பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

bookmark

நொண்டிச் சிந்து

நெஞ்சு பொறுக்கு திலையே! - இந்த
   நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
   அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
   மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்;
துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
   துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு)    1

மந்திர வாதி என்பார் - சொன்ன
   மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்,
யந்திர சூனி யங்கள் - இன்னும்
   எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே - ஜனம்
   தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்;
அந்த அரசியலை - இவர்
   அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார். (நெஞ்சு)    2

சிப்பாயைக் கண்டு அஞ்சுவார் - ஊர்ச்
   சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்,
துப்பாக்கி கொண்டு ஒருவன் - வெகு
   தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்,
அப்பால் எவனோ செல்வான் - அவன்
   ஆடையைக் கண்டுபயந் தெழுந்து நிற்பார்,
எப்போதும் கைகட்டுவார் - இவர்
   யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப்பார். (நெஞ்சு)    3

நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
   நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்,
கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
   கோடிஎன் றால் அது பெரிதா மோ?
ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்
   ஆறுதலை யென்றுமகன் சொல்லி விட்டால்
நெஞ்சு பிரிந்திடுவார் - பின்பு
   நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு)    4

சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்
   சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு
   கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்,
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்
   சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார்,
ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்
   அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடுவார். (நெஞ்சு)    5

நெஞ்சு பொறுக்கு திலையே - இதை
   நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே,
கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
   காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
   பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
துஞ்சி மடிகின் றாரே - இவர்
   துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே. (நெஞ்சு)    6

எண்ணிலா நோயுடையார் - இவர்
   எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தை கள்போல் - பிறர்
   காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்,
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
   நாலாயிரங் கோடி நயந்துநின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
   பொறியற்ற விலங்குகள்போல வாழ்வார். (நெஞ்சு)    7