பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய கப்பல், கடல் கலங்களின் வகைகள்

bookmark


தமிழர்கள் தங்கள் வணிகத்திற்காகவும், தினசரி பயன்பாட்டிற்காகவும் பல்வேறு கடல் மற்றும் கடல் கலங்களை பயன்படுத்தி வந்து உள்ளனர். அவைகள் பின்வருமாறு

1.    நாவாய் :-

வாய்நீரில் கிடக்கும் நாக்கு போல் நுனி குறுகி நீரில் ஓடும் கலத்தை நாவாய் என்றனர். இந்த நாவாய் வங்கம், கலம் என்னும் சொற்களாலும் குறிப்பிடப்பட்டுள்ளன. நாவாயின் தோற்றம் பற்றியும், அவை இருந்த துறைமுகங்கள் பற்றியும் சங்கப்பாடல்களில் குறிப்புகள் உள்ளன. இவற்றைத் தொகுத்து நோக்கும் போது தமிழக நாவாய் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்ள முடிகிறது.

நாவாய் என்பது கடலில் ஓடும் மரக்கலக் கப்பல்.

சங்க இலக்கியங்களில் இருந்து கிடைத்த தகவல்கள்:-

நாவாயில் வந்த வெள்ளைக் குதிரைகளும், வடதிசையிலிருந்து வந்த வளப்பொருள்களும் நீர்ப்பெயற்று என்னும் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டன.

சாலியூர் துறைமுகத்தில் நாவாய்கள் ஆடிக்கொண்டே நின்றன.

புகார் துறைமுகத்தில், யானை கட்டியிருக்கும் வெளிறு என்னும் கூடம் போல, அலைமோதும் கடலில் கூம்பில் கொடி பறக்கும் நாவாய்கள் பல நெருக்கமாக நின்றுகொண்டிருந்தன.

கரிகாலனின் முன்னோர் காற்றைக் கட்டுப்படுத்தி நாவாய் என்னும் பாய்மரக் கப்பலை ஓட்டி வாணிகம் செய்துவந்தனர்.

நாவாயின் தோற்றம்:-

நாவாயில் உள்ள கூம்பில் இதை என்னும் பாய்களைக் கயிற்றால் பிணித்துக் கட்டியிருப்பார்கள். புயலில் சில சமயங்களில் அந்தக் கயிறு அறுந்துபோவது உண்டு.

அவற்றில் நாட்டுக்கொடிகள் பறந்தன. சில சமயங்களில், கட்டுக்குள் நில்லாது நாவாய்கள் அசைவது உண்டு.

பன்னாட்டு நாவாய்

பன்னாட்டு நாவாய்கள் தமிழகத் துறைமுகங்களில் உலவின. வானவன் என்னும் சேரமன்னன் கடலில் நாவாய் ஓட்டும் போது பிற நாவாய்கள் செல்லக்கூடாது. (இது முசிறித் துறைமுகக் கட்டுப்பாடு)

2.வள்ளம்:-

பண்டையத் தமிழர்களால் பயன் படுத்தப்பட்ட வள்ளம் என்பது நீரில் பயணிக்க, மீன்பிடிக்கப் பயன்படும் ஒரு நீரூர்தி ஆகும். இது பாய்மரப் படகு, கப்பல் போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் சிறியது. உலகில் பல பாகங்களில் வள்ளம் அல்லது வள்ளத்தை ஒத்த நீரூர்திகள் மிக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் நிலப்பரப்புகளிலும் வள்ளம் பண்டைக் காலத்தில் இருந்து கட்டப்படும், பயன்படுத்தப்படும் ஒரு நீரூர்தி ஆகும்.

