பள்ளிபடைப் படலம் - 2318
ஈமப் பள்ளியில் தயரதனை ஏற்றிப் பரதனைக்
கடன் செய அழைத்தல்
2318.
எய்தி, நூலுளோர் மொழிந்த யாவையும்
செய்து, தீக் கலம் திருத்தி, செல்வனை,
வெய்தின் ஏற்றினார்; ‘வீர! நுந்தைபால்
பொய் இல் மாக் கடன் கழித்தி போந்து’ என்றார்.
(நான்மறைக் கேள்வியார்) எய்தி - (சரயு நதியை) அடைந்து; நூல்
உளோர்மொழிந்த யாவையும் செய்து- (ஸ்மிருதி) நூல்களை உடையோர்
சொல்லிய விதிகள் எல்லாம்செய்து முடித்து; தீக்கலம் திருத்தி -
தீச்சட்டியை ஒழுங்குபடுத்தி; செல்வனை -தயரதனை; வெய்தின் -
விரைவாக; ஏற்றினார் - (ஈமப்பள்ளியில்) ஏற்றிவைத்து;(பரதனை நோக்கி)
‘வீர! - வீரனே!; நுந்தைபால் - உன்தந்தையிடத்து; பொய்இல் மாக்கடன்-
(நீ செய்ய வேண்டிய ) வேதவழி பிறழாத பெருங்கடமையை; போந்து
கழித்தி - வந்து செய்வாயாக;’ என்றார் -.
பிறப்பு, இறப்புச் சடங்குகள் பற்றிக் கூறுவன ‘ஸ்மிருதி நூல்கள்’
எனப்படுதலின், அவற்றைஅறிந்தவரையே இங்கு ‘நூலுளோர்’ என்றார்
என்க. 129
