புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன்

bookmark

வாழ்க்கை வரலாறுபுதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் ஏப்ரல் 25, 1906 ல் பிறந்தார். தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரானதிருநெல்வேலிக்குத் திரும்பினார். அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் (பி. ஏ) பட்டம்பெற்றார். இவர் மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். சென்னை, தஞ்சாவூர்த் தமிழ் அல்லாது பிற வட்டார வழக்குத் தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் புதுமைப்பித்தன். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. புதுமைப்பித்தன் அடிப்படையில் சோஷியலிச கருத்துகளைக் கொண்டவர். அவரது அரசியல் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை நான்கு. அவை ஃபாசிஸ்ட் ஜடாமுனி, (முசோலினியின் வாழ்க்கை வரலாறு) கப்சிப் தர்பார், (ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு) ஸ்டாலினுக்குத் தெரியும் மற்றும் அதிகாரம் யாருக்கு (இரண்டும் கம்னியூசத்தையும் ஸ்டாலினின் கொள்கைகளையும் விவரிப்பவை). நான்கு புத்தகங்களுமே ஃபாசிசத்தை எதிர்த்தும் ஸ்டாலினிய கொள்கைகளுக்கு ஆதரவாகவும் எழுதப்பட்டன. புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை அவர் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளியானது. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது.