் கனியும் இருள் மயமான
கனியை; போல்பவன் - ஒப்பவனான இராமபிரான்; கங்குலும் -
இரவும்; திங்களும் - சந்திரனும்; தனியும் - தனிமைப்பாடு என்ற
ஒன்றும்; தானும் - தானும்; அத் தையலும் - அச் சீதையாக;
ஆயினான் - ஆனான்.
இரவில் நிலா வீசும்பொழுது இராமன் தனியனாகத் தான் இருந்த
நிலையில் சீதை பற்றிய சிந்தனையே ஆகி அவளை
உருவெளிப்பாட்டில் கண்டு காதல் மயக்கமுற்றுத் துயிலின்றி
இருந்தான் என்பது கருத்து. இருள்கனி: கருநிறத்தாலும். யாவராலும்
விரும்பப்படுவதலாலும் இது இராமனுக்கு உவமையாயிற்று.
இருள்கனியும்: உம்மை இசைநிறை. 139
