மிதிலைக் காட்சிப் படலம் - 661

bookmark

வசிட்டன் மொழி கேட்ட காமதேனு
சினந்து மயிர் சிலிர்த்தல்

661.

‘’கொடுத்திலென். யானே; மற்று இக் 
   குடைகெழு வேந்தன்தானே
பிடித்து அகல்வுற்றது” என்ன.
   பெருஞ் சினம் கதுவும் நெஞ்சோடு.
‘’இடித்து எழு முரச வேந்தன்
   சேனையை யானே இன்று
முடிக்குவென். காண்டி’’ என்னா.
   மொய்ம் மயிர் சிலிர்த்தது அன்றே.
 
யானே  கொடுத்திலென் - (உனது உடன்பாடு இல்லாமல் உன்னை)
நானே கௌசிகனுக்குக் கொடுக்கவில்லை; இக் குடை கெழு- வெற்றிக்
குடையுடைய; வேந்தன் தானே  - அவ்வரசனே (உன்னை); பிடித்து
அகல்வுற்றது -  பிடித்துக் கொண்டு போகத் தொடங்கிய செயல் இது;
என்ன -என்று முனிவன் விடை கூற; (அது கேட்டு); பெருஞ் சினம்
-  (அப்பசு)  பெருங்கோபம்;   கதுவும்   நெஞ்சோடு  - கொண்ட
மனத்தோடு;  இடித்து  எழும்  முரசம்  -  இடியை  ஒத்து எழுகிற
ஓசையுடைய முரசங்களை;   வேந்தன்   சேனையை   -  கொண்ட
இவ்வரசனது படைகளை;  யானே  இன்று  முடிக்குவென்  - நானே
இன்று  அழித்துவிடுவேன்; காண்டி என்னா - (அதைக்) காண்பாயாக
என்று சபதமிட்டு; அன்றே மொய்ம்மயிர்சிலிர்த்தது - அப்பொழுதே
அடர்ந்த தன் உடம்பின் மயிர்களைச் சிலிர்த்தது.   

அகல்வுற்றது:     தொழிற்பெயர் ‘வருவதாகில் கோவைக் கொண்டு
அகல்க’  என்றதால்  ‘நான்  கொடுக்கவில்லை;  வேந்தனே உன்னைக்
கொண்டு அகல்வுற்றான்’ என்பது பெறப்பட்டது.                 98