ஆனந்தரங்கம் பிள்ளை
வாழ்க்கை வரலாறு ஆனந்தரங்கம் பிள்ளை, சென்னையில் உள்ள பெரம்பூரில் 1709 மார்ச் 30ல் பிறந்தார். இவர் பிள்ளை என்னும் பட்டம் கொண்ட யாதவர் குலத்தை சேர்த்தவர். மூன்று வயதில் தாயை இழந்தார். தந்தை திருவேங்கடம், மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார். அங்கு அரசுப் பணியில் உதவியாளராகச் சேர்ந்து, நாளடைவில் திவானாகப் பதவி உயர்வு பெற்றார். சிறப்புகள் இவர் ஆனந்தரங்கம் பிள்ளை பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் உரைபெயர்ப்பாளராகவும் துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர். 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார். உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ் பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு என்பவரைப் போன்று தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவர் இந்தியாவின் பெப்பீசு எனவும் நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்படுகின்றார். இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளெக்சின் அந்தரங்கப் பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பன்மொழிப் புலவராகவும் இருந்தவர். இவரின் நாட்குறிப்பு மூலம் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டு தென்னிந்திய ஆளுமைகளைப் பற்றியும், முக்கியமான அரசியல், இராணுவ நிகழ்வுகளைப் பற்றியும் அறிய முடிகிறது. இவரது நாட்குறிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன. 18 ஆம் நூற்றாண்டின் வரலாற்றை அறிந்து கொள்ளப் பெரிதும் துணையாக இருப்பது 18 ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் வாழ்ந்த ஆனந்தரங்கம் பிள்ளை (1709 - 1761), ரெங்கப்பத் திருவேங்கடம் பிள்ளை (1737-1791) இரண்டாம் வீரா நாயக்கர் (1755), முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை (1777 - 1801) ஆகிய நால்வரும் எழுதிய நாட்குறிப்புகளாகும். மறைவு ஆனந்தரங்கம் மறைந்து 85 ஆண்டுகள் கழித்தே அவர் எழுதிய நாட்குறிப்புக்கள் கிடைத்தன. இந்த நாட்குறிப்புக்களை 1896 இல் பிரெஞ்சு அரசாங்கம் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளது. இவரின் நாட்குறிப்பு எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது. ஆனந்தரங்கம் தமிழ் மொழியில் பற்றுடையவராகத் திகழ்ந்தார். தமிழிலேயே தான் கையெழுத்திட்டார். நவீன தமிழ் இலக்கியத்தில் அவரது பங்கு முக்கியமானதாகும். இவர் தனது 51 ஆம் வயதில் 1761 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 16 ஆம் நாள் மறைந்தார்.
