மிதிலைக் காட்சிப் படலம் - 687

bookmark

சுனச்சேபன் தன் குறையைக் கோசிகனிடம் கூறல்

687.

‘விறப்பொடு வணக்கம் செய்த
   விடலையை இனிது நோக்கி.
சிறப்புடை முனிவன். “என்னே
   தெருமரல்? செப்புக!” என்ன.
“அறப் பொருள் உணர்ந்தோய்! என்தன்
   அன்னையும் அத்தன்தானும்
உறப்பொருள் கொண்டு. வேந்தற்கு
   உதவினர்” என்றான். உற்றோன்.
  
விறப்பொடு   -   சாவின்   அச்சத்தோடு;   வணக்கம்  செய்த
- வணக்கம் புரிந்த;  விடலையை - அந்த இளைஞனை; சிறப்பு உடை
முனிவன் - சீரிய பண்புள்ள  கோசிக  முனிவன்;   இனிது  நோக்கி
-  இனிமை ததும்பப்  பார்த்து;  தெருமரல்  என்னே - (நீ இவ்வாறு
கலங்குவது) என்ன  காரணத்தால்?;  செப்புக - சொல்லுக; என்ன -
என்று  கேட்க;  உற்றோன்  -  (அவனைச்    சரணாக   அடைந்த)
சுனச்சேபன்; அறம் பொருள் -  தரும  நூல்களின்   உட் பொருளை;
உணர்ந்தோய் - அறிந்தவனே; என்தன் -என்னுடைய;  அன்னையும்
- தாயும்; தந்தை தானும் - தந்தையும்; உறப் பொருள்-  மிகுதியான
செல்வத்தை; கொண்டு  - பெற்றுக் கொண்டு; வேந்தற்கு - அம்பரீட
மன்னவனுக்கு;  உதவினர் -  (நரமேத   வேள்விக்காக)    என்னைக்
கொடுத்துவிட்டார்கள்;   என்றான்  -  என்று  (நடந்த  செய்தியைச்)
சொன்னான்.   

சிறப்பு: சரண் அடைந்தவனைக் கைவிடாது காக்கும் உறுதியும் தவ
ஒழுக்கமும்.  அறம்   -   காரியவாகு  பெயர்.  ‘விறப்பே  வெரூஉப்
பொருட்டு மாகும்’ தொல். உரி.52 சேனா.                     124