பிற்காலப் பாண்டியர்கள்

bookmark


இடைக்காலப் பாண்டியர்களுக்கு அடுத்த படியாக தமிழ்நாட்டை ஆண்டவர்களை பிற்காலப் பாண்டியர்கள் ஆவார்கள் . இவர்களில் கீழ்க்கண்ட பாண்டிய அரசர்கள் குறிப்பிடத் தக்கவர்களாக கருதப்படுகின்றனர். இவர்களால் தமிழினம் ஓங்கி வளர்ந்து நின்றது. இன்று தமிழ் மொழி செம்மொழியாக இருப்பதற்கு அன்றே அஸ்திவாரத்தை வலுவாக அமைத்த பாண்டித் தமிழர்கள் இவர்கள்.

மூன்றாம் இராசசிம்மன்    கி.பி. 900-945

வீரபாண்டியன்

கி.பி. 946-966

அமர புயங்கன்

கி.பி. 930-945

சீவல்லப பாண்டியன்

கி.பி. 945-955

வீரகேசரி

கி.பி. 1065-1070

சடையவர்மன் சீவல்லபன்

கி.பி. 1145-1150

பராக்கிரம பாண்டியன்

கி.பி.1150-1160

சடையவர்மன் பராந்தக பாண்டியன்

கி.பி.1150-1162

மாறவர்மன் சீவல்லபன்

கி.பி. 1132-1162

சடையவர்மன் குலசேகர பாண்டியன்

கி.பி. 1162-1175

சடையவர்மன் வீரபாண்டியன்

கி.பி. 1175-1180

விக்கிரம பாண்டியன்

கி.பி. 1180-1190

முதலாம் சடையவர்மன் குலசேகரன்

கி.பி. 1190-1218

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்

கி.பி. 1216-1238

இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்

கி.பி. 1238-1250

இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்

கி.பி. 1239-1251

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்

கி.பி. 1251-1271

இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்

கி.பி. 1251-1281

சடையவர்மன் விக்கிரமன்

கி.பி. 1149-1158

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

கி.பி. 1268-1311

மாறவர்மன் விக்கிரம பாண்டியன்

கி.பி. 1268-1281

இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்

கி.பி. 1276-1293

மேற்கண்ட பிற்காலப் பாண்டிய அரசர்கள் பற்றியும் பார்ப்போம் வாருங்கள்

(1) மூன்றாம் இராசசிம்மன்

மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் கி.பி. 900 முதல் 946 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பராந்தக பாண்டியனுக்கும், சேர நாட்டு இளவரசி வானவன்மாதேவிக்கும் மகனான இவன் கி.பி. 900 ஆம் ஆண்டில் முடிசூடிக்கொண்டான். சடையன் மாறன், இராச சிகாமணி, சீகாந்தன், மந்தரகௌரவமேடு போன்ற பட்டங்களினை உடையவனாவான். பிரம்மதேயம், தேவதானம், பள்ளிச்சந்தம் ஆகிய அறச்செயல்களை அதிக அளவில் செய்தவன் என்ற பெருமையினை உடையவனும் ஆவான்.

மூன்றாம் இராசசிம்மன் காலத்துப் பதிவுகள்:-

மந்தர கௌரவ மங்கலம் என அழைக்கப்பெற்ற நற்செய்கைப்புத்தூர் என்னும் ஊரை அந்தணர்களுக்குப் பிரமதேயமாக மூன்றாம் இராசசிம்மன் அளித்தான் எனவும். மேலும் இவனது முன்னோர்களின் வரலாறுகள் மற்றும் சிறப்புகளையும் உள்ளடக்கியதாக உள்ளது சின்னமனூர்ச் செப்பேடு.

முதற் பராந்தகச் சோழன் கல்வெட்டு ஒன்றின் படி மூன்றாம் இராசசிம்மன்:

போரொன்றில் தோற்றதாகவும் முதற் பராந்தகச் சோழன் மதுரைகொண்டான் என்ற பட்டத்தினைப் பெற்றிருந்தான் மேலும் திருவாங்கூர் நாட்டில் உள்ள கல்வெட்டு ஒன்றிலும் இத்தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாண்டிய மன்னனொருவனின் தோல்வியும் சோழ மன்னன் ஒருவனின் வெற்றியினைப் பற்றியும் இரண்டாம் பிருதிவிபதியின் கல்வெட்டிலும் உதயேந்திரச் செப்பேட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் இராசசிம்மன் ஆற்றிய போர்கள்:

(1) உலப்பிலி மங்கலத்தில் மூன்றாம் இராசசிம்மனிற்குப் பகையாக இருந்தவர்களினை எதிர்த்துப் போர் செய்தான்.

(2) கொடும்பாளூர் அரசனான பூதி விக்கிரம கேசரியை போரில் மூன்றாம் இராசசிம்மன் வெற்றி பெற்றான்.

(3) வஞ்சிமாநகரில் பெரும்போர் ஒன்று நிகழ்ந்தது. அங்கு சோழன் ஒருவனை வைப்பூரிலும், நாவற்பதியிலும் வென்று துரத்தினான் மூன்றாம் இராசசிம்மன்.

(4) கி.பி.910 ஆம் ஆண்டளவில் முதற் பராந்தகச் சோழனுடன் போரிட்டுத் தோல்வியைத் தழுவினான்.

(5) வெள்ளூரில் சோழ மன்னன் ஒருவனுடன் போர் புரிவதன் பொருட்டு இலங்கை மன்னன் ஜந்தாம் காசிபனிடம் மூன்றாம் இராசசிம்மன் போரிற்குத் தேவையான. யானைப் படையினை சக்கசேனாபதியுடன் பெற்றான் ஆனால் இப்போரில் மூன்றாம் இராசசிம்மன் தோல்வியுற்று பாண்டிய நாட்டினை இழந்தான். இதன் காரணமாகப் பாண்டிய நாடு சோழர் வசமானது.

