பூதத்தை வஞ்சம் தீர்த்த காம சுந்தரி
சகோதரர்கள் இருவரும் அமைதி இழந்த நிலையில் கடலைப் பார்த்தபடி அமர்ந்து இருந்தார்கள். தம்பி ஷாஜமான் செய்தது போலவே தனது மனைவியையும் அவளது அடிமைக் காதலனையும் வெட்டி விடலாமா என்ற கோணத்தில் யோசித்துக் கொண்டு இருந்தான் ஷாரியர். கடலைப் போலவே அவனது மனதிலும் வலுவான அலைகள் பொங்கி எழுந்து கொண்டு இருந்தது. ஷாஜமான் அண்ணனை அமைதிப் படுத்த எவ்வளவோ முயற்சி செய்தும் பலனில்லை. ஒரு கட்டத்தில் கடலில் விழுந்து இறந்து விடலாமா என்று கூட நினைத்தான் ஷாரியர்.
இந்நிலையில் கடலில் இருந்து ஆழிப் பேரலைகள் எழுவது போன்ற ஒரு பேரொலி கேட்டது. அதைக் கேட்ட சகோதரர்கள் இருவரும் பயந்து தான் போனார்கள். அத்துடன் சில கணங்களில் கடலில் இருந்து வானத்தை நோக்கிப் பெரிய தூண் போன்ற ஒன்று மேலே செல்வதைக் கண்டு இருவரும் அஞ்சினார்கள். கடல் பொங்குவதன் அறிகுறி இது தான் என்று அந்த இருவரும் கூறிக் கொண்டார்கள். இறுதியில் இருவரும் இன்னும் கொஞ்ச நாள் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருவரை ஒருவர் பயத்துடன் பார்த்துக் கொண்டனர்.
அப்போது ஷாஜமான் தனது அண்ணிடம் "அண்ணா கடல் பொங்கப் போவது போலத் தெரிகிறது. தவறு செய்தவர்களே மனம் கலங்காத போது நாம் மட்டும் ஏன் கலங்க வேண்டும்? வாருங்கள் அண்ணா இங்கு இருந்து ஓடிச் சென்று அதோ அந்த மரத்தின் மீது ஏறிக் கொள்வோம். முடிந்தவரையில் நமது உயிரைக் காத்துக் கொள்ளப் போராடுவோம். நம்மால் இப்போதைக்கு வெகு தூரம் ஓட முடியாது" என்றான்.
ஷாரியர் தம்பியின் வார்த்தைகளின் படியே அவனுடன் ஓடிச் சென்று அவன் சொன்ன அந்த மரத்தின் மீது ஏறிக் கொண்டான். பின்னர் இருவரும் அங்கு என்ன தான் நடக்கப் போகிறது என்று கூர்ந்து பார்க்கத் தொடங்கினார்கள்.
உண்மையில் அவ்விடத்தில் முன்பு அலை போலத் தோன்றியது அலையே அல்ல. உண்மையில் அது ஒரு பெரிய பூதம். பிறகு தான் அதனை அந்தச் சகோதரர்கள் இருவரும் கண்டு உணர்ந்தார்கள். பின்னர் அந்த பூதம் என்ன தான் செய்யப் போகிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்க்கத் தொடங்கினார்கள்.
கடலில் இருந்து வெளிப்பட்ட அந்த பூதம் ஒரு பெரிய பெட்டகத்துடன் கரையை வந்து அடைந்தது. அதனைப் பார்த்த அரசர்கள் இருவரும் உண்மையில் மீண்டும் ஒரு முறை பயந்து தான் போனார்கள். எனினும், தங்கள் இறைவனின் மீது பாரத்தைப் போட்டு சலனம் இல்லாமல் இருந்தார்கள்.
மறுபுறம் அந்தப் பூதம் தன்னிடம் இருந்த ஏழு சாவிகளையும் எடுத்து ஒவ்வொரு சாவியாக போட்டுத் திறந்து கடைசியில் ஏழாவது மரப் பெட்டியைத் திறந்து விட்டது. அந்தப் பெட்டகத்தின் உள்ளே ஒரு பெரிய பேழை ஒன்று காணப்பட்டது. அதனை ஆசையுடன் அந்தப் பூதம் திறந்தது. அப்போது அந்தப் பெட்டகத்தில் இருந்து ஒரு அழகான பெண் ஒருத்தி வெளிப்பட்டாள். அவளைக் கண்ட மாத்திரத்தில் அந்த பூதம் மகிழ்ச்சியில் குது களித்தது.