இதன் பாகங்கள் என்று சங்க இலக்கியங்களில் இருந்து அறியப் படுவன

(குறிப்பு : பின்வரும் கலைச்சொற்கள் ஈழத்தில் குருநகர் பகுதியில் பயன்படுத்தப்படுவன. தமிழ்நாட்டில் மற்றும் ஈழத்தின் பிற பகுதிகளில் இவை வேறுபடலாம்)

அணியம் - வள்ளத்தின் முன்பக்கம்

ஒட்டம் - படகின் நீளுக்கும் வங்குகளின் நுணியில் இணைக்கப்பட்டு இருக்கும் பலகை.

வங்கு - U வடிவில் படகின் அடிப்பாகத்தை உருவாக்கப் பயன்படும் திரட்சியான மரத்தில் வடிவமைக்கப்படும் பலகை.

கூத்துவாரி - படகின் நடுவில் குறுக்காக போடப்பட்டு இருக்கும் தடித்த பலகை. இதில் வட்டமாக வெட்டியெடுத்து அதற்குள்ளே பாய் மரக் கம்பை வைக்கலாம்.

பூவெச்சம் - பாய்மரக் கம்பின் அடியை தாங்கும் வண்ணம் வங்கில் ஏற்படுத்தப்பட்டு இருக்கும் குழி.

கடையல் - வள்ளத்தின் பின்பக்கம்

3. வங்கம் (நீரூர்தி):-

வங்கம் என்னும் சொல் பாய்மரக் கப்பலை உணர்த்தும் சொற்களில் ஒன்று. வங்கம் கடல்நீரைப் பிளந்துகொண்டு செல்லும்.

இதில் வெள்ளைத் துணியாலான இதை என்னும் பாய் கட்டப்பட்டிருக்கும். மருங்கூர்ப் பட்டினம் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த வங்கத்தின் கூம்பில் கடற்காக்கைகள் அமர்ந்து தன் இரையை உண்டதாம்.

அரிய பொருள்களை வங்கத்தில் கொண்டுவந்தார்களாம்.

இதே போல, சாவக நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே வங்கப் போக்குவரத்து இருந்தது.

ஆற்றில் வங்கம்

கங்கையாற்றில் உலவவும், கங்கையைக் கடக்கவும் வங்கம் பயன்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் நல்லூர் என்னும் ஊரின் ஆற்றுத் துறையில் வங்கம் கயிற்றால் பிணித்து நிறுத்தப்பட்டிருந்தது.

3. அம்பி - பயணிகள் சென்றுவர பயன்படுத்தப் பட்ட நீருர்தி

4.திமில் - பெரும்பாலும் மீன்பிடிக்கப் பயன்பட்டது.

தமிழர்களின் மேற்கண்ட கப்பல்கள் குறித்து வெளிநாட்டார் குறிப்புகள்

லெப்டிணன்ட் வாக்கர் என்ற ஆங்கிலேயர் கி.பி. 1811 இல் நமது கப்பல்களைக் கண்டு வியந்து பின்வருமாறு கூறினார். 'பிரிட்டிஷ் காரர்கள் கட்டிய கப்பல்களை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மராமத்துச் செய்து தீர வேண்டும். ஆனால் தமிழர் கட்டிய கப்பல்களுக்கு 50 ஆண்டானாலும் பழுது பார்க்கும் அவசியம் இல்லை."

இன்றைய தமிழ் மீனவர்கள் சிறு குறிப்பு:-

தமிழர் தாயகங்களான தமிழ்நாடும், தமிழீழமும் நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு இந்தியாவின் 13% கடற்கரையையும் (1076 கி.மீ.), தமிழீழம் இலங்கையின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ன. கடலில் உணவுக்காகவும் விற்பனைக்கும் மீன் பிடிப்பவர்களையும், அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் தமிழ் மீனவர்கள் எனலாம். தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கிய ஒரு கூறு.

தமிழ்நாடு கடற்கரை

தமிழ்நாடு, 1076 கிலொமீட்டர் நீள கடல்கரையை கொண்டு உள்ளது. மீன் பிடி தொழிலில், இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது.