சாமவேத விருட்சத்தின் சாகா பேதங்கள்

bookmark

சாமவேத விருட்சத்தின் சாகா பேதங்கள் மைத்ரேய முனிவரை நோக்கி சாமவேத விருட்சத்தின் சாகா பேதங்களை பற்றி அறிந்து கொள்ள விருப்பம் உண்டா? என கேட்டார் பராசர முனிவர். குருநாதர் கூறும் பொழுது அதை வேண்டாம் என்று அடியேன் உரைப்பேனா. சொல்வதற்கு அரிய பலவிதமான, பல யுகங்களுக்கு முன்னர் நிகழ்ந்த பல விஷயங்களை அறிந்து கொள்ள வாய்ப்புகள் கிடைத்து இருக்கும் பொழுது அந்த வாய்ப்பை தவற விடுவதற்கு ஆசை உண்டாகுமா? அதனால் தாங்கள் அறிந்த தகவல்களை அடியேனுக்கு கூறினால் நானும் பல தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்வேன் என்று கூறினார் மைத்ரேய முனிவர். இதை கேட்டதும் பராசர முனிவரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அதாவது தாம் அறிந்த தகவல்களை எப்பொழுதும் தம்மோடு வைத்துக்கொள்ளாமல் தம்மோடு இருப்பவர்களுக்கும், இனிமேல் வரப்போகின்றவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கடமையாகும். இன்றைய ஒவ்வொரு நிகழ்வும் நாளைய உலகத்தை மாற்றுவதற்கும், புரிந்து கொள்வதற்கும் ஒரு ஏதுவான நிகழ்வாக இருக்கும் என்று கூறினார். பராசர முனிவர் மைத்ரேயரை நோக்கி வியாசரது சீடரான ஜைமினியானவர் தம்முடைய குமாரரான சுமந்து என்பவருக்கு ஒரு சம்ஹிதையை (தொகுப்பு - மந்திரங்கள் (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்) உபதேசித்தார். அவரும் தம்முடைய மகனான சுத்துவா என்பவருக்கு அதை உபதேசித்தார். பிறகு அந்தச் சுத்துவாவின் மகனான சுகர்மா என்பவர் தம் தந்தையிடம் தாம் கற்ற அந்த ஜைமினி சம்ஹிதையை (தொகுப்பு) ஓராயிரம் பிரிவுகளாகப் பிரித்துத் தமது மாணவருக்கும் கொடுத்தார். கௌசல்யர் என்னும் பெயர் பெற்றிருந்த அந்த ஹிரண்யநாபருக்கு வடநாட்டார் ஐநூறு பேர், சாம சாகையை ஓதும் சீடர்களானார்கள். அவர்கள் ஐநூறு சாகைகளை ஓதிக்கொண்டு ஒரு காலத்தில் கீழ்த்திசையில் இருந்ததால் கீழ்த்திசை சாமகர் என்று வழங்கப்பட்டனர். அந்த பௌஷ்பிஞ்சி என்பவருக்கும் லோகாக்ஷி கௌமுதி, கக்ஷீவான் லாங்கலி முதலிய சீடர்கள் இருந்தனர். அவர்கள் தாங்கள் ஓதிய சங்கிதைகளைப் (வேதத்தின் ஒரு பகுதி) பலவாக விரிவுரை செய்தனர். முன்னே சொன்ன ஹிரண்யநாபருக்கு சீடர்களில் ஒருவரான கிருதநாமா என்பவர் இருபத்து நான்கு சங்கிதைகளைத் தமது மாணவருக்கு ஓதுவித்தார். அவர்களும் இந்தச் சாம வேதத்தை மிகவும் விரிவுப்படுத்தினர். இவ்விதமாக சாமவேத சாகைகளில் பல பிரிவுகள் உண்டாயின. இனி அதர்வண வேதத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய பிரிவுகளையும், விரிவினையும் பற்றி கூறுகின்றோம் அதையும் பொறுமையுடன் கேட்பாயாக. வேதவியாச முனிவரிடம் அதர்வண வேதத்தைக் கற்றறிந்த சுமந்து என்ற முனிவர், தாம் கற்றறிந்த அதர்வண வேதத்தைத் தமது சீடரான கபந்தர் என்பவரிடம் வழங்கினார். அந்த கபந்த முனிவர் தம்மிடம் கிடைத்த அந்த வேதத்தை இரண்டு பிரிவுகளாக்கி தேவதரிசர், பத்தியர் என்ற சீடருக்கு வழங்கினார். அந்தத் தேவதரிசருக்கு, மேதன் பிரமபலி, சௌல்கா யனிபிப்பலாதன் என்ற நான்கு மாணவர்கள் இருந்தனர். அவர்கள் தேவதரிசர் செய்த நான்கு சங்கிதைகளையும் முறையே ஓதிவந்தனர். பத்தியருக்கு ஜாபாலி, குமுதாதி, சௌனகர் என்ற மூன்று மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் தமது ஆசிரியர் பிரித்த மூன்று சங்கிதைகளை பலரும் அறிந்து கொள்ளும் வகையில் மேலும் பல சங்கிதைகளாக பிரித்து வழங்கினார். அந்த சௌனகர் என்பவர் தம்முடைய சங்கிதையை இரண்டாகச் செய்து பப்புரு என்பவருக்கும், சைந்தவர் என்பவருக்கும் வழங்கினார். சைந்தவரின் சீடரான முஞ்சிசேர் என்பவர் தாம் பெற்ற சங்கிதைகளை இரண்டாகப் பிரித்தார். அந்த சங்கிதைகளில் முக்கியமான பாகங்கள் ஐந்தாகும். அவை நக்ஷத்திர கல்ப்பம், வேத கல்ப்பம், சங்கீதா கல்ப்பம், ஆங்கிரச கல்ப்பம், சாந்தி கல்ப்பம் என்பனவாகும். நட்சத்திர கல்பம் என்பது நக்ஷத்திராதிகளுடைய சொரூப குணாதிகளை விவரிப்பதாகும். வேதகல்ப்பமாவது, பிரமத்துவம் முதலிய புரோகித காரியங்களைத் தெரிவிப்பதாகும். சங்கிதா கல்ப்பம் என்பது மந்திரங்களின் ஏற்பாட்டை உணர்த்துவது. ஆங்கிரச கல்ப்பம் ஸ்தம்பனமோஹன மாரணாதிகளான அபிசாரங்களைக் காட்டுவது. யானை குதிரை முதலியவை பற்றிய பதினெட்டு சாந்திகளை விதிப்பது-சாந்தி கல்ப்பமாகும். இவைகளே அதர்வண வேதத்தில் சிறப்பானவை. இவ்விதமாக நான்கு வேதங்களின் விகற்பங்களை யான் உமக்கு கூறியிருக்கின்றேன் என்றார் பராசர முனிவர்.