மிதிலைக் காட்சிப் படலம் - 566
மிதிலையுள் மூவரும் கண்ட காட்சிகள் (566-584)
யானைப் போர்
566.
தயிர் உறு மத்தின் காம
சரம் பட. தலைப்பட்டு ஊடும்
உயிர் உறு காதலாரின்.
ஒன்றை ஒன்று ஒருவகில்லா.
செயிர் உறு மனத்த ஆகி.
தீத் திரள் செங் கண் சிந்த.
வயிர வான் மருப்பு யானை
மலை என மலைவ கண்டார்.
காம சரம்பட- மன்மதனது அம்பு வந்து தாக்குவதால்; (மனம்
கலங்கி) தயிர் உறு மத்தின் - தயிர் கடையும் மத்தைப் போல;
ஊடும் - (புணர்ச்சியின்பத்திற்குப்பின் ஊடே விளையாட்டாக
ஒருவரைஒருவர்) பிணக்குக் காட்டி; தலைப்பட்டு - (ஒருவரோடு
ஒருவர்) புணரத் தொடங்கி; உயிர் உறு காதலாரின் - (ஒருவர்க்கு
ஒருவர்) உயிரைப் போன்ற அன்புள்ள மனைவி கணவன் போல;
வயிர வால் மருப்புயானை - வயிரம் போன்ற உறுதியும்
வெண்மையான தந்தங்களும் உடைய யானைகள்; செயிர் உறு -
கோபம் மிகுந்த; மனத்த ஆகி - மனத்தை உடையவனாய்; செங்கண்
தீத்திரள் - (கோபத்தால்) சிவந்த கண்கள் நெருப்புத்திரளை
உமிழும்படி; ஒன்றை ஒன்று - ஒன்றை ஒன்று விட்டு; ஒருவகில்லா
- நீங்காமல்; மலை என மலைவ - இருமலைகள் (ஒன்றோடு ஒன்று
போர் செய்வன) போலப் போர் செய்வதை; சுண்டார் - பார்த்தார்கள்.
யானைப்போர்: அந் நகர மைந்தர்களால் வேடிக்கைக்காக
விடப்பட்ட யானைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிடுகின்றன. அணி:
உவமையணி-ஆண்பெண் தம் மனத்தில் பகையுணர்ச்சி இல்லாதிருக்கவும்
புணர்ச்சிக் காலத்து ஒருவரோடு ஒருவர் பிணக்குக் கொள்வது போல.
யானைகள் தம் மனத்தில் பகை கொள்ளாதிருக்கவும் வெளிப்
பார்வைக்கு விளையாட்டாகப் பகையை விளைத்துக்கொண்டு போர்
செய்தன. மத்து. மன்மத பாணம் - மத்து. தயிரைக் கலக்குவது போல
மன்மதனது அம்பு மனத்தைக் கலக்குகிறது. மலை. யானை: பருமை.
வலிமை. கம்பீரமான தோற்றம். மதநீர் பொழிதல் ஆகியன பற்றி
மலையானது யானைக்கு உவமையாயிற்று. 13
