பல்லவர் காலத்து வரிகள்
தென்னை, பனை, பாக்கு ஆகிய மரங்களைப் பயிரிடும் உரிமை பெற அரசாங்க வரி விதிக்கப்பட்டது. கள் இறக்கவும், சாறு இறக்கவும், பனம்பாகு காய்ச்சவும், கடைகளில் பாக்கு விற்கவும் வரி விதிக்கப்பட்டது, கல்லால மரம் பயிரிட, சித்திரமூலம் என்னும் செங்கொடி பயிரிட, கரிசலாங்கண்ணி என்னும் மூலிகை பயிரிட உரிமை பெறக் கல்லாலக்காணம், செங்கொடிக்காணம், கண்ணிட்டுக் காணம் ஆகிய தொகைகள் அரசாங்க உரிமை பெறச் செலுத்தப்பட்டன. மருக்கிழுந்து பயிரிட மருக்கொழுந்துக் காணம், நீலோற்பலம், குவளை ஆகியவை நடுவதற்கு உரிமை பெற குவளை நடுவரி, விற்பனை செய்யக் குவளைக் காணம் ஆகியன அரசாங்கத்தால் பெறப்பட்டன. பிரம்மதேயம், தேவதானச் சிற்றூர்கள் இவ்வரிகளிலிருந்து விலக்குப் பெற்றன.
தொழில் வரிகள்:
ஆடு, மாடு ஆகிய காலநடைகளால் பிழைப்பவர், புரோகிதர், வேட்கோவர்(குயவர்), பலவகைக் கொல்லர், வண்ணார், ஆடைநெய்வோர், நூல் நூற்போர், வலைஞர், பனஞ்சாறு எடுப்போர், மணவீட்டார், ஆகிய தொழிலாளரும், பிறரும் அரசாங்கத்திற்கு வரி செலுத்தினர்.
