மிதிலைக் காட்சிப் படலம் - 660

bookmark

காமதேனுவைக் கோசிகன் கைப்பற்ற
அது வசிட்டனை உசாவுதல்

விசுவாமித்திரன் சுரபியைப் பற்ற அதன் மேனியிலிருந்து வெளிவந்த விரர் பொருதல்
 
660.

‘’பணித்தது புரிவென்’’ என்னா.
   பார்த்திபன் எழுந்து. பொங்கி.
பிணித்தனன் சுரபிதன்னை;
   பெயர்வுழி. பிணியை வீட்டி.
‘’மணித் தடந் தோளினார்க்குக்
   கொடுத்தியோ. மறைகள் யாவும்
கணித்த எம் பெரும?’’ என்ன.
   கலை மறை முனிவன் சொல்வான்:
 
(அது     கேட்டு) பார்த்திபன் - கௌசிக மன்னவன்; பணித்தது
புரிவென் - முனிவன் சொன்ன. மொழிப்படியே செய்வேன்; என்னா -
என்று; எழுந்து  பொங்கி  - உற்சாகத்தோடு எழுந்து; சுரபிதன்னை
- அந்தக்  காமதேனுவை;  பிணித்தனன்  -   பிணித்துக்  கொண்டு;
பெயர்வுழி -  புறப்படும் பொழுது;  பிணியை வீட்டி - (அந்தப் பசு)
கட்டை அறுத்துக் கொண்டு. வசிட்டனை நோக்கி; மறைகள் யாவும் -
வேதங்களை எல்லாம்; கணித்த எம்பெரும - ஆராய்ந்து  அளவிட்டு
அறிந்த   எம்பெருமானே; மணித்தடம்  தோளினாற்கு -   அழகிய
தோள்களையுடைய விசுவாமித்திரனுக்கு; கொடுத்தியோ  -   என்னை
அளித்து விட்டாயோ; என்ன - என்று கேட்க; கலை மறை முனிவன்
- தருமநூல் முதலிய கலைகளையும் வேதங்களையும் அறிந்த வசிட்டன்;
சொல்வான் - விடை கூறுபவன் ஆனான்.   

வீட்டுதல்:     விடுவித்தல் மணி:  கருவியாகு  பெயர்  (இரத்தின
அணிகள்)  வேதம் வல்ல அந்தணன் அரசனுக்குக் கோதானம் புரிதல்
தகாது என்பது புலப்பட நின்றது.                            97