மிதிலைக் காட்சிப் படலம் - 664

bookmark

கோசிகன் அம்பெய்ய வசிட்டன் பிரம தண்டத்தை
எதிருமாறு ஏவுதல்

விசுவாமித்திரன் வசிட்டன் போர்
 
664.

‘ஐ - இருபதின்மர் மைந்தர்
   அவிந்தமை அரசன் காணா.
நெய் பொழி கனலின் பொங்கி.
   நெடுங் கொடித் தேர் கடாவி.
கை தொடர் கணையினோடும்
   கார்முகம் வளைய வாங்கி.
எய்தனன்; முனியும். தன் கைத்
   தண்டினை. ‘’எதிர்க’’ என்றான்.
 
(அப்பொழுது);     அரசன்  -  இக்  கௌசிகராசன்;  ஐ  இரு
பதின்மர்மைந்தர் - தன்  புத்திரர்  நூறு  பேர்களும்;  அவிந்தமை
காணா  -  இறந்ததைக்  கண்டு்; நெய் பொழி கனலின் பொங்கி -
நெய் சொரிந்த நெருப்புப் போலச் சீறியெழுந்து; நெடுங்கொடித் தேர்  
- நீண்ட  கொடியமைந்த தன் தேரை; கடாவி - செலுத்தி்; கார்முகம்
வளைய வாங்கி  -   வில்லை   நன்கு  வளைத்து;  கை  தொடர்
கணையினோடும் -  தன்  கையிலிருந்து  தொடர்ச்சியாக விடப்படும்
அம்புகளால்;  எய்தனன்  - (வசிட்டன்மேல்) எய்யத் தொடங்கினான்;
முனியும் - வசிட்ட  முனிவனும்;  தன்  கைத்  தண்டினை  - தன்
கையிலுள்ள;  பிரமதண்டத்தை   நோக்கி; எதிர்க என்றான் -  நீ
அந்த ஆயுதங்களை எதிராக ஏற்றிடு என்று நியமித்தான்.   

கணையினோடு: கணையினால்: ஓடு  கருவிப்  பொருள்.  வளைய
வாங்குதல்: ஒரு பொருட் பன்மொழி.                         101