மூன்றாம் இராசசிம்மனது இறுதிக் காலம் :-

வெள்ளூர்ப் போரின் பின்னர் மூன்றாம் இராசசிம்மன் இலங்கையில் சென்று வாழ்ந்தான். பாண்டிய நாட்டினை மீட்டெடுக்கப் பல முயற்சிகள் செய்தும் தோற்றான். ஐந்தாம் காசிபனிடம் பாண்டிய நாட்டின் மதிப்பிற்குரிய சுந்தரமுடியையும், வாள், குடையையும் அளித்துத் தன் தாயான வானவன் மாதேவி பிறந்த சேர நாட்டிற்குச் சென்று தன் இறுதிக் காலத்தினைக் கழித்தான். மூன்றாம் இராசசிம்மன் கி.பி.946 ஆம் ஆண்டில் இறந்தான். பாண்டிய நாடும் இவனது ஆட்சியின் பின்னர் வீழ்ச்சியுற்றது.

சோழப் பேரரசு பாண்டிய நாட்டையும் சேர்த்துக் கொண்டு விரிவாகத் தொடங்கியது. அவ்வப்போது சில பாண்டியர்கள் திடீரென எழுச்சியுற்று சில ஆண்டுகள் பாண்டிய நாட்டு ஆட்சியை கைப்பற்றினாலும் பேரரசு என்னும் நிலையை எட்டவில்லை. சில பாண்டியர் சோழருக்கு கப்பம் கட்டி அவரின் கீழ் பாண்டிய நாட்டை ஆண்டனர். பதிமூன்றாம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி வரை பேரரசு என்ற நிலைமையை பாண்டியர்கள் எட்ட முடியாமல் போனார்கள். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் இருந்து இரண்டாம் பாண்டியப் பேரரசு எழுந்தது.

(2) வீரபாண்டியன்

இவனது காலத்தில் தமிழ் புலவர்கள் பலர் ஆதரிக்கப் பட்டனர். மற்றபடி இவன் காலத்தில் பெரிய போர்கள் நடந்ததாக கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை.

(3) அமர புயங்கன்

அமர புயங்கன் கி.பி. 930 முதல் 945 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இவன் ஆட்சி புரிந்த வேளையிலே சோழ மன்னனான முதலாம் இராசராச சோழன் சேர நாட்டின் மீது படையெடுத்திருந்தான் அச்சமயம் வழியில் எதிர்த்த அமர புயங்கனை போரில் தோற்கடித்தான் என திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகின்றது. முதலாம் இராசராசன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றியதன் பின்னர் சோழ நாட்டினையும் பாண்டிய நாட்டுடன் இணைத்து ராசராச மண்டலம் எனப் பெயரிட்டு ஆட்சி புரிந்தான். அமர புயங்கன் ஆட்சிக் காலத்தில் இவனது தலைமையின் கீழ் பல குறுநில மன்னர்கள் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தும் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(4) சீவல்லப பாண்டியன்

சீவல்லப பாண்டியன் கி.பி. 945 முதல் 955 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்து வந்த மன்னனாவான். இரண்டாம் இராசேந்திர சோழன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த சமயம் சோழ மன்னனிற்குத் திறை செலுத்தி வந்த காரணத்தினால் விடுதலை பெற்றான் என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி. 1054 ஆம் ஆண்டளவில் சீவல்லப பாண்டியனின் பட்டத்தரசியால் சோழ நாட்டுத் திருவியலூர்க் கோயிலுக்குப் பல அணிகலன்கள் வழங்கப்பட்டது.

(5) வீரகேசரி (மன்னன்)

வீரகேசரி கி.பி. 1065 முதல் 1070 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி புரிந்த மன்னனாவான். சீவல்லப பாண்டியனின் மகனான இவன் சோழ மன்னனான வீரராசேந்திரனுடன் 1065 ஆம் ஆண்டளவில் போர் செய்து இறந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. வீரகேசரியின் இறப்பிற்குப் பின்னர் வீரராசேந்திரன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்குப் பின்னர் இவன் மகனான அதிராசேந்திரனும் ஆட்சி செய்து வருகையில் கி.பி. 1070 ஆம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு இறந்த காரணத்தினால் பாண்டிய நாட்டில் ஆட்சிகள் சீராக அமைக்கப்படவில்லை. கி.பி. 1081 வரை பாண்டிய மன்னர் சிலர் ஆண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(6) சடையவர்மன் சீவல்லபன்

சடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆண்ட மன்னனாவான். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த இம்மன்னனது மெய்க்கீர்த்திகள் 'திருமடந்தையும் சயமடந்தையும்' எனத்துவங்குவது குறிப்பிடத்தக்கது. இவனைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ள கல்வெட்டுக்கள் பல நெய்வேலி, மதுரை போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

(7) பராக்கிரம பாண்டியன்

பராக்கிரம பாண்டியன் கி.பி. 1150 முதல் 1160 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த இவன் திருபுவனச் சக்கரவர்த்தி எனப்பட்டம் பெற்றிருந்தான். மாறவர்மன் என்னும் அடைமொழியினையும் பெற்றிருந்தான். 'திருமகள் புணர' என இவனது மெய்க்கீர்த்தி தொடங்கும். முதலாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டினை 40 ஆம் ஆண்டு ஆட்சி செய்த வேளை பராக்கிரம பாண்டியன் 23 ஆம் ஆண்டு ஆட்சியினை மேற்கொண்டிருந்தான்.

