பூக் கொய் படலம் - 984
பூங்கொம்புகள்
மலர் கொய் மகளிர் செயல்கள்
984.
உலம் தரு வயிரத் திண் தோள்
ஒழுகி. வார் ஒளி கொள் மேனி
மலர்ந்த பூந் தொடையல் மாலை
மைந்தர்பால். மயிலின் அன்னார்
கலந்தவர் போல. ஒல்கி
ஒசிந்தன. சில; கை வாராப்
புலந்தவர் போல நின்று.
வளைகில. பூத்த கொம்பர்.
உலம் தரு வயிரத் திண்தோள்- திரண்ட கல்லைப் போன்ற உறுதி
வாய்ந்த திண்ணிய தோள்கள்; ஒழுகிவார் ஒளிகொள் மேனி -
ஒழுங்குற அமைந்து. மிக்க ஒளி கொண்டமைந்த உடலையும்; மலர்ந்த
பூந்தொடையல் மாலை - மலர்ந்த மலர்களால் தொடுக்கப் பட்ட
மாலைகளையும்; மைந்தர் பால் - (உடைய) ஆடவரிடத்தில்;
கலந்தவர் - கலந்தவரான; மயிலின் அன்னார் - மயில் அனைய
மகளிர்; போல - போன்று; பூத்த கொம்பர் சில - மலர்ந்த மலர்
கொடிகள் சில; ஒல்கி ஒசிந்தன - தளர்ந்து துவண்டு கிடந்தன (சில);
கைவாராப் புலந்தவர் போல - சில பூங்கொடிகள் கைக்கெட்டாதன
வாய் ஊடல் கொண்ட மகளிர் போல்; நின்று வளைகில - நின்றவாய்
வளையாமல் இருந்தன.
கலந்த மகளிர் துவண்டு கிடப்பதை “அவச நிலை” என்பர்
இன்பநூலார். “கலவிக் களியின் மயக்கம்” (கலிங். கடை. 14) என்பார்
சயங்கொண்டார். உவமையணி. ஊடலில் நிமிர்வதும் கூடலில்
குழைவதும் பெண்டிர் இயல்பு. பூங்கொடிகளாகிய அஃறிணை மேல்
ஏற்றி உயர்திணை மகளிர் செயலை விளக்கியவாறு. 10
