பள்ளிபடைப் படலம் - 2317
தயரதன் உடலம் கொண்டு சரயு நதியை அடைதல்
2317.
மாவும், யானையும், வயங்கு தேர்களும்,
கோவும், நான் மறைக் குழுவும், முன் செல,
தேவிமாரொடும் கொண்டு, தெண் திரை
தாவு வார் புனல் சரயு எய்தினார்.
மாவும் - குதிரைகளும்; யானையும் - யானைகளும்; வயங்கு -
விளங்குகின்ற; தேர்களும் -; கோவும் - அரசர்களும்; நான்மறைக்
குழுவும் -நான்மறையாளர் கூட்டமும்; முன்செல - முன்னே செல்ல;
கொண்டு - (தயரதனதுபிரேதத்தைக்) கொண்டுசென்று; தேவிமாரொடும் -
(தயரதன்) மனைவிமாருடனே; தெண்திரைதாவு - தெள்ளிய அலைகள்
தாவுகின்ற; வார் புனல் - மிக்க தண்ணீரை உடைய; சரயுஎய்தினார் -
சரயு நதியை அடைந்தார்கள்.
தேவிமார் அறுபதினாயிரவர். “தேவிமாரை இவற்குரிமை செய்யும்
நாளில் செந்தழலில், ஆவிநீத்திர் என இருத்தி” (1915.) என்பது காண்க. 128