(8) சடையவர்மன் பராந்தக பாண்டியன்

சடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி. 1150 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். முதலாம் குலோத்துங்கனின் மகனான விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்த இவனது மெய்க்கீர்த்தி "திருவளர் செயம் வளரத் தென்னவர் தம்குலம் வளர" என இருக்கும். சேர மன்னனொருவனை வென்று அவனிடம் திறை வசூலித்து, காந்தளூர்ச் சாலையில் களம் அறுத்து. விழிஞத்தைக் கைப்பற்றி தென் கலிங்க நாட்டில் தெலுங்கு வீமனை வென்று திருவனந்தபுரத்தில் திருமாலிற்கு மணிவிளக்குகளும் அளித்த பெருமையினை உடையவனுமாவான். கூபகத்தரசன் மகளை மணம் செய்து கொண்ட இவன் அளப்பன, நிறுப்பன ஆகிய கருவிகளுக்கு அரச முத்திரை இட வைத்தான். அதுவே கயல் முத்திரையாகும். பாண்டியர்களின் குலதெய்வமான கன்னி பகவதிக்கு ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா நடத்தி அடியார்களுக்கு உணவிட்ட பெருமையையும் உடையவன் சடையவர்மன் பராந்தக பாண்டியன்.

(9) மாறவர்மன் சீவல்லபன்

மாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132 முதல் 1162 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். கி.பி. 1132 ஆம் ஆண்டு முடிசூடிய இவனது மெய்க்கீர்த்திகள் "பூமகள் சயமகள் பொலிவுடன் தழைப்ப" எனத் தொடங்கும். திருவாதாங்கூர் சேரன் வீரரவிவர்மன் இவனிடன் திறை பெற்றான். மாறவர்மன் சீவல்லபனைப் பற்றிய கல்வெட்டுக்கள் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பல ஊர்களிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இவன் தமிழ் மொழி வளர பல புலவர்களை ஆதரித்தான். ஆனால் பெரிய போர்கள் ஏதும் செய்ததாகத் தெரியவில்லை.

(10) சடையவர்மன் குலசேகர பாண்டியன்

சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162 முதல் 1175 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். சீவல்லப பாண்டியனின் மகனான இம்மன்னன் கி.பி. 1162 ஆம் ஆண்டளவில் முடிசூடிக்கொண்டான். இவனது மெய்க்கீர்த்திகள் 'பூதலமடந்தை' எனத் தொடங்கும். நெல்லையிலிருந்து பாண்டிய நாட்டில் இவன் ஆட்சி புரிந்தவேளை பராக்கிரம பாண்டியன் மதுரையிலிருந்து ஆட்சி செய்தான். பாண்டிய நாடு முழுவதனையும் ஆட்சி செய்ய வேண்டுமென்ற போட்டி இருவரிடத்திலும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

சடையவர்மன் குலசேகர பாண்டியன் காலத்துப் போர்கள்:

பாண்டிய நாடு முழுவதனையும் ஆட்சி செய்யவேண்டும் என்ற அவாவினால் சடையவர்மன் குலசேகர பாண்டியன் மதுரையை முற்றுகையிட்டு பராக்கிரம பாண்டியனைப் போருக்கு அழைத்தான். பராக்கிரம பாண்டியன் இலங்கை மன்னனான பராக்கிரம பாகுவிடம் படையுதவிகள் வழங்குமாறு கேட்டதன் பொருட்டு தண்ட நாயகன் என்றவன் தலைமையில் பெரும்படையினை அனுப்பி வைத்தான். அப்படை மதுரையினை வந்தடைவதற்குள் பராக்கிரம பாண்டியனையும் அவன் மனைவி மக்களையும் கொன்று மதுரையினைக் கைப்பற்றியிருந்தான் சடையவர்மன் குலசேகர பாண்டியன். இதனால் கோபமுற்ற தண்ட நாயகன் இராமேச்சுரம், குந்துகாலம் போன்ற ஊர்களை மீட்டு வெற்றி பெற்றான். இலங்கைப் படை அடிக்கடி போர் செய்தது இப்போர்களில் பாண்டிராசன் மற்றும் சுந்தரபாண்டியன் ஆகியோர் தோற்றனர். ஆளவந்தான் என்ற படைத்தலைவன் ஒருவனும் இறந்தான். தண்ட நாயகன் போரில் வெற்றி பெற்றான். கொங்கு நாட்டு மன்னனான தனது மாமனிடம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் படை உதவி கேட்டுப்பெற்றான். இரு படைகளுடன் தண்ட நாயகனை எதிர்த்துப் போரிட்டான் இப்போரில் தண்ட நாயகன் வெற்றி பெற்றான். மதுரையைக் கைப்பற்றினான். பராக்கிரம பாண்டியனின் இறுதி மகனான சடையவர்மன் வீரபாண்டியன் மலை நாட்டில் மறைந்து வாழ்ந்தான் இவனை அழைத்து மதுரை ஆட்சிப் பொறுப்பினை அளித்தான் தண்ட நாயகன். மேலும் கீழை மங்கலம் மேலை மங்கலம் ஆகிய ஊர்களை கண்ட தேவ மழவராயனிடம் வழங்கி ஆட்சி செய்யச் சொன்னான். தொண்டி, கருத்தங்குடி, திருவேகம்பம் ஆகிய ஊர்களின் ஆட்சிப் பொறுப்பினை மழவச்சக்ரவர்த்திக்கு அளித்தான்.

சடையவர்மன் குலசேகர பாண்டியன் மீண்டும் ஒருமுறை படை திரட்டியதை அறிந்த சடையவர்மன் வீரபாண்டியன் மழவச்சக்ரவர்த்தி, மற்றும் கண்ட தேவ மழவராயன் மூவரும் தண்ட நாயகனுடன் சேர்ந்து சடையவர்மன் குலசேகர பாண்டியனை மதுரையை விட்டுத் துரத்தினர். பராக்கிரம பாகுவிடம் படையுதவியைப் பெற்ற தண்ட நாயகன் சகத்விசய தண்டநாயகன் தலைமையில் பெரும்படையினைப் பெற்றான். இப்படை வலிமையுடன் சடையவர்மன் குலசேகர பாண்டியனை வென்று மீண்டும் சடையவர்மன் வீரபாண்டியனிற்கு மதுரையை ஆளும் பொறுப்பினைக் கொடுத்தான் தண்ட நாயகன். இப்போரின் பின்னர் சீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற போரிலும் சடையவர்மன் குலசேகர பாண்டியன் தோல்வியைத் தழுவி நெல்லிக்குச் சென்று தங்கினான் என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி. 1167 ஆம் ஆண்டளவில் சடையவர்மன் குலசேகர பாண்டியன் சோழ மன்னன் இராசாதிராசனிடம் உதவி பெற்று திருச்சிற்றம்பமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் படையினைப் பெற்று சிங்களப் படைகளுடன் போரில் ஈடுபட்டான். தொண்டி, பாசிப்பட்டினம் ஆகிய ஊர்களில் போர் நடைபெற்று இலங்கைப் படையே வெற்றியினை ஈட்டியது. காஞ்சியை அடுத்துள்ள ஆர்ப்பாக்கத்தில் உள்ள கல்வெட்டின்படி சோழ மண்டலம்,கொங்கு மண்டலம் ஆகிய ஊர்களில் வாழ்ந்த மக்கள் இலங்கைப் படையினரால் அச்சம் அடைந்தனர் எனக் குறிக்கப்பட்டுள்ளது.

இராசாதிராசன் சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்குப் போர் உதவியாக தனது படைத் தலைவனான பெருமான் நம்பிப் பல்லவராயன் மூலம் சிங்களப் படைகளை அழித்தான். சிங்களப் படைத்தலைவர்கள் இருவரையும் கொன்று தலைகளை மதுரைக்கோட்டை வாயிலில் வைத்ததாகக் கருதப்படுகின்றது. இதன் பின்னர் சடையவர்மன் குலசேகர பாண்டியன் தலைமையில் ஆட்சி நடைபெற்றது. இவற்றினை அறிந்த சிங்கள மன்னன் பராக்கிரம பாகு கோபம்கொண்டு சோழனையும்,பாண்டியனையும் தாக்கச் சமயம் பார்த்திருந்தான். சடையவர்மன் குலசேகர பாண்டியனை நண்பனாக்கிக் கொள்ள பரிசு பல அனுப்பி அவனது நட்பைப்பெற்றான். சோழனது உதவியை மறந்து சிங்கள மன்னனுடன் நட்புக் கொண்ட சடையவர்மன் குலசேகர பாண்டியன் அவனுடன் மணத் தொடர்பு கொள்ளவும் செய்து, சோழனுக்கு பிடிக்காத செயல்களையும் செய்யத் தொடங்கினான். சோழனுக்குத் தொடர்புடைய இராசராசக் கற்குடி மாராயன், இராச கம்பீரன் அஞ்சுக்கோட்டை நாடாள்வான் ஆகிய படைத்தலைவர்களை வெள்ளாற்றுக்கும் வடக்கே போகுமாறு செய்து பின் மதுரை வாயிலில் இருந்த இலங்கைப் படைத் தலைவர்களின் தலைகளை நீக்குமாறும் உத்தரவு பிறப்பித்தான். இவற்றை அறிந்த சோழன் இராசாதிராசன் குலசேகர பாண்டியனைத் தண்டிக்க நினைத்து பராக்கிரம பாண்டியன் மகனான வீரபாண்டியனுக்கு மதுரையினை அளிக்க நினைத்து தன் அமைச்சன் வேதவனமுடையான், அம்மையப்பன் அண்ணன் பல்லவராயன் ஆகியோருக்கு ஆணையிட்டான். இம்மூவரின் பெரும்படையின் தாக்குதல்களால் சடையவர்மன் குலசேக பாண்டியன் போரில் தோற்று மறைந்து வாழ்ந்தான்.கி.பி. 1168 ஆம் ஆண்டளவில் ஆட்சியினை ஏற்ற சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1175 ஆம் ஆண்டளவில் நன்றி கெட்டதனால் ஆட்சியினை இழந்தான்.

(11) சடையவர்மன் வீரபாண்டியன்

சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175 முதல் 1180 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். பராக்கிரம பாண்டியனின் மகனான இவனது மெய்க்கீர்த்திகள் 'பூமடந்தையும்,சயமடந்தையும்' எனத் தொடங்கும்.

சடையவர்மன் வீரபாண்டியனது ஆட்சி நிலை:-

இலங்கைப் படைத்தலைவர்களின் உதவியினால் மதுரையினை ஆளும் பொறுப்பினை ஏற்ற இவன் கி.பி. 1168 ஆம் ஆண்டில் மதுரை ஆட்சியினை இழந்தான். பின்னர் சோழ படைத்தலைவரின் உதவியினால் சேர நாட்டிலிருந்து வந்து மதுரையினை ஆட்சி செய்தான். கி.பி. 1180 வரை வேதவனமுடையான், அம்மையப்பன் அண்ணன் பல்லவராயன் போன்றவர்களினால் மதுரையினை ஆட்சி செய்தான். பாண்டிய நாட்டினை 1178 ஆம் ஆண்டளவில் இராசாதிராசன் தனது ஆட்சியிலிருந்து விலகிக்கொண்டான். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் சோழ நாட்டு ஆட்சிப் பொறுப்பினை கி.பி. 1178 ஆம் ஆண்டளவில் பெற்று சடையவர்மன் வீரபாண்டியனுக்கு பாண்டிய நாட்டினை ஆளும் பொறுப்பினையும் கொடுத்தான். நன்றி மறந்த சடையவர்மன் வீரபாண்டியன் சிங்கள மன்னருடன் நட்புக் கொண்டான். வீரபாண்டியனுடன் 1180 ஆம் ஆண்டில் மூன்றாங்குலோத்துங்கன் போர் செய்தான். இப்போரில் சடையவர்மன் வீரபாண்டியனின் மகனொருவன் இறந்தான் என்பது கருத்து. ஏழகப்படைகளும்,மறவர் படைகளும் ஈழப் படையும் தோற்றனர். போரில் வெற்றி பெற்ற மூன்றாம் குலோத்துங்கன் தன்னிடம் அடைக்கலம் கொண்டவிக்கிரம் பாண்டியனிடம் ஆட்சிப் பொறுப்பினை அளித்தான். போரில் தோற்ற சடையவர்மன் வீரபாண்டியன் சேர மன்னனிடம் அடைக்கலம் கொண்டான் அச்சேர மன்னனும் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் இவனிடம் பகை கொள்வான் என்ற காரணத்தினால் சடையவர்மன் வீரபாண்டியனை மூன்றாம் குலோத்துங்கனிடம் அழைத்துச் சென்று மதுரையில் ஒரு பகுதியை அவனின் ஆட்சிக்கு கீழ் கொடுக்க வைத்தான். சடையவர்மன் வீரபாண்டியனது மகன்களான வீரகேரளன், பருதி குலபதி இருவருக்கும் தன் பக்கம் இருந்து விருந்துண்ணும் சிறப்பினை அளித்தான் மூன்றாம் குலோத்துங்கன். இரு நிதி, பரிச்சட்டம், இலங்கு மணிக்கலன் போன்றனவற்றினையும் 1180 காலப்பகுதியில் அளித்தான் என திருவக்கரை திட்சைக் குடிக் கல்வெட்டு குறிப்பிடும்.

(12) விக்கிரம பாண்டியன்

விக்கிரம பாண்டியன் கி.பி. 1180 முதல் 1190 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். சடையவர்மன் குலசேகர பாண்டியன் மகனான இவன் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் உதவியால் ஆட்சிப் பொறுப்பினைப் பெற்றான். மூன்றாம் குலோத்துங்கனுடன் மிகுந்த மரியாதையுடனும், பண்பினையும் உடையவனாகத் திகழ்ந்த விக்கிரம பாண்டியன் கி.பி. 1190 ஆம் ஆண்டளவில் இவ்வுலக வாழ்வை நீத்தான் என்பது வரலாறு.

(13) முதலாம் சடையவர்மன் குலசேகரன்

முதலாம் சடையவர்மன் குலசேகரன் பிற்காலப் பாண்டிய அரசர்களுள் ஒருவன். இவனது ஆட்சிக்காலம் 1190 முதல் 1217 வரை ஆகும். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கனிடமிருந்து பாண்டிய நாட்டை மீண்டும் பெற்ற விக்கிரம பாண்டியனின் மகன். இவன் தற்போதைய மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிப் பிரதேசங்களை ஆண்டான். இவனைப் பற்றிப் பெரிதாகக் குறிப்புகள் இல்லை. ஆனால் எண்ணற்ற ஏழைப் புலவர்களை ஆதரித்தான் என்று அறியப்படுகிறது.

(14) முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்

முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் ஒருவன். பாண்டிய மன்னர்கள் வரிசையில் அறிவற்றாலும் வீரமும் கொண்ட சிறந்த மன்னனாக விளங்கினான். இவனது ஆட்சிக்காலம் 1216 முதல் 1239 வரை ஆகும்.

சோழப்பேரரசின் வீழ்ச்சி:

மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்திலேயே கலகங்களை ஆரம்பித்தாலும், குலோத்துங்கனின் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாமல் சிற்றரசனாகவே இருந்து வந்தான். ஆனால் குலோத்துங்கனின் மறைவுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன், ஆட்சி புரியும் ஆற்றல் இல்லாமால் இருப்பதை அறிந்த சுந்தர பாண்டியன் சோழனை எதிர்த்து போர்க்களம் புகுந்து வென்று முடி கொண்ட சோழபுரத்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீராபிடேகம் செய்துகொண்டு சிதம்பரத்தைத் தரிசித்தான். தஞ்சை, தில்லை வரைப் படை எடுத்து வந்து சோழனைப் பழையாறைக்கே செல்ல வைத்தான். சுந்தர பாண்டியனிற்கு ஈடு கொடுக்க முடியாமல் சோழர்களின் பழையாறை நகருக்கே ராச ராச சோழன் தோற்றுத் திரும்பி வந்தான். பின்னர் பாண்டியனிடம் சமாதானம் கோரி பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு தஞ்சை வரை ஆட்சி புரிந்தான் ராச ராச சோழன். சில காலத்தின் பின்னர் சோழர் கப்பஞ்செலுத்த மறுக்க மீண்டும் சோழ நாட்டைக் கைப்பற்றினான். சுந்தரபாண்டியன் காலத்தில் இருந்து சோழப் பேரரசு சோழநாட்டையும் இழந்து மீட்கும் நிலைக்கு சில முறை தள்ளப்பட்டது. இந்த பாண்டியனின் ஆட்சிக்காலம் சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஆரம்பம் எனலாம்.

பாண்டியப் பேரரசின் தொடக்கம்:

இரண்டாம் பாண்டியப் பேரரசை தொடக்கி வைத்த பாண்டியர்களுள் இவனும் ஒருவனாக காட்டப்படுகிறான். இவனது வெற்றியைப் போற்றும் கல்வெட்டுப் பாடல் ஒன்று உள்ளது.

ஊடகங்களில்:

புதினமாக:

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையை மீட்டதை கயல்விழி என்னும் புதினமாக அகிலன் எழுதினார். இதில் சுந்தரபாண்டியன் மதுரையை சோழரிடம் இருந்து மீட்டதையும் சோழநாட்டை கவர்ந்து சோழனை சிறைப்படுத்தி மீண்டும் அவனிடமே சோழநாட்டின் ஆட்சியைக் கொடுத்து திறை செலுத்த வைத்ததையும் போசள இளவரசியை பாண்டீயன் மணந்த வரலாறு வரை இப்புதினம் காட்டுகிறது.

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டில் படையெடுத்த போது அங்கே இருந்த கரிகாலன் உருத்திரங்கண்ணனாருக்குக் கொடுத்த ஆயிரங்கால் மண்டபத்தை மட்டும் தமிழ் பெருமைக் காக்கக்கருதி இடிக்காமல் விட்டதை கூறும் புதினம் பூவண்ணன் எழுதிய வளவன் பரிசு ஆகும்.

திரைப்படங்களாக:

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மதுரையை மீட்டதை கயல்விழி என்னும் புதினமாக அகிலன் எழுதினார். அந்த புதினத்தை ஒட்டி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படமாகும். இதில் எம். ஜி. ஆர் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனாகவும் நம்பியார் மூன்றாம் இராஜராஜ சோழனாகவும் நடித்திருந்தனர்.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக புரட்சித் தலைவன் என்ற ஒரு இயங்குபடம் தயாரிக்கப்படுகிறது. இதில் எம். ஜி. ஆர் உருவத்தை பாண்டியனாக உருவகப்படுத்தி இயங்குபடம் தயாரிக்கப்படுகிறது.

(15) இரண்டாம் சடையவர்மன் குலசேகரன்

இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238 முதல் 1250 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இவனுக்கு இளவரசுப் பட்டத்தினை சூட்டினான். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் இறப்பிற்குப் பின்னர் சில மாதங்கள் இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் ஆட்சி செய்தான் என திருத்தாங்கல் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவனது மெய்க்கீர்த்தி 'பூதலவனிதை' எனத் தொடங்குவதும் குறிப்பிடத்தக்கது.

(16) இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்

இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239 முதல் 1251 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இவனது மெய்க்கீர்த்தி "பூமலர்த்திருவும், பொருசய மடந்தையும்" எனத் தொடங்குவது குறிப்பிடத்தக்கது. போசாள அரசனான் வீரசோமேச்சுரன் இவனது மாமன் முறையினனும் கொங்கு நாட்டு விக்கிரம சோழன் இவனது மைத்துனனும் ஆவான். மூன்றாம் இராசேந்திரன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனை வெற்றி கொண்டான். ஆனால் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மாமனான வீரசோமேச்சுரன் பாண்டிய நாட்டினை மீட்டெடுத்துக் கொடுத்தான். தனது சகோதரியின் மகன் என்ற காரணத்தினால் பாண்டிய நாட்டின் மீது கவனம் செலுத்தி வந்தான் வீரசோமேச்சுரன். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இவன் மதுரையில் உள்ள சிங்காசனத்திற்கு மழவராயன்,பல்லவராயன் எனப் பெயரிட்டிருந்தான்.இவனது பட்டத்தரசி உலக முழுதுடையாள் எனக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(17) முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான். மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன், எம்மண்டலமும் கொண்டருளியவன், எல்லாம் தலையானான் பெருமாள், கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன் போன்ற பட்டப்பெயர்களினைப் பெற்றான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இறுதிச்சோழ மன்னனாக அறியப்படும் மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் வம்சம் முற்றிலும் அழிந்ததற்கான காரணங்களில் இம்முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் சோழ நாட்டுப் படையெடுப்பும் ஒரு முக்கிய காரணம்.

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆற்றிய போர்கள்:

சேர மன்னன் வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் மீது படையெடுத்து வெற்றி கொண்டான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.

மூன்றாம் இராசராசன் மகனான மூன்றாம் இராசேந்திரனையும் வென்று திறை செலுத்துமாறு ஆணையிட்டான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.

போசளர் கண்ணனூரினைத் (சமயபுரம்) தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சமயம் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் போசள மன்னனான வீரசோமேசுவரன் என்பவனை தோற்கச்செய்து தண்ட நாயகன் சிங்கணனை கொன்று கண்ணனூரினை மீட்டான்.

கண்ணனூரில் நடைபெற்ற கொப்பத்துப் போரில் சேமன் என்பவனைக் கொன்றான். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்குக் களிறுகளைத் திறையாகக் கொடுத்தான் சோழ நாட்டின் ஒரு பகுதியினை ஆண்ட வீர ராமநாதன்.

இலங்கை மீது படையெடுத்து வெற்றி பெற்று இலங்கையரசன் ஒருவனிடம் யானைகள் மற்றும் மணிகள் அனைத்தினையும் திறையாகப் பெற்றான்.

பல்லவ மன்னனான கோப்பெருஞ்சிங்கனை போரில் வென்று அவனது தலைநகரான சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான். பல்லவ மன்னனின் யானை,குதிரை மற்றும் பிற செல்வங்கள் அனைத்தினையும் கவர்ந்து கொண்டு சேந்தமங்கலத்தினை ஆளும் பொறுப்பினைக் கோப்பெருஞ்சிங்கனிடமே அளித்தான்.

சேலம் மாவட்டத்தின கிழக்கும் தென்னார்க்காட்டின மேற்குப் பகுதிகளுமான மகத நாட்டினை வாணர்களான வாணாதிராசர், வாணகோவரையர் போன்றவர்களிடமிருந்து கைப்பற்றி ஆத்தூர் அருகில் உள்ள அகழியூர - அறகழூரினைத் தலைநகராக்கிப் பின் கொங்கு நாட்டினையும் கைப்பற்றி ஆட்சி புரிந்தான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.

தெலுங்குச் சோழ மன்னனான விசயகண்ட கோபாலனை போரில் கொன்று காஞ்சிமாநகரைக் கைப்பற்றி விசயகண்ட கோபாலனின் தம்பிக்கு ஆட்சிப் பொறுப்பினை அளித்தான்.

