மிதிலைக் காட்சிப் படலம் - 567
துகில் கொடித் தோற்றம்
567.
பகல் கதிர் மறைய. வானம்
பாற்கடல் கடுப்ப. நீண்ட
துகில் கொடி. மிதிலை மாடத்து
உம்பரில் துவன்றி நின்ற.
முகில் - குலம் தடவும்தோறும்
நனைவன. முகிலின் சூழ்ந்த
அகில்புகை கதுவும்தோறும்
புலர்வன. ஆடக் கண்டார்.
பகல் கதிர் மறைய- பகற்பொழுதிற்குக் காரணமான கதிரவனின்
ஒளிக்கதிர்கள் மறையவும்; வானம் பாற்கடல் கடுப்ப - வானம்
திருப்பாற்கடலைப் போன்று காட்சியளிக்கவும்; மிதிலை மாடத்து
உம்பரில் - மிதிலை நகரின் உப்பரிகை வீடுகளின் மேல்; துவன்றி
நின்ற - நெருங்கிய; நீண்ட துகில் கொடி - நீளமான கொடிச்
்சீலைகள்; முகில் குலம் - மேகக் கூட்டம்; தடவும் தோறும் -
(தம்மை வந்து) வருடும் பொழுதும்; நனைவன - அதன் நீரினால்
நனைவனவாகவும்; முகிலின் சூழ்ந்த - (அம்) மேகம்போலச்
சூழ்ந்து கொண்ட; அகில்புகை கதுவும் தோறும் - அகிற் கட்டையின்
புகை (தம்மில் வந்து) படியும் பொழுதும்; புலர்வன - உலர்
வனவாகவும்; ஆடக் கண்டார் - ஆடுதலைப் பார்த்தார்கள்.
கொடிகளின் நெருக்கம். மிகுதி. மேகக் கூட்டத்தை அளாவும்
உயர்ச்சி. அகிற்புகையின் மிகுதி ஆகியன இதில் உணர்த்தப்
பெறுகின்றன. அணி: தொல்லுப்பெறலணி-துகிற்கொடி மேகங்களால்
நனைவதும். அகிற் புகையால் உலர்ந்து பழைய நிலையை அடைவதும்
இவ்வணியாகும். பாற்கடலும் துகிலும்: ‘பாற்கடல் போன்ற துகில்’
என்றதால் துகில் வெண்ணிறமுடையது என்பது தெரிகிறது. 3
