மிதிலைக் காட்சிப் படலம் - 591

bookmark

591.

அனையாள் மேனி கண்டபின்.
   அண்டத்து அரசு ஆளும்
வினையோர் மேவும் மேனகை
   ஆதி மிளிர் வேற் கண்
இனையோர். உள்ளத்து இன்னலியோர்;
   தம் முகம் என்னும்
பனி தோய் வானின் வெண்மதிக்கு
   என்றும் பகல் அன்றே?
 
அண்டத்து   - விண்ணுலகில்; அரசு ஆளும் - ஆட்சிபுரிகின்ற;
வினையோர்  -  நல்வினையுடைய  இந்திரன்  முதலான  தேவர்கள்;
மேவும் - விரும்புகின்ற;  மேனகை  ஆதி  -  மேனகை முதலான;
மிளிர்வேல்  கண் - ஒளிமிக்க  வேல்  போன்ற கண்களையுடைய ;
இனையோர்  -  இத்  தெய்வப்  பெண்கள்;  அனையாள்  மேனி
- அந்தச்சீதையின் மேனியழகை;   கண்டபின்   -  பார்த்த  பின்பு;
உள்ளத்து  இன்னலினோர் -  (தத்தம்  அழகெல்லாம் சேர்ந்தாலும்
அவளது  அழகு  ஒன்றுக்கும்  ஈடாகாது  என்று  அறிந்து) மனத்தில்
சஞ்சலத்தைக் கொண்டவரானார்கள்; ?தம் முகம் என்னும் - (மேலும்)
அந்த  மேனகை  முதலான  பெண்களின்  முக மண்டலம் என்கின்ற;
பனிதோய் வானின் - குளிர்ச்சி நிறைந்த வானத்தில்; வெண்மதிக்கு
- விளங்கும் வெண்ணிறமான சந்திரமண்டலத்திற்கு;  என்றும்  பகல்
அன்றே -  (பகல்    இரவு    என்னும்   வேறுபாடு    இல்லாமல்)
எப்பொழுதும் பகலாகவே இருக்கும்.   

தெய்வப்     பெண்கள் முகம்: மேனகை முதலான தெய்வ மகளிர்
சீதையின்  மேனியழகைக்கண்டு  நம்முடைய அழகு இதற்கு ஈடாகாது
என்று  மனம் வாடினர். அதனால் அவர்களின் முகம் பகல்நிலாவைப்
போல எப்பொழுதும் ஒளி மழுங்கியிருக்கும் என்பது கருத்து.     28