அளவைகளும் நாணயங்களும்

bookmark

நில அளவை:

பல்லவர் காலத்தைல் விளங்கிய நில அளவைகள் குழி, வேலி என்பன. மேலும் கலப்பை, நிவர்த்தனர், பட்டிகாபாடகம் என்பனவும் நில அளவைகளாக வழங்கின.

முகத்தலளவை:

முகத்தல் அளவைகளாகக் கருநாழி, நால்வாநாழி, மாநாய நாழி, பிழையாநாழி, நாராய(ண)நாழி என்பனவும் உழக்கு (விடேல் விடுகு உழக்கு), சிறிய அளவையான பிடி, சோடு, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் என்பனவும் பயன்பட்டன.

நிறுத்தலளவை:

கழஞ்சு மஞ்சாடி என்பன பொன் நிறுக்கும் அளவைகள்

நாணயங்கள்:

கி.பி. 300 பல்லவர் காலத்துக் கப்பல் பொறிக்கப்பட்ட நாணயம்

பல்லவர் காசுகள் செம்பாலும் வெள்ளியாலும் பொன்னாலும் செய்யப்பட்டவை. அவை நந்தி, பாய்மரக் கப்பல், சுவஸ்திக், கேள்விக்குரிய சங்கு, சக்கரம், வில், மீன், குடை, கோயில், குதிரை, சிங்கம் ஆகிய உருவங்களைப் பொறித்தும் வழங்கப்பட்டன.

நீர்ப்பாசன வசதிகள்:

காடுகளை அழித்து உழுவயல்களாகப் பல்லவர்கள் மாற்றியதால், அவர்களுக்குக் காடுவெட்டிகள் என்ற பெயரும் உண்டு. காடு வெட்டிகளான பல்லவர்கள் நாடு திருத்த நீர்ப்பாசன வசதிகள் நிரம்பச் செய்தனர். பல்லவ அரசர்களும், சிற்றரசர்களும், பொதுமக்களும் ஏரிகள், கூவல்கள்(கிணறுகள்), வாய்க்கால்கள், மதகுகள் அமைத்து நீர்ப்பாசன வசதிகளைச் செய்து வளம் பெருக்கினர்.

ஏரிகள்:

இராச தடாகம், திரளய தடாகம்(தென்னேரி), மகேந்திர தடாகம்(மகேந்திரவாடி ஏரி),சித்திரமேக தடாகம்(மாமண்டூர் ஏரி), பரமேசுவர தடாகம்(வரம் ஏரி), வைரமேகன் தடாகம்(உத்திரமேரூர் ஏரி), வாலிவடுகன் ஏரி, மாரிப்பிடுகன் ஏரி(திருச்சி ஆலம்பாக்கம்), வெள்ளேரி, தும்பான் ஏரி, மூன்றாம் நந்திவர்மன் காலத்தி அவனி நாராயண சதுர்வேதி மங்கலத்து ஏரி(காவேரிப்பாக்கத்து ஏரி, மருதநாடு ஏரி வந்த வாசிக் கூற்றம்), கனகவல்லி தடாகம்(வேலூர்க்கூற்றம்) ஆகியன பல்லவர் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகளாகும்.

கிணறுகளும், கால்வாய்களும்:

பல்லவர்கள் காலத்தில் ஏராளமான கிணறுகளும் கால்வாய்களும் வெட்டப்பட்டன. திருச்சிராப்பள்ளி திருவெள்ளறையில் தோண்டப்பட்ட கூவல் என்னும் மார்ப்பிடுகு பெருங்கிணறு முப்பத்தேழு சதுர அடிகொண்ட சுவஸ்திக் வடிவத்தில் விளங்குகிறது. அது இக்காலத்திய கிணறுகளுக்குச் சான்றாகும். மேலும் பாலாறு, காவிரி முதலிய ஆறுகளில் இருந்த நீரைக் கொண்டு செல்லும் கால்வாய்கள், ஆற்றுக்கால், நாட்டுக்கால் எனப்பெயர் பெற்றன. வைரமேகம் வாய்க்கால், பெரும்பிடுகு வாய்க்கால், கணபதிவாய்க்கால், ஸ்ரீதரவாய்க்கால் என்பன அவற்றுள் சில.

பஞ்சங்கள்:

பல்லவர் காலத்தில் இடைவிடாத பல போர்கள் காரணமாகப் பஞ்சங்களும் தோன்றின. இராசசிம்மன் காலத்துப் பஞ்சம் பற்றி அவைக்களத்துப் புலவர் தண்டி விளக்கமாக எடுத்துரைக்கிறார். மூன்றாம் நந்திவர்மன் காலத்துத் தெள்ளாற்றுப் போர் போன்ற போர்களின் காரணமாக உண்டான பஞ்சம் பற்றிப் பெரிய புராணம் கூறுகிறது.

நடுகல்:

பல்லவர் காலத்தில் ஒருவர் செய்த சிறப்பு மிக்க செயலுக்காகப் பாராட்டி அவர் பெயரால் கோவிலுக்குப் பொன் கொடுத்து விளக்கேற்றச் சொல்லுதலோ, வேறு நற்செயலோ நடைபெறச் செய்தல் வழக்கமாகும். சிறந்த செயல் செய்தோ, போரிலோ ஒருவர் இறந்துவிட்டால் அவர் நினைவாக வீரகற்கள் நடுவதும் சில இடங்களில் பள்ளிப்படைக் கோயில்கள் கட்டுவதும் அக்காலத்து வழக்கமாகும்.