மிதிலைக் காட்சிப் படலம் - 675

bookmark

திரிசங்கு கோசிகன்பால் தன்செய்தி தரெிவித்தல்

கௌசிகனிடம் திரிசங்கு தன் செய்தி தெரிவித்தல்
 
675.

‘கானிடைச் சிறிது வைகல்
   கழித்து. ஓர் நாள். கௌசிகப்பேர்க்
கோன் இனிது உறையும் சோலை
   குறுகினன்; குறுக. அன்னான்.
“ஈனன் நீயாவன்? என்னை
   நேர்ந்தது. இவ் இடையில்?” என்ன.
மேல் நிகழ் பொருள்கள் எல்லாம்
   விளம்பினன். வணங்கி. வேந்தன்.
 
கானிடை  -  வனத்திலே;     சிறிது  வைகல்    கழித்து  - 
சில நாட்களைப்  போக்கி;   ஓர்  நாள் -  ஒரு நாள்;  கௌசிகன்
பேர் கோன்  -  கௌசிகன்  என்ற   நாமம்  பெற்ற   இவ்வரசன்;
இனிது உறையும் -   இனிதாகத்   (தவம்     செய்வது)   வசிக்கிற;  
சோலை குறுகினன்  - சோலையைத் (திரிசங்கு  நாடிச்)  சேர்ந்தான்;
குறுக - அணுகிய     அளவில்;   அன்னான்  -   அக்கௌசிகன்;  
ஈனன்  நீ யாவன்   -  சண்டாளனான  நீ யார்; இவ்  இடையின்
நேர்ந்தது என்னை - இந்த  இடத்திற்கு  வந்ததன் காரணம் என்ன;
என்ன - என்று   வினவ;  வேந்தன்  -  திரிசங்கு;   வணங்கி -
(கௌசிகனை) வணங்கி; மேல் நிகழ்  பொருள்கள்  - முன் நடந்த 
செய்திகள்; எல்லாம் விளம்பினன் - அனைத்தையும் சொன்னான்.  

வசிட்டனுக்குப் பகைவன் விசுவாமித்திரன் என்று கருதித் திரிசங்கு
அவ்  விசுவாமித்திரனை  அடைந்தான்.  மேல்  நிகழ்  பொருள்கள்:
வசிட்ட சாபம் முதலியன.                                  112