மிதிலைக் காட்சிப் படலம் - 696
கோசிகன் தவத்தால் உலகத்துத் தோன்றிய மாறுபாடு
696.
‘திரிவ நிற்ப செக தலத்து யாவையும்.
வெருவலுற்றன; வெங் கதிர் மீண்டன;
கருவி உற்ற ககனம் எலாம் புகை
உருவி உற்றிட. உம்பர் துளங்கினார்.
கருவி- உலகமும் உலகத்து உயிர்களும் வாழ்வதற்குக் காரணமான
மேகங்கள்; உற்ற - நிறைந்துள்ள; ககனம் எலாம் - விண் முழுதும்;
புகை - புகையானது; உருவி உற்றிட - ஊடுருவிச் சென்றதால்; செகம்
தலத்து - பூமியில்; திரிவ - சஞ்சரிக்கும் பொருள்களும்; நிற்ப -
நிலை நிற்கும் அசையாப் பொருள்களும்; யாவையும் - (ஆகிய)
எல்லாப் பொருள்களும்; வெருவல் உற்றன - அச்சத்தை அடைந்தன;
வெம் கதிர் - கொடிய வெப்பமான சூரியக் கதிர்களும்; மீண்டன -
(ஒளி வீசாமல்) திரும்பிவிட்டன; உம்பர் - தேவர்களும்; துளங்கினார்
- (அச்சத்தால்) நடுக்கமுற்றார்கள்.
கருவி: இடி. மின்னல் முதலிய தொகுதி. 133
