பரசுராமப் படலம் - 1394

bookmark

தயரதன் பரதனைக் கேகய நாட்டிற்கு அனுப்புதல் ((1394-1395))

தசரதன். பரதனைக் கேகய நாட்டிற்கு அனுப்பல்
 
1394.    

நண்ணினர். இன்பத்து வைகும் நாளிடை.
மண்ணுறு முரசு இனம் வயங்கு தானையான்.
அண்ணல். அப் பரதனை நோக்கி. ஆண்தகை.
எண்ண அருந் தகையது ஓர் பொருள் இயம்புவான்:
 
நண்ணினர்    - (யாவரும்   அயோத்தியை)   அடைந்தவர்களாய்;
இன்பத்து  வைகும்  நாளிடை - இன்பத்தில் திளைக்கும் நாளில் (ஒரு
நாள்); ஆண்தகை - ஆண்மைப் பண்புகள்  நிறைந்தவனும்;  மண்ணுறு
முரசு  இனம்   வயங்கு  தானையான்  -  மார்ச்சனை  பொருந்திய
பேரிகைகளின்   கூட்டம்   விளங்குகின்ற   சேனையையுடையவனுமான
தயரதன்;  அண்ணல்   அப்பரதனை  நோக்கி  -   பெருமைக்குரிய
அப்பரதனைப்  பார்த்து;   எண்ணருந்  தகையது  ஓர்  பொருள் -
யாவரும் எண்ணாத ஒரு பொருளை; இயம்புவான் - சொல்லலானான்.

மார்ச்சனை:       தோற்கருவிகள்      சிலவற்றுள்      தக்கவாறு
ஒலியெழும்புதற்கேற்ப  அடிக்கும்  இடத்தைத்  தகுதியாக  அமைத்தற்கு
உதவுவது.  “அண்ணல் அப்பரதன்” எனும்  தொடரில்  அடைமொழிகள்
பரதன் மாட்டுக் கவிஞர் பிரானுக்குரிய  மதிப்பினைக்  குறித்து  நின்றன.
இராமனுக்குப்  பட்டம் சூட்ட வேண்டும்;  அதற்குப்  பரதன்  தடையாய்
இருத்தல்கூடும்   என்று    தயரதன்   எண்ணியிருக்கலாம்   என்பதை.
ஒருவாறு  உய்த்துணருமாறு. “எண்ணருந்தகையது  ஓர்பொருள்”  எனும்
தொடரைக் கவிஞர் பிரான் அமைத்தார் எனக் கருதலாம்.          46