பிறகு அந்த அழகிய பெண்ணைப் பார்த்து அந்த பூதம், "பெண்ணே! உன்னுடைய திருமணம் ஆன அன்றைய இரவே உன்னை யாருக்கும் தெரியாமல் தூக்கி வந்து விட்டேன். இப்போதும் கூட உன்மீது நான் கொண்ட அந்த மையல் குறையவில்லை. நீ இங்கே உட்காரு, உனது அழகிய மடியில் நான் கொஞ்ச நேரம் படுத்துக் கொள்கிறேன்" என்றது.
அதற்கு அந்தப் பெண்ணும் சம்மதித்து, பூதத்தைத் தனது மடியில் படுக்க வைத்துக் கொண்டாள். அந்த அழகான பெண்ணின் மடியில் படுத்துக் கொண்டு அந்த பூதம் சிறிது நேரத்திற்கெல்லாம் கண் அசந்து நன்றாகத் தூங்கி விட்டது.
பின்னர் அந்த பூதம் தூங்கிய மாத்திரத்தில் அதன் தலையின் பாரத்தைத் தாங்க முடியாத அந்த அழகி அருகில் கிடந்த ஒரு கல்லின் மீது அந்த பூதத்தின் தலையை தலையணை போல வைத்து விட்டு அங்கும், இங்கும் பார்த்தாள். அப்போது மரத்தின் மீது அமைதியாக அமர்ந்து இருந்த அரச குமாரர்கள் இருவரையும் அந்த அழகி கண்டாள். அவர்களைக் கண்ட மாத்திரத்தில் அவர்கள் மீது மோகம் கொண்டாள். அத்துடன் அவர்களை அருகில் அழைத்தாள். ஆனால், சகோதரர்கள் இருவரும் அவ்விடத்திற்கு வர மறுத்தனர். அதைக் கண்ட அந்த அழகி அவர்கள் இருவரையும் எப்படியும் கீழே அழைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களைப் பார்த்து," மரியாதையாக இருவரும் இறங்கி வந்து விடுங்கள் இல்லையேல் பூதத்தை எழுப்பி விடுவேன். அது உங்கள் இருவரையும் கொன்று தின்று விடும்" என்பதைப் போல சைகை காட்டிக் கூறி இறங்கச் சொன்னாள்.
அவள் காட்டிய சைகையின் அர்த்தத்தை உணர்ந்த அந்த இரு சகோதரர்களும் வேறு வழி இன்றி மரத்தை விட்டு மெல்ல இறங்கினார்கள். அவள் அருகில் வந்தார்கள். அந்தப் பெண் மோகனப் புன்னகையுடன் சகோதரர்கள் இருவரில் முதலில் ஷாரியரை தேர்ந்தெடுத்தாள் அத்துடன் அவருடன் உறவு கொண்டு மகிழ்ந்தாள். பிறகு ஷாஜமானை அருகில் அழைத்தாள் அவனோ பூதம் எழுந்து விடுமோ எனப் பயந்து பயந்து அவளை நெருங்கினான். அதனை நாசுக்காகப் புரிந்து கொண்ட அந்தப் பெண், ஷாஜமானிடம்," பயம் கொள்ளாதீர்கள். நான் எழுப்பாதவரை அந்தப் பூதம் எழுந்திருக்காது. அத்துடன் அந்தப் பூதம் எப்போது உறங்கும், எப்போது விழிக்கும் என்பதை நான் நன்கு அறிவேன்" என்றாள். பிறகு சிறிது நேரத்தில் ஷாஜமானை அணைத்துக் கொண்டாள். அந்தப் பிடியில் இருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. அத்துடன் அந்த சமயத்தில் அப்படிப் பட்ட ஒரு தழுவல் உண்மையில் அவனுக்குத் தேவைப் பட்டது. குளிர்ந்த இரவில் அவளது அந்த மேனியின் கதகதப்பு அவனுக்கு இன்பத்தை அள்ளி, அள்ளி வழங்கியது. ஆசை தீர அந்தப் பெண் ஷாஜமானை வேட்டை ஆடினாள். அவனும் போதும், போதும் என்று களைத்துப் போனான்.
இப்படியாக அந்தப் பெண் ஒருவளாக சகோதரர்கள் இருவருடனும் உல்லாசமாக இருந்தாள். அதன்பின்னர் அவள் தன்னிடமுள்ள ஒரு பையை எடுத்தாள். அதில் நிறைய மோதிரங்கள் சேர்க்கப்பட்ட ஒரு மாலை இருந்தது. அவள் அந்த மோதர மாலையை சகோதரர்கள் இருவரிடமும் காண்பித்துப் பேசத் தொடங்கினாள்.
"இதோ பாருங்கள். இதில் தொண்ணூற்று எட்டு மோதிரங்கள் உள்ளன. அதாவது இந்தக் கையால் ஆகாத கிழட்டு பூதத்தை ஏமாற்றி நான் இது வரையில் தொண்ணூற்று எட்டு காளையர்களுடன் உறவு கொண்டு இருக்கிறேன். அத்துடன் உடலுறவு கொண்டதற்கு அடையாளமாக அவர்களிடம் இருந்து ஒரு மோதிரத்தைப் பெற்றுக் கொள்வேன். அந்தவகையில் இப்போது உங்களுடனும் உறவு வைத்துக் கொண்டதற்கு அடையாளமாக நீங்களும் கூட ஆளுக்கொரு மோதிரத்தை எனக்கு இப்போதே தந்தாக வேண்டும்" என்று கூறினாள்.
அதைக் கேட்ட சகோதரர்கள் இருவரும் தங்களது கைகளில் இருந்த மோதிரத்தை கழற்றி அந்த அழகியிடம் கொடுத்தனர்.
"இத்துடன் நூறு!" என்று கூறி குறும்பாக சிரித்தபடி அந்த மோதிரத்தைத் தனது மாலையில் சேர்த்துக் கொண்டாள் அந்த அழகி. பின்னர் தனது சோகக் கதையை அந்த சகோதரர்கள் இருவரிடமும் இவ்வாறு பகிரத் தொடங்கினாள்.
"நான் ஒரு வணிகனின் மகள். நான் வயதுக்கு வந்தவுடனேயே எனக்குத் திருமணம் நிச்சயம் செய்தார்கள். என்னுடைய தந்தையின் எண்ணம் போல் எனக்கு அழகிற் சிறந்த ஒரு மணமகனை தேர்வு செய்து அவனுடன் எனக்குத் திருமணத்தை நடத்தினார்கள். அந்தத் திருமணமும் மிகவும் கோலாகலமாக நடந்தது. எங்கள் முதல் இரவை நடத்துவதற்கு ஒரு எட்டடுக்கு மாளிகையை ஏற்பாடு செய்து இருந்தார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நானும் ஆசை, ஆசையாகக் காத்துக் கொண்டு தான் இருந்தேன். அதன் படி எனது கணவரும் எனது அறைக்குள் வந்தார். அவர் ஆசையுடன் என்னை நெருங்கினார்.
அந்த நேரம் பார்த்து எங்கிருந்தோ வந்த இந்தக் கிழட்டுப் பூதம் எனது உடல் வனப்பில் ஆசை கொண்டு திடீர் என எங்களது அறைக்குள் வந்தது. நான் பூதத்தைப் பார்த்து அலறினேன். உடனே எனது கணவர் வாளை எடுத்தார். அதற்குள் இந்தப் பாழாய்ப் போன பூதம் எனது கணவரைக் கொன்று விட்டது. அத்துடன் என்னையும் கவர்ந்து சென்று விட்டது. இதெல்லாம் போதாது என்று என்னை ஒரு பெரிய பேழையில் வைத்துப் பூட்டி அந்தப் பேழையை இன்னொரு ஏழு அடுக்குப் பெட்டகத்தில் வைத்துப் பூட்டி தனது மந்திர சக்தியைப் பயன்படுத்தி இந்தக் கடலுக்குள் கொண்டு வைத்து விட்டது. என்ன செய்ய? இப்படியாக எனது விதி தெய்வத்தால் நிர்ணயிக்கப் பட்டு விட்டதே என்று இரவு, பகலாக கண்ணீர் சிந்திக் கொண்டு இருந்தேன்.
