பரத மாமன்னனது சரிதம்

bookmark

பரத மாமன்னனது சரிதம் யோகங்கள் யாவும் நிறைந்து இருக்கக்கூடிய வாசு தேவனிடத்தில் தன்னுடைய இதயத்தையும், மனதையும், எண்ணங்களையும் நிலைநிறுத்தி தியானம் செய்துகொண்டு சாளகிராம க்ஷேத்திரத்தில் வசித்து வந்த பரத மகாராஜனுக்கு சகல லோகங்களிலும் வியாபித்துக் கொண்டிருக்கக்கூடிய ஸ்ரீ விஷ்ணுவின் அனுக்கிரகத்தினால் மோட்சம் உண்டாகாமல் மீண்டும் மானிட குலத்தில் பிறப்பதற்கான பிறவி ஏற்பட்டது என்று கூறினார் பராசர முனிவர். மைத்ரேய முனிவருக்கு அவர் பிறவி எடுத்தனால் என்னென்ன செயல்களை செய்தார் என்பதையும், அந்த செயல்கள் மூலம் அவர் என்னென்ன பலன்களை அடைந்தார் என்பதையும் தாங்கள் தான் எனக்கு விளக்கமாகவும், தெளிவாகவும் எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டினார். புன்னகை செய்த வண்ணமாக பராசர முனிவரும் நிகழ்ந்து முடிந்த நிகழ்வுகளையும், அந்த நிகழ்வுகளினால் நிகழ இருந்ததையும் எடுத்துரைக்க துவங்குகிறார். காலம் என்பது பரமனின் கைவசத்தில் சுழன்று கொண்டிருப்பது போல சூழலும் ஆட்சி என்பது இன்றும் மாறாமல் இருக்கும். ஆனால் சுழலும் வேகமும், சூழலில் இருக்கக்கூடிய விசைகளும் பலவிதமான ரகசியங்களையும், வினோதமான செயல்பாடுகளையும் தன்னகத்தே ஒருங்கே இணைத்து இருப்பதுபோல பரத மகாராஜன் எம்பெருமானின் திருவடிகளை எண்ணியபடியே பல காலங்கள் தியானம் செய்த வண்ணமாக சாளக் கிராமத்திலேயே வசித்து வந்து கொண்டிருந்தார். குணத்திலும் உத்தமனாக இருந்து வந்தார். பலருடைய மனதில் உயர்ந்தவனாக திகழ்ந்தார். அவர் சொப்பனம் மத்தியம் உட்பட சகல அவஸ்தைகளிலும் யக்ஞேச, அச்சுத கோவிந்த, மாதவ, அநந்த, கேசவ, விஷ்ணோ ஹ்ருஷிகேசா வாசுதேவா, உனக்குத் தண்டம் சமர்ப்பிக்கிறேன்! என்பதை உச்சரித்துக் கொண்டிருந்தாரேயல்லாது வேறொன்றையும் உச்சரிக்கவில்லை. சகல லோக நாயகனை வழிபடுவதற்காக சமித்து புஷ்பம் தருப்பை முதலியவற்றை சேகரிப்பதை தவிர வேறு எந்தவொரு செயலையும் அவர் செய்ததில்லை. இவ்விதமாக பரதர் சுகபோகங்களில் நாட்டமும், விருப்பமும், பற்றும் இல்லாமல் யோகம் தவம் செய்து கொள்வதிலேயே தன்னுடைய முழு கவனத்தையும், ஆர்வத்தையும் கொண்டிருந்தார். பல காலங்களாக அவருடைய வாழ்க்கையில் யோகம் நிறைந்து காணப்பட்டது. தொன்றுதொட்டு முதலான காலம் என்பது பலவிதமான மாறுதல்களையும், மாறுபாடுகளையும் உள்ளடக்கியது அல்லவா! அவருடைய வாழ்க்கையிலும் மாறுதல்களை ஏற்படுத்தும் விதமாக காலங்கள் சில மாறுபாடுகளையும் ஏற்படுத்தியது. தன்னுடைய அன்றாட பணிகளை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் மகாநதியில் நீராடி செல்வதற்காகவும், செய்யவேண்டிய சில சடங்குகளை செய்வதற்காகவும் நதியின் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது கருவுற்றிருக்கும் மானானது நீர் அருந்துவதற்காக தன்னந்தனியாக நதியின் அருகில் நின்று கொண்டிருந்தது. நீர் அருந்திக் கொண்டிருந்த அந்த வேலையில் எங்கேயோ இருக்கும் சிங்கத்தின் கர்ஜனை குரல் கேட்டது. கர்ஜனை குரலைக் கேட்டதும் மானானது மிகவும் அச்சம் கொண்டு நதியின் உயரமான கரையின் மீது ஏறி சென்றது. அப்பொழுது அதனுடைய கர்ப்பமானது நதி நீரில் விழுந்து அலைகளினால் மிதந்து பரதரின் அருகில் வந்தது. தனக்கு அருகில் சிறிய மான்குட்டி மிதந்து வருவதை பார்த்ததும் அதனிடத்தில் இரக்கம் கொண்டு அந்த மானை தன்னுடைய கைகளால் எடுத்துக் கொண்டார். தனது வயிற்றில் இருந்த கருவானது விழுந்து விட்டது என்பதை அறிந்த தாய் மானானது மிகுந்த துயரம் கொண்டு அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் நதியின் மிக உயரமான கரையின் மீது ஏறி கீழே