மகாலட்சுமியின் தோற்றம்
மகாலட்சுமியின் தோற்றம் ஒருபுறம் இவ்விதமாக சென்று கொண்டிருக்க மறுபுறம் பிருகு முனிவர் தன்னுடைய மனைவியான கியாதியிடம் தாதா, விதாதா என்ற இரு பிள்ளைகளையும், ஸ்ரீமந் நாராயணனுக்கு பிரியமான பத்தினியாக இருக்கக்கூடிய ஸ்ரீதேவியை பெற்றாள். இதைக் கேட்டு கொண்டிருந்த மைத்ரேய முனிவருக்கு மீண்டும் குழப்பங்கள் ஏற்பட தொடங்கின. அதாவது ஸ்ரீமந் நாராயணனின் துணைவியான ஸ்ரீதேவி என்பவள் அதாவது மகாலட்சுமி ஆனவள் திருப்பாற்கடலில் அவதரித்தார் என்பது உலகம் அறிந்த விஷயம் ஆயிற்றே. அவ்விதம் இருக்கும்பொழுது பிருகு முனிவருக்கு ஸ்ரீதேவியானவள் மகளாக பிறந்தார் என்பது பொருத்தம் இல்லாததாக இருக்கின்றது என்று எண்ணி அதை தன்னுடைய குருநாதரான பராசரரிடம் வினாவினார். மைத்ரேய முனிவர் வினாவிய கேள்விக்கு விடையளிக்கும் பொருட்டு பராசரர், மைத்ரேயரே! உலக மாதாவாக இருக்கக்கூடிய பிராட்டியானவள் என்றைக்கும் ஸ்ரீவிஷ்ணுவை விட்டு பிரியாத வகையில் நிலையாகவும் இருக்கின்றவள். அவளுக்கு பிறவிகள் என்பது ஏதும் கிடையாது. அவளும் எம்பிரானை போல் அவதரிப்பது, மறைவதுமாக இருக்கக்கூடியவள். இந்த பிரபஞ்ச தோற்றத்தில் அனைத்திலும் நிறைந்து இருக்கக்கூடிய எம்பெருமானான ஸ்ரீமந் நாராயணனை போலவே தேவி பிராட்டியும் சகலவிதமான கல்யாண குணங்களோடு விளங்கக்கூடியவள். அனைத்து பூதங்களுக்கு தாயாகவும் இருக்கக்கூடியவள். சகல சௌபாக்கியம் நிறைந்து இருக்கக்கூடிய தம்பதிகளாக விளங்கக்கூடிய ஸ்ரீமந் நாராயணனுக்கும், லட்சுமி தாயாருக்கும் இடையே நிகழ்ந்த வைபவத்தை பற்றி உமக்கு யாம் எடுத்து வைக்கின்றோம் கேட்பாயாக!நாம் பேசுகின்ற ஒவ்வொரு சொல்லிலும் புதைந்திருக்கக்கூடிய பொருள் என்பது ஸ்ரீமந் நாராயணன். அந்த பொருளை தெரிவிக்கக்கூடிய சொல் என்பது பிராட்டியார். உலக உயிரினத்தில் வழங்கப்படுகின்ற நீதி என்பது பிராட்டியாவாள். அந்த நீதியின் உபாயமாக விளங்கக்கூடியவர் ஸ்ரீமந் நாராயணன். மனிதனை மற்ற உயிரினங்களிலிருந்து வேறுபடுத்தி காட்டக்கூடியது என்பது புத்திசாலித்தனமாகும். அந்த புத்திசாலித்தனம் என்பது நமது தாயாரான பிராட்டியாவாள். அந்த புத்தியினால் உருவாகக்கூடிய கர்மங்களின் பலன் என்பது ஸ்ரீமந் நாராயணன். தர்மம் என்பது ஸ்ரீமந் நாராயணன் ஆகும். அந்த தர்மத்திற்கு தேவையான சத்கிரிகைகள் ஆக இருப்பது ஸ்ரீதேவியாவாள். (சத் - உண்மையான மாறாத நிலைத்து இருக்கக்கூடியது.