மிதிலைக் காட்சிப் படலம் - 690
சுனச்சேபனுக்குக் கோசிகன் இரண்டு
மந்திரங்களை உபதேசித்தல்
கௌசிகன் சுனச்சேபனுக்கு மந்திரன் உரைத்து விடை தரல்
690.
‘மா முனி வெகுளிதன்னால்
மடிகலா மைந்தர் நால்வர்
தாம் உறு சவரர் ஆகச்
சபித்து. எதிர். “சலித்த சிந்தை
ஏமுறல் ஒழிக! இன்னே
பெறுக!” என இரண்டு விஞ்சை
கோ மருமகனுக்கு நல்கி.
பின்னரும் குணிக்கலுற்றான்;
மாமுனி - பெருந்தவ முனிவனான வசிட்டனது; வெகுளி தன்னால்
- கோபத்தால்; மடிகலா - (முன்பு) இறவாது இருந்த; மைந்தர்
நால்வர்தாம் - தன் மைந்தர் நால்வரும்; உறு சவரர் ஆக - இழிந்த
வேடராகும்படி; சபித்து - (விசுவாமித்திரன்) சபித்துவிட்டு; எதிர் -
(அதன்பின்பு) தனக்கு எதிரில் நின்ற; கோ மருகனுக்கு - மருமகனான
சுனச்சேபனுக்கு; சலித்த சிந்தை - கலங்கிய மனத்தோடு; ஏமுறல்
ஒழிக - துன்பம் அடைவதை நீக்குக; இன்னே - இப்பொழுதே;
இரண்டு விஞ்சை - இரண்டு மந்திரங்களை; பெறுக - பெற்றுக்
கொள்க; என நல்கி - என்று அவற்றை (உபதேசம் மூலம்)
கொடுத்தருளி; பின்னரும் - மீண்டும்; குணித்தல் உற்றான் -
வரையறுத்து உரைக்க முற்பட்டான்.
மடிகலார்: காமதேனுவைக் கோசிகன் அடைய முயன்ற காலத்தில்
வசிட்டனால் சபிக்கப்பட்டவன். எஞ்சியவர் நால்வர் மட்டுமே.
சவரர்-சபரர். வேடர். 127
