மிதிலைக் காட்சிப் படலம் - 698

bookmark

தேவர்கள் கோசிகனை நீ பிரமவிருடியாவாய் எனல்

698.

‘பாதி மா மதி சூடியும். பைந் துழாய்ச்
சோதியோனும். அத் தூய் மலராளியும்.
“வேத பாரகர்” வேறு இலர். நீ அலால்;
மா தபோதன!” என்ன வழங்கினர்.
 
மா பாதி   மதி  சூடியும்  -  கலை  குறைந்த  சிறந்த   பிறைச்
சந்திரனைத்  சூடிய சிவனும்; பைந்துழாய் - பசுமையான  திருத்துழாய்
அணிந்த; சோதியோனும் - சோதியான திருமாலும்;  அத்  தூய்மலர்
ஆளியும் -  தூய  தாமரை  மலரில்  உறையும்  பிரமனும்   (ஆகிய
மும்மூர்த்திகளும்); மா தபோதன - (அம் முனிவனை  நோக்கி) சிறந்த
தவச்  செல்வனான பெருமுனிவனே;  வேத  பாரகர் -  வேதங்களின்
கரை  கண்டு  உணர்ந்தவர்;  நீ அலால் வேறு இலர்  -   உன்னை
அல்லாமல் (உலகில்) வேறு யாரும் இலர்; என்ன வழங்கினர்-  என்று
உபகார மொழி கூறிப் புகழ்ந்தார்கள்.   

‘வேத     பாரகனும் மா தபோதனனும் நீயே’ என்றதனால்   ‘பிரம
இருடியே  நீ’  என்பது  விளங்கும்.  திருமகள்  வாழும்   இடமாதலின்
தாமரை மலர் தூய்மலர் எனப்பட்டது.                         135