இந்தக் கிழட்டு பூதமோ, அதுவும் என்னை சந்தோஷப்படுத்தாமல், அடுத்தவரையும் நான் சந்தோஷப்படுத்த விடமால் கடுமையான கட்டுக் காவலில் வைத்து இருந்தது. அத்துடன் அதனுடைய காவலில் என்னுடயே கற்பும், நேர்மையும் காப்பாற்றப்படும் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறது. அவ்வப் போது கடலில் இருந்து நான் வைக்கப்பட்டு இருக்கும் பெட்டியுடன் வெளியே வந்தால் இந்த மரத்தடியில் தான் எனது மடி மீது தலை வைத்துப் படுத்து உறங்கும். நான் அப்போது இந்த வழியே செல்லும் அழகான வாலிபர்களை அழைத்து அவர்களுடன் உடலுறவு கொண்டு மகிழ்ச்சி அடைவேன்" என்று கூறிய அவள், பூதம் விழிக்கும் நேரம் வந்து விட்டது என்று கூறவும் அவர்கள் இருவரும் அவ்விடத்தை விட்டு விரைவாக புறப்பட்டுச் சென்றனர். சகோதரர்கள் இருவரும் செல்லும் சமயத்தில் அந்த அழகி கூறிய வார்த்தைகளை நினைத்தபடி சென்றார்கள். அப்போது ஷாரியர் தனது தம்பியிடம்," பூதத்தின் கதியே இதுபோன்று இருந்தால், நாம் அனைவரும் சாதாரண மனிதர்கள். நமது நிலை தான் என்ன? சரி இப்போது எனக்கு ஞானம் பிறந்து விட்டது. இனி நான் மாளிகைக்கு சென்று ஒரு நல்ல முடிவை எடுக்கிறேன்" என்று கூறினார்.
பின்னர் ஷாரியர் அரண்மனையை அடைந்ததும் தனது தம்பியை முறைப்படி அவனது நாட்டிற்கு வழி அனுப்பி வைத்தான். பிற்பாடு தனது மனைவியையும் அவளுடன் ஆடிக் களித்த அந்த அடிமையையும் அழைத்து அவர்கள் இருவரையும் தனித்தனியே கண்களைத் தோண்டி விஷயம் வெளியில் தெரியாமல் உயிருடன் புதைத்தான்.
அன்றைய தினம் முதல் ஷாரியர் அனைத்துப் பெண்களையும் வெறுக்கத் தொடங்கினான். அத்துடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண்ணை மணப்பான். அன்று ஒரு நாள் மட்டும் அவர்களுடன் உல்லாசமாக இருப்பான். மறுநாள் காலையில் அந்தப் பெண்ணின் தலை துண்டிக்கப்படும். இப்படியே சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களைக் கொன்றான் ஷாரியர்.
இப்படியே மூன்று ஆண்டுகள் ஓடியது. இந்தக் கொடுமையை தட்டிக் கேட்க முடியாமல் மனம் பதை பதைத்தனர் மக்கள். தங்கள் வீட்டுப் பெண்கள் வயது வந்தவுடன் யாருக்கும் சொல்லாமல் வீட்டிலேயே வைத்துப் பூட்டினார்கள். இன்னும் சிலர் பெண் பிள்ளை பிறந்த மாத்திரத்தில் அந்த ஊரை விட்டே சொல்லாமல், கொள்ளாமல் ஓடத் துவங்கினார்கள். அத்துடன் இதைப் போன்ற கொடுமையை நடத்தும் மன்னனை ஆண்டவன் தான் தட்டிக் கேட்க வேண்டும் என்று வேறு பிரார்த்தனை செய்தார்கள் அந்நாட்டு மக்கள். அந்நாட்டு அப்பாவி மக்களால் வேறு என்ன தான் செய்ய முடியும்? பாவம்.