கிரியை - செயல்) இந்த பிரபஞ்சத்தில் தோன்றி இருக்கக்கூடிய அனைத்து பொருள்களையும், உயிரினங்களையும் படைப்பவன் ஸ்ரீமந் நாராயணன். ஆனால், அந்த படைப்பு சக்தியாக இருக்கக்கூடியவள் ஸ்ரீதேவி ஆவாள்.மனிதர்களிடத்தில் தோன்றக்கூடிய இச்சை என்பது ஸ்ரீதேவி ஆவாள். காமத்தை உருவாக்குபவன் ஸ்ரீமந் நாராயணன்.(இச்சை - மனதில் தோன்றும் ஆசைகள், பொருள்களின் மீதான ஆர்வம், ஏக்கம். காமம் - வாழ்க்கையில் அடைய வேண்டிய குறிக்கோள்கள்.) உலகத்தில் இருக்கக்கூடிய இயற்கை என்பவன் ஜெகநாதன் ஆகும். அந்த ஜெனநாதனுக்கு கொடுக்கக்கூடிய தட்சணை என்பது ஜெகன் மாதாவாகும்.பிராக்குவம்சம் என்பது மதுசூதனன் ஆவான். பத்தினி சாலை என்பது ஸ்ரீதேவி ஆவாள். எம்பெருமான் தர்ப்பை என்றால் பிராட்டியானவள் சமித்தாவாள். சாம வேதம் என்பது ஸ்ரீமந் நாராயணன் எனில் அதில் இணைந்து இருக்கக்கூடிய உத்கீதி என்பது லட்சுமி ஆவாள். வாசுதேவன் அக்னி என்றால் இந்திரை ஆனவள் சுவாகா தேவி. ஸ்ரீமஹாவிஷ்ணு சங்கரன் என்றால் ஸ்ரீ மகாலட்சுமியே ஸ்ரீகௌரி தேவியாவாள். இந்த உலகெங்கும் ஒளியை அளிக்கக்கூடிய சூரியன் கேசவன் என்றால் அதில் இருக்கக்கூடிய பிரபையே கமலை ஆவாள். உலகெங்கும் பரந்து விரிந்திருக்கும் ஆகாயம் என்பது ஜெகன்மாதா என்றால் அதன் விஸ்தாரமான பரப்பு என்பது விஷ்ணு ஆவார். இரவில் புலப்படக்கூடிய சந்திரன் என்பவன் ஸ்ரீவிஷ்ணு என்றால் அந்த சந்திரனிலிருந்து வெளியாகக்கூடிய காந்தி ஆகிய நிலவு ஸ்ரீதேவி ஆவாள்.இந்த அகிலம் எங்கும் பரவி இருக்கக்கூடிய வாயுவானவன் ஸ்ரீஹரி என்றால் அந்த வாயுவினால் செய்யப்படக்கூடிய செயல்கள் என்பது திருமகள் ஆவாள்.நாம் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அகிலத்தில் பெரும் பரப்பளவு கொண்டிருக்கக்கூடிய சமுத்திரம் கோவிந்தன் என்றால் அந்த சமுத்திரத்தில் தோன்றி கொண்டிருக்கக்கூடிய அலை என்பது ஸ்ரீதேவி ஆவாள். மதுசூதனாக தேவேந்திரனாக இருக்கின்றார் என்றால் இந்திரையாக இந்திராணி இருக்கிறாள். சக்கரதாரனாக எமன் இருந்தால் அவரின் துணைவியாக கமலையே இருக்கின்றாள். (சக்கரதாரன் - சக்கரத்தை தரித்த திருமால்) தரணியை ஆளுகின்ற ஸ்ரீதரன் குபேரன் என்றால் அந்த குபேரனிடம் சேருகின்ற பேரும் செல்வம் என்பது ஸ்ரீதேவி ஆவாள். லட்சுமிதேவியே வருணனின் பத்தினியான கவுரி தேவியாவாள். கோவிந்தனே தேவ சேனாதிபதியாக இருக்கக்கூடிய கந்தன் என்றால் இந்திரையே தேவசேனை ஆவாள். எந்தவொரு பொருளையும் தாங்கிப்பிடிக்க கூடிய பிடிப்பு என்பது கதாதரன் என்றால் அதற்கு காரணமான சக்தியாக இருக்கக்கூடியவள் என்பது ஸ்ரீதேவியாவாள்.