விழுந்து இறந்தது. சிறிது நேரத்தில் தாய் மானும் ரத்த வெள்ளத்தில் இறந்து மிதந்து வருவதை பரதர் கண்டார். நிகழ்ந்தது என்னவென்று யூகித்துக் கொண்டார் பரதர். பின்பு தாய் மான் இல்லாத அந்த சின்ன சிறு மான்குட்டியை தனியே விடுவதற்கு மனமில்லாமல் அதை தன்னுடனே தான் வசித்துக் கொண்டு இருக்கக்கூடிய ஆசிரமத்திற்கு எடுத்து வந்தார். தன்னுடன் எடுத்து வந்த அந்த மான்குட்டியை மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் வளர்த்து வந்தார். அவருடைய அன்பிலும் அரவணைப்பிலும் மான்குட்டியானது வளர்ந்து வரத் துவங்கியது. ஆசிரமத்தின் அருகாமையில் இருக்கக்கூடிய இளம் புற்களை மேய்ந்துக் கொண்டு தனக்கான உணவினை உண்டு வளர்ந்து வந்தது. புலி, சிங்கம் முதலிய விலங்குகளின் ஒலியை கேட்டால் அல்லது அதனுடைய நடமாட்டங்கள் அறிந்துகொண்டால் மிகுந்த பயம் கொண்டு ஆசிரமத்திற்கு மிகுந்த வேகத்துடன் ஓடிவந்து ஒளிந்துகொள்ளும். இவ்விதமாக பகல் பொழுதில் புறப்பட்டு மேய்ந்துவிட்டு, இரவுப்பொழுதில் ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தங்கி கொண்டிருந்தது. சிறு வயதான அந்த மான்குட்டி விளையாடுவதையும், அதனுடைய செயல்பாடுகளையும் கண்டு பரதர் அதனிடத்தில் பற்றும், பாசமும் கொள்ளத் துவங்கினார். ராஜ்ஜியம் மக்கள் முதலிய பந்த பாசங்கள் யாவற்றையும் விட்டு யோக நிஷ்டையில் இருந்த அந்த முனிவர் மான் மீது மிகுந்த அன்பும், அபிமானமும் கொண்டிருந்தார். மான்குட்டியானது எப்பொழுதும் வருகின்ற நேரத்திற்கு வரவில்லை என்றாலும் அல்லது ஆசிரமத்தின் அருகில் அதனுடைய நடமாட்டங்கள் இல்லாமல் இருந்தாலும் பரதர் மிகுந்த அச்சம் கொள்ளத் துவங்கினார். அதாவது தான் வளர்த்து வந்த அந்த மானானது புலிக்கு இரையானதா? அல்லது பெண் நாய்க்கு இரையானதா? இன்னமும் காணவில்லையே என்ன செய்வேன் என்று வருத்தம் கொள்ள துவங்கினார். பின்பு அந்த மான் விளையாடிய இடங்களுக்கு சென்று எனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திய அந்தமான் எங்கே போயிற்று என்பது தெரியவில்லையே... எனது அருகில் வந்து தனது கொம்பினால் என் உடம்பை உரசி எனக்கு மகிழ்ச்சியை உருவாக்குமே, மீண்டும் எனக்கு அந்த மகிழ்ச்சி கிடைக்குமா? இப்பொழுது என்ன செய்வது என்று புரியவில்லையே... பற்களே சரியாக முளைக்காத அந்தமான் சரியாக கடிக்க இயலாமல் சிறிது சிறிதாக மென்று மேய்ந்து கொண்டிருப்பதை காண்பேனே மீண்டும் அந்த நிகழ்வை காண முடியுமா? என்பது போல பலவிதங்களில் நினைத்து வருத்தம் கொள்ள துவங்கினார். அந்தமான் ஆசிரமத்திற்கு வந்ததும் அதை கண்டு அவர் அடையும் ஆனந்தமும், மகிழ்ச்சியும் என்பது எல்லையில்லாத அளவில் இருந்தது. இவ்விதமாக அந்த மான்குட்டியின் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்டு இருந்ததால் ராஜ போகங்களைத் துறந்த அவருக்கு சமாதி நிஷ்டை என்பது கலைய துவங்கியது. இவ்வாறு சென்று கொண்டிருந்த அவருடைய வாழ்க்கையில் காலம் மற்றொரு மாற்றத்தை உருவாக்கியது. பூமியில் தோன்றிய எவராக இருந்தாலும் அவருக்கென்று ஒரு அந்திம காலம் என்பது இருக்கும் அல்லவா! அந்த காலமும் அவருக்கு ஏற்படத் துவங்கியது. அதாவது மரணம். அவருடைய அந்த மரண காலத்தில் அந்த மானானது தன்னிடத்தில் மிகுந்த அன்பு கொண்டு இருக்கக்கூடிய தனது தந்தையை மகன் எவ்விதம் நோக்குவானோ அந்த விதத்தில் நோக்கி அவரின் அருகில் வந்து அவரை பார்த்த வண்ணமாக இருந்தது. பரதரும் தன்னுடைய விழிகளில் நீர் ததும்ப மகனை தந்தை பிரிந்து செல்லும் பொழுது எவ்வளவு துன்பத்தை அனுபவிப்பாரோ... அதே துன்பத்துடன் அந்த மானை பார்த்த வண்ணமாக தன்னுடைய பிராணனை வெளியே விட்டார்.