மிதிலைக் காட்சிப் படலம் - 590
590.
‘பெருந் தேன் இன் சொல் பெண் இவள்
ஒப்பாள் ஒரு பெண்ணைத்
தரும் தான்’ என்றால். நான்முகன்
இன்னும் தரலாமே?-
அருந்தா அந்தத் தேவர்
இரந்தால். அமிழ்து என்னும்
மருந்தே அல்லாது. என் இனி
நல்கும் மணி’ ஆழி?
பெருந்தேன் இன்சொல் - பெருமை மிக்க தேன் போன்ற இனிய
சொல்லையுடைய; பெண் இவள் ஒப்பாள் - இந்தப் பெண்ணை
ஒப்பவளான; ஒரு பெண்ணைத் தான் த(£)ரும் - (சிறந்த)
ஒரு பெண்ணை நீ படைத்துத் தருக; என்றால் - என்று (தேவர்கள்
திரண்டு வந்து) வேண்டினாலும்; நான்முகன் இன்னும் தரலாமே
- (படைத்தல் கடவுளான) நான்கு முகங்களையுடைய பிரமனால்தான்
இனிமேல் படைக்க முடியுமோ? (முடியாது); அருந்தா - (அமுதத்தைத்
தவிர வேறொன்னையும்) உண்ணாத; அந்தத் தேவர் - சிறப்புடைய
அத்தகைய தேவர்கள்; இரந்தால் - (திரண்டு வந்து) வேண்டினாலும்;
மணி ஆழி - இரத்தினங்களுக்கு இருப்பிடமான கடல்; அமிழ்து
என்னும் - அமுதம் என்று சொல்லக்கூடிய; மருந்தே அல்லாது
- சிறந்த மருந்தையே மீண்டும் கொடுப்பதல்லாமல்; இனி என் நல்கும
-இனி வேறு எதனைக் கொடுக்க இயலும்?
எடுத்துக் காட்டு உவமையணி: அமுதத்தை அல்லாமல் அதை
விடச் சிறந்த ஒரு பொருளைக் கடலால் தர முடியாது:
அதுபோலத்தான் படைத்துப் பழகிய மாதரைப் போன்ற
பெண்களையல்லாமல் இச் சீதையைப் போன்ற சிறந்த மங்கை
ஒருத்தியைப் பிரமனாலும் படைக்க இயலாது. இன்னும்-இதுவரை
படைக்கப்பட வில்லை என்பதை உணர்த்தும். 27
