மிதிலைக் காட்சிப் படலம் - 680
கோசிகன் வேறாக உலகம் முதலிய படைக்கத்
தொடங்கல்
கௌசிகன் சினத்தினால் வேறோர் உலகு படைத்தல்
680.
“பேணலாது இகழ்ந்த விண்ணோர்
பெரும் பதம் முதலா மற்றைச்
சேண் முழுது அமைப்பல்” என்னா.
“செழுங் கதிர். கோள். நாள். திங்கள்.
மாண் ஒளி கெடாது. தெற்கு
வடக்கவாய் வருக!” என்று.
“தாணுவோடு ஊர்வ எல்லாம்
சமைக்குவென்” என்னும் வேலை.
(சினந்த விசுவாமித்திரன்); பேணலாது - (என் வார்த்தையை)
மதிக்காமல்; இகழ்ந்த - (என்னையும் திரிசங்குவையும்) அவமதித்த;
விண்ணோர் - தேவர்களது; பெரும் பதம் முதலா - பெரிய
பதவி முதலாக; மற்றைச் சேண்முழுது - மற்றை விண்ணுலக
முழுவதையும்; அமைப்பல் என்னா - வேறு படைப்பேன் என்று
சொல்லி; செழுங் கதிர் -(என்னால் படைக்கப்பட்டு என் கட்டளைக்கு
உட்படும்) செழுங்கதிர்களையுடைய கதிரவனும்; திங்கள் - சந்திரனும்;
கோள் - மற்றைய கிரகங்களும்; நாள் - நட்சத்திரங்களும்; மாண்
ஒளி கெடாது - மாட்சிமை மிக்க தத்தம் ஒளி குன்றாமலும்; தெற்கு
வடக்கவாய் - தென்திசை உதயமும் வடதிசை மறைவும்; ஆய்
வருக - உடையனவாகவும் சஞ்சரித்து வருக; என்று - எனக்
கட்டளையும் இட்டு; தாணுவோடு - நிலை இயல் பொருள்களுடேன;
ஊர்வ - இயங்கு இயல் பொருள்களும்; எல்லாம் - ஆகிய
எல்லாவற்றையும்; சமைக்குவென் - (இப்பொழுதே) படைத்திடுவேன்;
என்னும் வேலை - என்று தொடங்கும் பொழுது.
தாணு: நிலை இயல் பொருள். கோள்கள்; அங்காரகன். புதன். குரு.
சுக்கிரன். சனி. இராகு. கேது (சூரியன். சந்திரன்) நாள் - அசுவினி
முதலிய ஒளிகள்: ஆகுபெயர். மாண் ஒளி கெடாது-இடம். காலங்களின்
வேற்றுமைகளால் நேரக்கூடிய ஒளிக்குறைவின்றி என்பது. 117
