மிதிலைக் காட்சிப் படலம் - 686

bookmark

சுனச்சேபன் கோசிகனைக் கண்டு வணங்குதல்

686.

‘அவ் வயின் இழிந்து வேந்தன்
   அருங் கடன் முறையின் ஆற்ற.
செவ்விய குரிசில்தானும்
   சென்றனன். நியமம் செய்வான்;
அவ்வியம் அவித்த சிந்தை
   முனிவனை ஆண்டுக் காணா..
கவ்வையினோடும் பாத
   கமலம்அது உச்சி சேர்த்தான்.
 
(அப்பொழுது)  வேந்தன் - அம்பரீடன்; அவ்வயின் - (கோசிகன்
தவம்  புரியும்)  அந்த  இடத்தில்;  இழிந்து  -  தேரிலிருந்து இறங்க;
அருங்   கடன்  முறையின்  -  அரிய  கடைக்காலக்  கடமைகளை
முறைப்படி; ஆற்ற  -  செய்வதற்காக;  செவ்விய குரிசில்தானும்  -
உத்தமனான   சுனச்சேபனும்;  நியமம்  செய்வான்  -  நடுப்பகலில்
வைதிகக்  கடனைச்  செய்யும் பொருட்டு; சென்றனன் - (தேரிலிருந்து
இறங்கிப்)  போனான்;  ஆண்டு  -  (போனவன்)  அந்த  இடத்திலே;
அவ்வியம்  அவித்த  - பொறாமை முதலிய தீக் குணங்களை நீக்கிய;
சிந்தை முனிவனை - தூய மனத்தனான கோசிக முனிவனை; காணா-
கண்டு;  கவ்வையினோடும் - துன்பத்துடனே; பாத கமலம் அது  -
திருவடித் தாமரைகளை; உச்சி சேர்த்தான் -  தலைமேல்  சூடினான்.
 
  கவ்வை: மரண அச்சம்                                 123