வடநாடு சென்று காகதீய மன்னன் கணபதியைப் போரில் வென்றான்.

நெல்லூரைக் கைப்பற்றி வீராபிடேகம் செய்துகொண்டான்.

சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆற்றிய கோயில் அறப்பணிகள்:

சிதம்பரத்தில் ஆற்றிய பணிகள்:

சிதம்பரத்தில் தில்லையம்பதியில் உள்ள திருமால்,சிவன் கோயில்களிற்குத் துலாபார தானங்களை வழங்கினான். தில்லை நடராசப் பெருமானின் கோயில் கோபுரத்திற்குப் பொன்தகடு வேய்ந்து, அங்குள்ள நான்கு ராஜகோபுரங்களில் மேற்குக் கோபுரத்தினைக் கட்டினான் அக்கோபுரமும் சுந்தரபாண்டியன் கோபுரம் எனப் பெயர் பெற்றது.

திருவரங்கத்தில் ஆற்றிய பணிகள்:

திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் திருவரங்கம் என அழைக்கப்படும். திருமாலை வணங்கிய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள பெருமானின் கோபுரத்தை வேய்ந்து அக்கோயிலிலேயே முடிசூடியும் கொண்டான். கோயில் பணிகளிற்காக நிலங்களினைக் காணிக்கையாக அளித்து அக்கோயில் இறைவனுக்கு அணிகலன்கள் பலவனவற்றை அளித்தான். இக்கோயிலில் வடமொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் இவனது பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவன் செய்த பணிகள் காரணமாக "கோயில் பொன் வேய்ந்த பொருள்" என்ற பட்டத்தினைப் பெற்றான். இவனது படிமங்கள் பல பட்டப்பெயருடன் திருவரங்கத்திலும் பிற இடங்களிலும் அமைக்கப்பட்டன. திங்கள் தோறும் தனது பிறந்தநாளான மூலநாளில் விழா நடத்த ஏற்பாடு செய்யச்சொல்வானெனவும் சித்திரைத் திங்கள் மூலநாளில் திருவானைக்கா திருக்கோயிலில்,"சேரனை வென்றான்" என்ற பெயருடைய திருவிழாவொன்றை நடத்தி வைத்து மூன்று ஊர்களை நிவந்தமாக்கினான் என்பதும் வரலாறு.

காஞ்சிபுரத்தில் ஆற்றிய பணிகள்:

தெலுங்குச் சோழனை வென்று காஞ்சி நகரைக் கைப்பற்றிய காரணத்தினால் காஞ்சீபுர வராதீசுவரன்,காஞ்சீபுரங்கொண்டான் போன்ற பட்டங்களினையும் எல்லாந் தலையனானான் என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றான். காஞ்சியிலும் வீராபிடேகம் செய்தான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன். கச்சீசுவரர் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் இரண்டிற்கும் திருப்பணிகள் செய்தான். காஞ்சீபுரம் திருப்புட்குழித் திருமால் கோயிலில் இவனைப் பற்றிய வாழ்த்துப்பா உள்ளது. அப்பாடலில்

"வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்
வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன்
வாழ்க சுந்தர பாண்டியன் தென்னனே"

என இவனைப் பாடப்பட்டுள்ளது. தமிழ்பற்றும், வட மொழி அறிவும் உடைய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனது கல்வெட்டுக்கள் தமிழகம் முழுவதினிலும் காணலாம்.

மறைவு

இவன் தன் வழிவந்தவனான முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பவனிடம் 1267ல் ஆட்சியை ஒப்படைத்து விட்டு கி.பி. 1271 ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தான் என்பது வரலாறு.

நாணயவியல்

இவனது ஆட்சியில் 7 விதமான பெயர்களுடன் காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை, சுந்தரபாண்டியன், வீரபாண்டியன், சோணாடு கொண்டான், கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன், எல்லாம் தலையாயன், மற்றும் குலசேகரன் எனப் பெயர் பெறுகின்றன. இவற்றில் கச்சி வழங்கும் பெருமாள் என்று பெயர் பொறித்த நாணயங்கள் நாணயவியல் தந்தை வால்டர் எலியட் என்பவரால் அவரது நூலில் 145ஆவது படமாக வெளியிடப்பட்டுள்ளது. பொ.பி. 1260 - 1365 க்கும் இடைப்பட்ட காலங்களில் வெளியிடப்பட்ட இவற்றில் கச்சி வழங்கும் பெருமாள் என்று மூன்று வரிகளில் எழுதப்பட்டுளன. மற்றொரு வகைக்காசில் இரு கயல்களுக்கிடையில் சு என்னும் எழுத்தும் காணப்படுகின்றது. அடுத்து எல்லாம் தலையாயன் என்று பெயர் பொறித்த ஐந்து வகைக்காசுகள் கிடைத்துளன. இப்படி கிடைத்ததை கொண்டு அதிகளவு காசுகளின் வேறுபாடு அறிவதற்காக வேண்டுமென்றே இதைப்போல காசுகள் வெளியிடப்பட்டது என்பதை அறியலாம்.

அடுத்து கோதண்டராமன் என்று பெயர் பொறித்த நாணயங்கள் கிடைத்து உள்ளன. கோதண்டராமன் நாணயங்கள் பற்றி மாற்று கருத்துகள் இருந்த போதிலும் இம்மன்னனின் கல்வெட்டுகளில் இவன் பட்டப்பெயர் கோதண்டராமன் என்றிருப்பதைக் கொண்டு இவை முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் வெளியிடப்பட்டது என்பதை அறியலாம்.

