மிதிலைக் காட்சிப் படலம் - 691

bookmark

சுனச்சேபனுக்குக் கோசிகன் விடைகொடுத்தல்

691.

“அரசனோடு ஏகி யூபத்து
   அணைக்குபு இம் மறையை ஓதின்.
விரசுவர் விண்ணுளோரும்
   விரிஞ்சனும் விடைவலோனும்;
உரை செறி வேள்வி முற்றும்;
   உனது உயிர்க்கு ஈறு உண்டாகா;
பிரசமென் தாரோய்!” என்ன.
   பழிச்சொடும் பெயர்ந்து போனான்.
 
பிரசம்    மென் தாரோய்- தேனுடைய மென்மையான  பூமாலை
தரித்தவனே; அரசனோடு  ஏகி  -  அம்பரீட  மன்னனோடு சென்று;
யூபத்து அணைக்குபு - (அவன்) யூபத் தூணிலே கட்டும் போது; இம்
மறையை   ஓதின்    -    இந்த    மந்திரங்களைச்   சொன்னால்;
விண்ணுளோரும்  -  தேவர்களும்;   விரிஞ்சனும்   -   பிரமனும்;
விடைவலோனும் -  காலை  ஊர்தியான  சிவபிரானும்;  விரசுவர் -
(தத்தம்  அவிர்ப்  பாகத்தை பெற) வந்து சேர்வார்கள்; உரை செறி -
புகழ்  மிக்க;  வேள்வி  முற்றும்  -  யாகமும்   நிறைவுறும்; உனது
உயிர்க்கு -உன்   உயிர்க்கும்; ஈறு உண்டாகா - இறுதி உண்டாகாது;
என்ன -என்று (தன்  மருமகனிடம்)  சொல்ல;  பழிச்சொடும் - (அது
கேட்டு  அவன்)    வணங்கித் துதிமொழிகள் கூறியவனாக; பெயர்ந்து
போனான்- (அவ்விடத்தை விட்டு) நீங்கி அரசனோடு சென்றான்.   

அணைக்குபு:     அணைக்க; அரசன் முனி மைந்தனைச் சந்தனம்.
மாலை   முதலியவற்றால்  அலங்கரித்து  நரமேத்திற்காக  அழைத்துச்
சென்றானாதலால் கோசிகன் அவைனைப் ‘பிரசம் மென் தாரோய்’ என
விளித்தான்.   யூபம்:   யாகப்   பசுவைக்  கட்டும்  தூண்.  இரண்டு
மந்திரங்கள்  1.  பலியை  உண்பவனாகிய  இந்திரனைத் துதிப்பது. 2.
யூபத் தூணின் தேவதையான உபேந்திரனைத் துதிப்பது.          128