மிதிலைக் காட்சிப் படலம் - 674

bookmark

திரிசங்கு யாவராலும் இகழப்படுதல்

674.

‘காசொடு முடியும் பூணும்
   கரியதாம் கனகம் போன்றும்.
தூசொடும் அணியும் முந்நூல்
   தோல் அரும் தோற்றம் போன்றும்.
மாசொடு கருகி. மேனி
   வனப்பு அழிந்திட. ஊர் வந்தான்;
“சீசி” என்றுயாரும் எள்ள.
   திகை்பொடு பழுவம் சேர்ந்தான்.
 
காசொடு  - மணி  மாலைகளும்;  முடியும் - கிரீடமும்; பூணும் -
மற்ற  அணிகளும்;  கரியது  ஆம் -  கரும்  பொன்னான;  கனகம்
போன்றும் -  இரும்பை  ஒத்தும்  (கறுத்த  நிறத்தை    அடைந்தும்);
தூசொடும் - உடுத்த ஆடைகளும்; அணியும் முந்நூல் - தரித்த முப்
புரிநூலும்;  தோல்தரும் -  தேலால் ஆன; தோற்றம் போன்றும் -
தன்மையை  ஒத்தும்;  மேனி -  உடம்பானது;  மாசொடு   கருகி -
அழுக்குடன்  கூடிக்  கறுத்து; வனப்பு அழிந்திட  -  அழகு   கெட
(திரிசங்கு)் ஊர் வந்தான் -தனது நகரம் சேர்ந்த அளவில்  (அப்போது);
சீசி என்று - சீச்சீ என்று; யாரும் எள்ள   -  எல்லாரும்  தன்னை
இகழ்தலால்;  திகைப்பொடு - கலக்கத்தோடு; பழுவம் சேர்ந்தான் -
காட்டை அடைந்தான்.

பூண்ட     அணிகலன்கள் இரும்பினால் இயன்றனவாகவும். உடுத்த
உடையும்  பூணூலும் தோலாகவும் மாறவும். உடல் கருகித் தோன்றவும்
தீரிசங்கு  முன்னை  வடிவம் நீங்கிச் சண்டாள வடிவோடு  அயோத்தி
சேர்ந்தான். அப்போது அவனைக் கண்டு யாவரும் இகழ்ந்தனர். அது
பொறாத அவன் காடு சேர்ந்தான். கரியது ஆம் கனகம் - கரும்பொன்
- இரும்பு.                                               111