(18) இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன்

இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1281 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் மகனான இவன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்திலேயே சோழ நாடு மற்றும் தொண்டை நாடு போன்றனவற்றின் பிரதிநிதியாக இருந்தவனாவான். "திருமகள்வளர்" எனத் தொடங்கும் இவனது மெய்க்கீர்த்திகள் "கொங்கு ஈழங்கொண்டு, கொடுவடுகு கோடழித்து" எனவும் பாடப்பட்டான் இம்மன்னன். விசயகண்ட கோபாலனின் சோழ நாடு மற்றும் ஈழ நாடு,கொங்கு நாடு போன்றனவற்றினை வென்ற பெருமையினை உடையவனும் ஆவான். பல்லவ மன்னனான இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனை வென்று கப்பம் கட்ட வைத்து தில்லையில் வீராபிடேகம் மற்றும் விசயாபிடேகம் போன்றனவற்றினையும் செய்தான். கொடுவடுகு வல்லான் என்பவனைவும் வென்று தில்லையில் உள்ள சிவகாமக் கோட்டத்தின் தென்புற நூற்றுக்கால் மண்டபத்தில் 1267 ஆம் ஆண்டளவில் வீராபிடேகம் செய்தான். அம்மண்டபம் 'வீரபாண்டியன் மண்டபம் என அழைக்கப்படுகின்றது.

ஈழ நாட்டில் போர் புரிந்து அங்கு ஒரு மன்னனைக் கொன்று ஒருவனுக்கு முடிசூட்டுவித்தான். திருகோணமலை, திருகூடமலை போன்ற இடங்களில் கயற்கொடி பொறித்தான். காவிக்களத்தில் சோழனுடன் போர் செய்தான். இவன் தனது தந்தையான முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆணைவழி ஆட்சி மற்றும் போர் யுக்திகளினை செய்திருந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவனது 23 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்துக் கல்வெட்டு புதுக்கோட்டையிலும் 28 ஆம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு நெல்லையில் உள்ள கல்லிடைக்குறிச்சியிலும் உள்ளன. கி.பி. 1281 ஆம் ஆண்டளவில் வீரமரணம் அடைந்தான் என்பது வரலாறு.

(19) சடையவர்மன் விக்கிரமன்:

இவன் காலத்தில் பாண்டிய நாடு வாணிபத்தில் சிறந்து விளங்கியது எனத் தெரிகிறது. மேற்கொண்டு இவனைப் பற்றிய விவரங்கள் காணப்படவில்லை.

(20) முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை அரசாண்ட பாண்டிய மன்னனாவான். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனை அடுத்து முடி சூடியவனான இவன் தன் இறப்பு வரை ஆட்சி புரிந்தான்.

மாறவர்மன் குலசேகரன் 'எம் மண்டலமும் கொண்டருளிய', 'கோனேரின்மை கொண்டான்', 'கொல்லங்கொண்டான்' என்ற விருதுகளை ஏற்றான். கேரளம், கொங்குநாடு, சோழமண்டலம், சிங்களம் ஆகிய நாடுகளை வெற்றிகொண்டான் என்று கல்வெட்டுகள் மூலம் அறிய வருகிறது. மூன்றாம் இராசேந்திரன் மற்றும் போசள இராமநாதனை கி.பி 1279 இல் வென்றான். சிங்களத்தில் உண்டான அரசியல் கலவரத்தை வாய்ப்பாக கொண்டு கி.பி 1284 இல் தனது படைத்தலைவன் ஆரியச் சக்கரவர்த்தி மூலம் சிங்களத்தின் மீது போர் தொடுத்தான். புத்தரின் பல் சின்னமொன்றை கைப்பற்றி வந்தான் கி.பி 1302-1310 காலத்தில் சிங்கள வேந்தன் மதுரைக்கு வந்து பாண்டியனுக்கு அடிபணிந்து அப்புனித சின்னத்தை மீட்டுச் சென்றான்.

மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மறைவிற்கு பிறகு அவனது இரு மகன்களான சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோரிடையே எழுந்த உரிமைச் சண்டையைப் பயன்படுத்தி தில்லி சுல்தான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

குலசேகரன் அரசவையில் தகியுத்தீன் அப்துர் ரகுமான் என்பவர் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல் பட்டினம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக அப்துல்லா வசாப் எனும் அரபிய வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் வருகை புரிந்த பயணி மார்க்கோ போலோ உலகின் புனிதம் வாய்ந்த நகராக மதுரையை குறிப்பிடுகிறார்.

(21) மாறவர்மன் விக்கிரம பாண்டியன்

மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268 முதல் 1281 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இராக்கள் நாயகன் என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றிருந்தான். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனது இளவலான இம்மன்னன் அவனின் ஆட்சிக்குத் துணையாட்சி புரிந்தான் என திருவெண்ணெய் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. 'திருமகள் செயமகள்','திருமலர் மாது' என இவனது மெய்க்கீர்த்திகள் தொடங்கும். தை மாதம் அஷ்டமி நாளில் பிறந்த இம்மன்னனது கல்வெட்டுக்கள் செங்கற்பட்டு, தென்னார்க்காடு போன்ற பகுதிகளில் காணலாம். சிவன், திருமால் கோயில்களிற்கு நாள் வழிபாடுகள் நடைபெற இறையிலி நிலங்களினை அளித்து தென்னார்க்காடு, திருநறுங் கொண்டையில் அமண்பள்ளி ஒன்றும் அமைத்தான். இப்பள்ளி நாற்பத்தெண்ணாயிரம் பெரும்பள்ளி என்ற பெயரினைப் பெற்றிருந்தது. தனது பிறந்த நாளில் தைத் திங்கள் திருநாளினை நடத்த இறையிலி நிலம் அளித்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(22) இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்

சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276 முதல் 1293 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்குத் துணையிருந்த இம்மன்னன் கருவூரினைத் தலைநகராகக்கொண்டு கொங்கு நாட்டில் ஆட்சி புரிந்தான். சேலம், கடப்பை, தென்னார்க்காடு போன்ற பகுதிகளினையும் ஆட்சி புரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.