மிதிலைக் காட்சிப் படலம் - 663
வசிட்டனை எதிர்த்த கோசிகன்புதல்வர் இறத்தல்
வசிட்டனின் சினத்தால் அரச குமாரர் இறப்பு
663.
‘’சுரபிதன் வலி இது அன்றால்;
சுருதி நூல் உணர வல்ல
வர முனி வஞ்சம்’’ என்னா.
‘’மற்று அவன் சிரத்தை இன்னே
அரிகுதும்’’ என்னப் பொங்கி.
அடர்த்தனர்; அடர. அன்னான்
எரி எழ விழித்தலோடும்.
இறந்தனர் குமரர் எல்லாம்.
சினம் மிக்க கோசிக குமாரர்கள்; இது - இவ்வாறு பசுவினிடம்
மிலேச்சர் தோன்றி நமது சேனையை அழித்தது; சுரபி தன் வலியன்று
- காமதேனுவின் வலிமையல்ல; சுருதி நூல் உணர வல்ல - வேதக்
கலைகளை அறியவல்ல; வரமுனி - வரம் பெற்ற வசிட்ட முனிவனது;
வஞ்சம் என்னா - வஞ்சகச் செயலாகும் என்று சொல்லி; அவன்
சிரத்தை - அம் முனிவனது தலையை; இன்னே அரிகுதும் -
இப்பொழுதே அறுத்திடுவோம்; என்ன - என்று வீரமொழி கூறி்;
பொங்கி சினந்து எழுந்து; அடர்த்தனர் - எதிர்த்து
நெருக்கினார்கள்; அடர - அவ்வாறு நெருக்க (அப்போது)்; அன்னான்
- அவ் வசிட்ட முனிவன்; எரி எழ விழித்தலோடும் - தீப்பொறி
பறக்கும்படி கண்களால் விழித்துப் பார்த்த அளவிலே; குமரர் எல்லாம்
- விசுவாமித்திரன் குமாரர் யாவரும்; இறந்தனர் -
மடிந்ததொழிந்தார்கள். 100