நிமிடம் என்பது நாராயணன் என்றால் அந்த நிமிடத்தில் மறைந்திருக்கக்கூடிய வினாடி என்பவள் லட்சுமி ஆவாள். முகூர்த்தம் என்பது வாசுதேவன் என்றால் அந்த முகூர்த்தத்தின் அவயங்களாக இருக்கக்கூடிய கலை என்பது லோகமாதா ஆவாள். திருவிளக்கு என்பது சர்வேஸ்வரன் என்றால் அதன் காந்தி என்பது லோகநாயகி ஆவாள். மகாவிஷ்ணு என்பவர் விருட்சம் என்றால் ஸ்ரீதேவி என்பவள் கொடி ஆவாள். சக்கரதாரன் பகலாக இருந்தால் ஸ்ரீகமலை என்பவள் இரவாவாள். மகாவிஷ்ணு மணமகன் என்றால் ஸ்ரீதேவி என்பவள் மணமகளாவள். நதிகளின் சொரூபமாக ஸ்ரீமந் நாராயணன் இருக்கின்றார் என்றால் ஸ்ரீதேவி என்பவள் நதிகளின் சொரூபையாக இருக்கின்றாள். லோபமாக நாராயணன் இருக்கின்றார் என்றால் அதில் உருவாகக்கூடிய ஆசை என்பவள் லட்சுமியாக இருக்கின்றாள். ராகம் என்பது கோவிந்தன் என்றால் அதன் காரணமாகிய காதல் என்பது ஸ்ரீதேவி ஆவாள். இவ்விதமாக பலவிதங்களில் எடுத்துரைத்தாலும் இந்த தம்பதிகளை பற்றி எவ்வளவு எடுத்துரைத்தாலும் குறைவு என்பதே இருக்காது இவர்களின் விபூதியை பற்றி சுருக்கமாக சொல்கிறேன் கேட்பாயாக!தேவதைகளிலும், மனிதர்களிலும், திரியக்கு உயிரினங்களிலும் மற்றும் வஸ்துகளிலும் உள்ள ஆண்பால் என்பதை எல்லாம் ஸ்ரீமந் நாராயணனின் அம்சமான ஹரியின் சொரூபமாகும். அனைத்து உயிரினங்களிலும் இருக்கக்கூடிய ஸ்திரி லிங்கத்தின் சொரூபம் என்பவை எல்லாம் ஸ்ரீதேவி ஆவாள்.இவர்களை விடுத்து வேறு எந்தவொரு வஸ்துவும் இல்லை. உலகில் இருக்கக்கூடிய அனைத்தும் அவர்களிடத்தில் வியாபிக்கப்பட்டு அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட விபூதியாகவே இருக்கின்றன. (விபூதி - அனைத்து வகையிலும் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட வஸ்து ஆகும்.) இவ்விதமாக ஜெகன் மாதாவும், ஜெகநாதன் இருக்கும்பொழுது எவ்விதம் பாற்கடலிலிருந்து லட்சுமி பிராட்டியார் வெளிவந்தார்? என்பதை பற்றி யாம் உமக்கு கூறுகின்றோம். இந்த திரு அவதார சரித்திரத்தை நான் மரீசி மாமுனிவரிடம் கேட்டு அறிந்ததை உமக்கு கூறுகின்றேன் என்று கூறினார் பராசர முனிவர்.
