மிதிலைக் காட்சிப் படலம் - 683

bookmark

அம்பரீடன் நரமேதத்திற்குத் தக்க
மைந்தனைத் தேடிச்செல்லல்

அம்பரீடன் நரமேதம் செய்ய மகவு பெறுதல்
 
683.

‘குதை வரி சிலை வாள் தானைக்
   கோமகன் அம்பரீடன்.
சுதை தரு மொழியன். வையத்து
   உயிர்க்கு உயிர் ஆய தோன்றல்.
வதை புரி புருடமேதம்
   வகுப்ப ஓர் மைந்தற் கொள்வான்.
சிதைவு இலன். கனகம் தேர்கொண்டு.
   அடவிகள் துருவிச் சென்றான்.
 
குதை   -  குதையுள்ளதும்;  வரி  சிலை  -  கட்டமைந்ததுமான
விற்களையும்; வாள் - வாள்களையும் உடைய; தானை - சேனையோடு
கூடிய;  கோமகன்  -  இராச  குமாரனும்;  சுதை  தரு  மொழியன்
- அமுதம் போன்ற இன்சொற்களை உடையவனும்;  வையத்து  உயிர்
ஆய -  உலகத்தின்  உயிர்களுக்கெல்லாம் உயிர்போல; தோன்றல் -
அன்பில்  சிறந்தவனுமாகிய;  அம்பரீடன்  -  அம்பரீடன் என்பவன்;
வதை புரி - மனிதன் ஒருவனைக் கொன்று; புருட மேதம் வகுப்ப -
ஓமம்  செய்தவனாகிய  புருடமேதம்  செய்வதற்காக;  ஓர்  மைந்தன்
கொள்வான் -  இளைஞன் ஒருவனைப் பொருள் கொடுத்து வாங்கும்
பொருட்டு; சிதைவு இலன் - முயற்சியில் குறைவு அற்றவனாய்; கனகம்
தேர்  கொண்டு - பொற் காசுகளைத் தேரின்மேல் (நிறைய வைத்துக்)
கொண்டு;   அடவிகள்   தோறும் -  காடுகள்  தோறும்;  துருவிச்
சென்றான் - தேடிச் செல்பவனானான்.   

புருட    மேத ஓமம்: யாகம் செய்பவன் அதற்குரிய பசு காணாமற்
போய்  விடுமாயின்.  அதற்கு  ஈடாக  மனிதன் ஒருவனைக் கொன்று.
ஓமம்  செய்து  யாகத்தை  நிறைவேற்றுவது  நூல் துணிபு. வையகத்து
உயிர்க்கெல்லாம்   உயிராய   மன்னவனாய்   இருப்பினும்  வைதிகச்
செயலில்  ஊற்றம்  உடையவனாதலால்  அதனை முடிக்கும்பொருட்டு
ஆளைத் தேட முற்பட்டான்.                               120