பூக் கொய் படலம் - 994
மாற்றவள் பெயர் கூறக் கேட்டு வருந்துதல்
994.
தைக்கின்ற வேல் நோக்கினள். தன் உயிர்
அன்ன மன்னன்.
மைக் கொண்ட கண்ணாள் எதிர்.
மாற்றவள் பேர் விளம்ப.
மெய்க் கொண்ட நாணம் தலைக்கொண்டிட
விம்மி. மென் பூக்
கைக் கொண்டு மோந்தாள்; உயிர்ப்புண்டு
கரிந்தது அன்றே!
தன் உயிர் அன்ன மன்னன் - தன் உயிர் போன்ற தலைவன்;
மைக் கொண்ட கண்ணாள் எதிர் - மை தீட்டிய கண்களையுடைய
(தன்) மனைவியின்முன்; மாற்றவள் பேர் விளம்ப - சக்களத்தியின்
பெயரைக் கூற; தைக்கின்ற வேல் நோக்கினள் - (மார்பில்) உருவிச்
செல்கிறவாறு தன் (விழி) வேலால் நோக்கினாள்; மெய்க் கொண்ட
நாணந் தலைக்கொண்டு - (பலர்முன்) தன் கணவனை அவ்வாறு
நோக்கியமைக்காக) உடலில் வெட்கமும் மேலிட்டு; விம்மி -
(வெளிகாட்ட இயலாத் துன்பத்தால்) விம்மலுற்று; மெல் பூக் கைக்
கொண்டு - மெல்லிய மலர் ஒன்றைக் கையில் எடுத்து; மோந்தாள்-
மோந்தாளாக; உயிர்ப்பு உண்டு கரிந்தது - அவள் (வெப்பப்)
பெரு மூச்சால். முகர்ந்த அப் பூ உடனே கருகிப் போயிற்று.
“தன் உயிர் அன்ன மன்னன்” என்பதனால். தன்னிடந் தவிர
மற்றோரிடத்தில் அவன் வாழான் என்று நினைத்திருந்தான்; அவள்.
தன் கண்ணெதிரேயே இவள் நிற்பது உணராமல். மற்றொருத்தியைப்
பெயர் கூறியழைத்தான்; அதனால். வெகுண்டு. அவன் நெஞ்சைத்
துளைக்கும் கடும் பார்வை பார்த்தாள். பலர் முன் அவ்வெகுளிப்
பார்வை பார்த்ததை எண்ணி உடனே நாணினாள்; துயரை உள்ளே
அடக்கி விம்மினாள்; தன் உள்ளத்துள்ளே உள்ள துன்பத்தைக்
குறிப்பால் கணவனுக்கு உணர்த்த வேண்டி பூவொன்றை மோந்து
காட்டினாள் என்க. மகளிர் வெப்ப மூச்சால் பூக்கள் வாடும் என்பது:
“துணையமை பிணையல். மோயினள் உயிர்த்த காலை மாமலர். மணி
உரு இழந்த அணியழி தோற்றம்” (அகநா. 23) கணவன் அன்பு
முழுதும் தனக்கே வேண்டும் எனும் பெண்மையின் இயல்பினை ஒரு
நிகழ்வு காட்டி விளக்கியவாறு. “தன் உயிர் அன்ன மன்னன்.
மாற்றவள் பேர் விளம்ப. தைக்கின்ற வேல் நோக்கினள். நாணம்
தலைக் கொண்டிட விம்மி மோந்தாள்: உயிர்ப்புண்டு கரிந்தது” எனக்
கூட்டுக. பிறர்முன் கணவனை வெகுளுதல் வெட்கமுறத்தக்க செயல்
என்பார். “தைக்கின்ற வேல் நோக்கினள் நாணம் தலைக் கொண்டிட”
என்றார். வெகுளியை அடக்கியதால் வெளிப்பட்ட மூச்சு நெருப்புப்
போன்றிருந்தது என்பார். “மென்பூ உயிர்ப்புண்டு கரிந்தது” என்றார். 20
